சென்னையில் கொசு உற்பத்தி அமோகம்; தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி மெத்தனம்| Dinamalar

தமிழ்நாடு

சென்னையில் கொசு உற்பத்தி அமோகம்; தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி மெத்தனம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 14, 2020
Share
 சென்னையில் கொசு உற்பத்தி அமோகம்; தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி மெத்தனம்

சென்னை : சென்னையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசு தொல்லையால், 'மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு' உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளித்தாலும், தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது.

பனிக்காலம் முடியும் தருவாயில் உள்ளதாலும், கோடைக்காலம் துவங்கியுள்ளதாலும், பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில், இரவிலும் வெப்பம் அதிகரித்து, கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.இரவில் போர்த்தி துாங்க முடியாமல், சென்னைவாசிகள் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, பகலிலும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கொசுக்கடி அதிகரித்துள்ளது.

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள், நிரம்பி வழியும் மாநகராட்சி குப்பை தொட்டிகளிலும், கொசு பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், குழந்தைகள், பெண்கள், முதியோர், பணிக்கு செல்வோர் என, அனைவரும் இரவில் துாக்கம் இழந்தும், பகலில் நிம்மதி இழந்தும் தவிக்கின்றனர். மேலும், வைரஸ் காய்ச்சல் பரவுமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கொசுக்களால் பரவும், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல், அதிகம் பரவும் சாதகமான பருவநிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், குறட்டை விட்டு துாங்குகிறது. எங்கள் பகுதிகளில், கொசு தொல்லை அதிகமாக உள்ளது என, 1913 என்ற புகார் எண்ணிற்கு புகார் அளித்தாலும், கொசுவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகரிக்கும்போது, மாநகராட்சி அதிகாரிகள், வீடு வீடாக காய்ச்சல் இருக்கிறதா என கணக்கெடுக்கின்றனர். அப்போது, ஒரு வீட்டில் காய்ச்சல் இருந்தால், அந்த வீட்டில் மட்டுமே, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மற்ற வீடுகளை கண்டு கொள்வது கூட இல்லை.கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட, மாநகராட்சி குப்பை தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்களில், கிருமிநாசினி தெளிப்பதும் இல்லை. வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கும்போது தான், மாநகராட்சி இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொசுக்களால் பரவும் நோய்:

'அனாபிலிஸ்' என்ற கொசு வகை, மலேரியா காய்ச்சலை பரப்புகின்றன. அதேபோல், 'ஏடிஸ் எஜிப்தி' கொசு சிக்குன் குனியாவையும், 'கியூலக்ஸ் டர்சாலிஸ்' கொசு மூளைக்காய்ச்சலையும், 'ஏடிஸ்' கொசு டெங்கு காய்ச்சலையும் பரப்புகின்றன. மேலும், கொசுக்களால், யானைக்கால், மஞ்சள் காமாலை உள்ளிட்ட, பயங்கரமான தொற்று நோய்கள் வரலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X