பொது செய்தி

தமிழ்நாடு

அடாத மழையிலும் விடாத சினிமா!

Added : பிப் 14, 2020
Advertisement

எங்கள் ஊர், கிராமமும் இல்லாத, பெரிய நகரமும் இல்லாத சிற்றுார். 40 ஆண்டுகளுக்கு முன், ஊரின் மொத்த மக்கள் தொகையே, 50 ஆயிரத்திற்குள் தான் இருக்கும். மக்களின் ஒரே பொழுதுபோக்கு, ஆண்டுதோறும் மே மாதம், 10 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழா மட்டுமே. ஊரில், ஜெயலட்சுமி, லட்சுமி, புவனேஸ்வரி என்ற பெயரில், மூன்று சினிமா தியேட்டர்கள் உண்டு. ஒரு காட்சிக்கு, 500 பேர் வரை படம் பார்க்கும் அளவுள்ள சிறிய தியேட்டர்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெய்சங்கர் படங்களின் வரவு, அதிகம் இருந்த காலகட்டம் அது. அப்போது எனக்கு, 3 வயது இருக்கும்; வீட்டின் கடைக்குட்டி நான்.அப்போதெல்லாம், 5 வயதான பிறகு தான், பள்ளியில் சேர்க்கும் வழக்கம் இருந்தது. அண்ணன்கள் மற்றும் அக்காக்கள் பள்ளிக்கு சென்று விட, நான் மட்டும் அம்மாவுக்கு, 'துணை'யாக இருப்பேன். அவரது முந்தானையை பிடித்தபடி, அவர் சொல்லும் சின்ன சின்ன வேலைகளை செய்தபடி அலைந்து கொண்டிருப்பேன்.

சில சமயம், மதிய வேளையில் அடுத்த வீட்டு பெண்களுடன் அம்மா, சினிமாவுக்கு கிளம்புவார். அவர்களோடு நானும் ஒட்டிக் கொள்வேன். தியேட்டர் வாசல் வரை, என்னை நடத்தி செல்லும் அம்மா, உள்ளே நுழைந்ததும், இடுப்பில் துாக்கி வைத்து கொள்வார். சிறு குழந்தைகளுக்கு, 'டிக்கெட்' வாங்க வேண்டாமே என்பதற்காக.ஒருமுறை, எனக்கு டிக்கெட் வாங்கியே ஆக வேண்டும் என்று, நான் அடம்பிடிக்க, டிக்கெட் கவுன்டரில் இருந்தவரும் வற்புறுத்த, என் முதுகில் இரண்டு சாத்து சாத்தி, டிக்கெட் வாங்கினார், அம்மா.

படம் பெயரோ, நடிப்பவர்கள் யார் என்றோ எதுவும் தெரியாது. ஆனாலும், பாதி துாக்கமும், விழிப்புமாக படம் பார்த்து திரும்புவேன்.அப்போது துவங்கிய சினிமா பார்க்கும் ஆசை, நான் வளர வளர, என்னுடனே வளர்ந்தது. பள்ளியின் சேர்ந்த பிறகும், விடுமுறை நாட்களில், சினிமா பார்க்க செல்வதுண்டு. அம்மாவுடன் தமிழ் படம் என்றால், அக்கா மற்றும் அண்ணன்களுடன் ஆங்கில படத்திற்கு செல்வது வழக்கமாயிற்று.கிளியோபாட்ரா, பென்ஹர், 10 கமாண்ட்மென்ட்ஸ் போன்ற படங்களை, அப்போது பார்த்தது, பசுமரத்தாணி போல இன்றும் நினைவில் உள்ளது.

கிளியோபாட்ரா ஆங்கில படத்திற்கு எக்கச்சக்க கூட்டம். ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். திடீரென, 'பாம்பு... பாம்பு' என்று யாரோ அலற, மொத்த கூட்டமும், சிதறி ஓடியது.டிக்கெட் கவுன்டருக்குள் பயந்தவாறே நின்றிருந்த ஊழியரிடம், டிக்கெட் வாங்கி வந்து விட்டான், என் சின்ன அண்ணன்.அங்கும், இங்கும் பாம்பை தேடிய கூட்டம், கடைசியில், பாம்பும் இல்லை, ஒன்றும் இல்லை என்று கூறியபடி, டிக்கெட் கவுன்டர் முன் சூழ்ந்தது. நாங்கள் உள்ளே சென்று அமர்ந்த பிறகு, கூட்டத்தில் டிக்கெட் எடுக்க, அண்ணன் செய்த, 'டிரிக்' என்பது தெரிந்தது.

அது மட்டுமா... பள்ளித் தோழியருக்கு தீபாவளி, பொங்கல் வாழ்த்து அனுப்பும் போது, சினிமா பெயர்களையே வைத்து, கடிதம் எழுதுவோம். அதில், நிறைய படங்களின் பெயர்களை பயன்படுத்தி இருப்பது, நானாகத் தான் இருக்கும். மேலும், ஒரு பாடலை குறிப்பிட்டு, எந்த படத்தில் இடம் பெறுகிறது என்று கேட்டாலும், முதல் எழுத்தை சொல்லி, படத்தின் பெயரை சொல்ல சொன்னாலோ, 'பட்'டென்று சொல்லி, பரிசை தட்டிச் சென்று விடுவேன். ஒருமுறை, வகுப்பில் ஆசிரியை, பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்க, பதில் தெரியாமல் விழித்தேன். உடனே, ஆசிரியை, ஒரு நடிகரின் பெயரை குறிப்பிட்டு, அவர் நடித்த படம் எது என கேட்க, 'டக்'கென்று பதில் சொல்லி விட்டேன்.

'சினிமா மீதிருக்கும் கவனத்தை, பாடத்திலும் கொஞ்சம் வை...' என்று கூறி, தலையில், 'நங்'கென்று ஆசிரியை குட்டினார்.இன்னொரு முறை, விளையாட்டு போட்டி நடந்த போது, ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்ததற்கு, ஆசிரியை கண்டிக்க, 'சினிமா சம்பந்தமாக போட்டி வையுங்க, டீச்சர். நான் தான் ஜெயிப்பேன்...' என்று கூறி, ஆசிரியையிடம் இன்னொரு முறை, 'நொங்கு' வாங்கினேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பொதுத்தேர்வு முறை இருந்தது. பள்ளி, டியூஷன் என்று பரபரத்திருந்த காலம். ஐப்பசி மாத அடை மழை காலம். சனிக்கிழமை அரை நாள் பள்ளி நேரம் இருக்க, ஞாயிறு விடுமுறை.திங்கட்கிழமை முதல், பள்ளி மற்றும் டியூஷன் செல்ல வேண்டும். டெஸ்ட், ரிவிஷன் என்று, 'டைட் ஷெட்யூல்' இருக்கும். அதன் பின் இரண்டு மாதத்தில், அரையாண்டு தேர்வு வந்து விடும். சினிமா பார்த்து, ரொம்ப நாளாகி விட்டது. 'இப்போது விட்டால், மூன்று, நான்கு மாதத்துக்கு போக முடியாதே...' என, நினைத்தேன். ஏதாவது ஒரு படத்திற்கு போயே ஆக வேண்டும் என்ற ஆசை விதை விழுந்து, கிளை பரப்பி, மரமாகி விட்டது.

மெதுவாக அம்மாவிடம், 'நாம் சினிமாவுக்கு போகலாமா...' என்று அடி போட்டேன். 'மழை இல்லைன்னா போகலாம்...' என்றார். என்னிடம் ஒரு கெட்ட பழக்கம்... ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால், அதை செய்தே ஆக வேண்டும்; தள்ளிப் போடுவதோ, விட்டு விலகுவதோ, என் அகராதியிலேயே இல்லை. ஞாயிறு காலை முதலே, என்னை உற்சாகம் தொற்றிக் கொண்டது. வீட்டுப் பாடம் எழுதுவது, சீருடையை, 'அயர்ன்' செய்வது என்று, பல வேலைகளை, 'மளமள'வென முடித்தேன்.

மதியம் வரை தௌிவாக இருந்த வானம், அதன் பின் கறுத்து, மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்தது. வீட்டிலிருந்து, 0.5 கி.மீ.,யில் இருந்தது, அந்த தியேட்டர். மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு இடையே, ஒவ்வொரு காட்சி முடிந்ததும், 'ஸ்பீக்கரில்' சினிமா பாடல்களை ஒலிபரப்புவர். பாடலை நிறுத்தி விட்டால், அடுத்த காட்சி ஆரம்பித்து விட்டது என, புரிந்து கொள்ளலாம். இந்த பாடல் ஒலி, எங்கள் வீடு வரை கேட்கும்.மாலை, 5:30 மணிக்கு, பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. மழையோ சிறது குறைவதும், மீண்டும் அடித்து பெய்வதுமாக போக்குக் காட்டி கொண்டிருந்தது. சற்று நேரத்தில், தியேட்டரில் பாடல் ஒலிபரப்புவது நின்று விட்டது.

எனக்கோ, அழுகையும், மழை மீது ஆத்திரமும் வந்தது. வெளியில் மழை கொட்ட, என் கண்களிலிருந்து, கண்ணீர் அருவியாக கொட்ட ஆரம்பித்தது. நான் அழுதால், என் அம்மா நெஞ்சில், உதிரம் கொட்டும். இந்த பலவீனத்தை புரிந்து நான், மேலும் சத்தமாக அழ ஆரம்பித்தேன்.சட்டென்று அம்மா, புடவை மாற்றி, குளிருக்கு சால்வை போர்த்தியபடி, குடை எடுத்து கிளம்பினார். என்னையும் உடை மாற்றி வர சொல்லி, வாசலுக்கு சென்றார். அவசர அவசரமாக உடை மாற்றி குடைக்குள் ஐக்கியமானேன். தியேட்டரை அடைந்து, டிக்கெட் கவுன்டர் முன் போய் நின்றோம். ஒரு ஈ, காக்கை கூட இல்லை.

'ஏம்மா... இந்த மழையில வந்திருக்கீங்க... நாளைக்கு வரக் கூடாதா. மொத்தமே, 50 பேருக்கும் குறைவாகத் தான் வந்திருக்காங்க; படமும் ஆரம்பித்து விட்டது...' என்றார், டிக்கெட் கவுன்டரில் இருந்த ஊழியர்.'காசு கொடுத்தா, டிக்கெட் கொடுக்க வேண்டியது தானே...' என்று மனதிற்குள் நினைத்து, அம்மாவை அவசரப்படுத்தினேன். அவரும், இரண்டு டிக்கெட் வாங்கினார்.

வழக்கமாக, 'பால்கனி' பிரிவு என்றாலே, கட்டணம் அதிகம் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பார்க்கும் இடம் என்று தானே அர்த்தம். ஆனால், இந்த தியேட்டரில் பால்கனி முழுக்க முழுக்க, பெண்களுக்கானது. நீள சிமென்ட் பெஞ்சுகள் அமைத்திருப்பர்; சாய்ந்து கொள்ள முடியாது. கடைசி பெஞ்ச் என்றால், சுவரில் சாய்ந்து கொள்ள முடியும். அதற்காகவே, அந்த இருக்கைக்கு பெண்கள் முண்டி அடிப்பர்.நாங்கள் உள்ளே நுழைந்து, இருட்டில் தட்டுத் தடுமாறி, ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். திரையில், வீராவேசமாக பேசிக் கொண்டிருந்தார், கதாநாயகி. அந்த வெளிச்சத்தில் சுற்றிலும் நோட்டமிட, 10 - 15 பெண்கள் தான் இருந்திருப்பர். அவர்களும், 'ஹாயாக' பெஞ்சில் காலை நீட்டியபடியும், 'ரங்கநாதர் ஸ்டைலில்' படுத்த படியும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் என் அம்மாவும், ஒரு பெஞ்சில் படுத்துக் கொண்டார்.

நான் மட்டும், திரையில் திட்டு திட்டாக வரிகள் ஓடிய அந்த கறுப்பு - வெள்ளை பழைய படத்தை ரசித்து பார்க்க ஆரம்பித்தேன்.படம் முடிந்து வெளியே வந்த போதும், மழை விடவில்லை; தெரு விளக்குகள் எரியவில்லை. இருட்டில், தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தோம்.வீட்டிற்குள் நுழைந்ததும், திண்ணையில் அமர்ந்திருந்த அப்பாவிடம், நானும், அம்மாவும் வாங்கிய திட்டுகள் இருக்கிறதே...நான், பள்ளி இறுதி வகுப்பு முடித்து, கல்லுாரியில் படிக்கும் வரை, என் உடன்பிறப்புகள், 'அடாத மழையிலும் விடாது, பழைய படத்தை பார்த்தவள் இவள்' என்று, அந்த சம்பவத்தை சொல்லி சொல்லி வெறுப்பேற்றுவர்.

சரி, அப்படி என்ன படம் தான் பார்த்தேன் என்று கேட்கிறீர்களா... ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற மாயாஜால படம் தான் அது; எம்.ஜி.ஆர்., மனைவி வி.என்.ஜானகி நடித்தது. சிறு வயதில் எனக்கு இருந்த சினிமா ஆசையை இப்போது நினைத்தாலும், எனக்கு சிரிப்பு வருகிறது; உங்களுக்கும் வரும்; சிரித்து கொள்ளுங்கள்! என்.செந்தமிழ்வாணிsel.dharam@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X