சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நடிகர் ரஜினி விதிவிலக்கல்ல...!

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நடிகர் ரஜினி விதிவிலக்கல்ல...!

என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜயகாந்த் அரசியலில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவர் எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். அவரது மனைவி பிரேமலதா ஆர்வத்தால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் பேச்சை கேட்டார். தே.மு.தி.க., - காம்ரேட்டுகள் - தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை இணைத்து, மக்கள் நல கூட்டணி என்ற அமைப்பை, வைகோ ஏற்படுத்தினார்.

சட்டசபை பொதுத் தேர்தலில், இந்த கூட்டணியில் போட்டியிட்ட விஜய்காந்த் உள்ளிட்ட அனைவரும் டிபாசிட்டை இழந்தனர். அத்துடன், மக்கள் நல கூட்டணி கலைக்கப்பட்டது. அதன்பின், தி.மு.க.,வுடன், ம.தி.மு.க., கூட்டணியும், அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் பா.ம.க.,வும் கூட்டணி அமைத்துள்ளன. இத்தருணத்தில், 'நடிகர் ரஜினி, ஏப்ரலில். தன் புதிய கட்சியை துவக்க போகிறாராம்; செப்டம்பரில், தமிழகத்தில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறாராம்; 2021 தேர்தலில் இவரது கட்சி போட்டியிடப் போவது உறுதி' என, அடித்துச் சொல்கிறார், தமிழருவி மணியன்.

இதற்காக, 'பா.ம.க., உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, சம்பந்தமாக, தமிழருவி பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறாராம். இதை, பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் நிருபர்கள் கேட்டபோது, 'ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். அப்புறம் பேசுவோம்' என பதில் அளித்திருக்கிறார். பா.ம.க.,வுடன் கூட்டணி வைப்பது, 'எரிகிற கொள்ளியை எடுத்து தன் தலையைச் சொரிந்து கொள்வது போல' தான் இருக்கும். நடிகர் ரஜினியை மிகத் தரக்குறைவாக விமர்சனம் செய்தவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்பதை, தமிழக மக்கள் மறக்கவில்லை.

தமிழருவி மணியன், 'துக்ளக்' சோ போல, சாணக்கியன் அல்ல. அவரது அறிவுரையை கேட்டு, ஒருவேளை கட்சி ஆரம்பித்து, பா.ம.க., வுடன் கூட்டணி அமைத்தால், மிகப்பெரிய தோல்வியை ரஜினி சந்திக்க வேண்டி இருக்கும். தமிழருவி மணியன் ஆதரித்த, எந்த அரசியல் தலைவரும் உருப்பட்டதே இல்லை; அதற்கு, ரஜினியும் விதிவிலக்கல்ல!

'பாஸ்டேக்' வழங்குவதை எளிதாக்கலாமே!
ப.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல, சாலை பராமரிப்புக்கென வசூலிக்கப்படும் கட்டண முறையை எளிதாக்க, 'பாஸ்டேக்' முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வழக்கம் போல், வாகன ஓட்டிகள் சுணக்கம் காட்டியதால், இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதுவரை, 'பாஸ்டேக்' முறைக்கு மாறாதவர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதுடன், கட்டணத்தை, இரு மடங்காக செலுத்த வேண்டிய நிலையுள்ளது.

நான், கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, ஹங்கேரி நாட்டின், புடாபெஸ்ட் நகருக்கு, காரில் சென்றோம். சுவிட்சர்லாந்திலிருந்து, ஜெர்மனி, வியன்னா ஆகிய நாடுகளின் வழியாகவே செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும், 'பாஸ்டேக்' போன்ற வில்லை பெற்றே செல்ல வேண்டும். அதற்கான, தனி 'பூத்'கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கும், மேலாக, சில பெட்ரோல் பங்குகளிலும், அதை ஒட்டியுள்ள சிறுகடைகளிலும், அந்த வில்லையை விற்கின்றனர்.

பயணியருக்கு வசதி ஏற்படுத்த, தாமதத்தை தவிர்க்க, இம்முறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது, நான், நம் நாட்டில் தேசிய வங்கியை அணுகியபோது, 'வங்கி வாயிலாக, 'பாஸ்டேக்' செய்ய வாய்ப்பில்லை' எனக்கூறி, ஏஜன்ட் ஒருவரைத் தொடர்பு கொள்ளுமாறு, அவரது மொபைல் போன் நம்பரை, கொடுத்தனர். பலமுறை முயன்றும், ஏஜன்ட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின், தனியார் வங்கிக்கு சென்றபோது, அவர்கள் ஒரு வாரத்தில், 'பாஸ்டேக்' கிடைக்கும் எனக் கூற, நானும் உடனடியாக விண்ணப்பித்தேன்.

ஆனால், ஏழு வேலை நாட்கள் கடந்தும், எனக்கு, 'பாஸ்டேக்' கிடைக்கவில்லை. மீண்டும் சில முறை, அந்த வங்கி ஊழியர்களை தொடர்பு கொண்ட போது, '10 வேலை நாட்களுக்குள்ளாக கிடைக்கும்' என்றனர். இறுதியாக, 9வது அலுவலக வேலை நாளில் கிடைத்தது. மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில், பெட்ரோல் பங்குகள் மற்றும் சிறு கடைகளுக்கு பஞ்சமே இல்லை. அவற்றின் வாயிலாக, 'பாஸ்டேக்' விற்கப்பட்டால், எளிதாக அனைவரும் அதை பெற்றுப் பயன்படுத்துவர். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், இதை உணர்ந்து செயல்பட்டால், மக்களின் நேரமும், மன உளைச்சலும் மிச்சமாகும்; வீணான தர்க்கங்களும் தவிர்க்கப்படும்!

டில்லியை பின்பற்றினால் தமிழகம் முன்னேறும்!
ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: டில்லியில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்வத்தை பாராட்டியே தீர வேண்டும்.கற்பித்தலில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தினால், தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயரும் சந்தேகமேயில்லை.'தினமலர்' நாளிதழில், 'முதலிடம் பிடித்த மாணவி, ஒரு நாள் தலைமையாசிரியர்' என்ற தலைப்பில் வெளியான செய்தியைப் படித்தவுடன், மனது நிறைவாக இருந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் டில்லியில் உள்ளது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றினால், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் கல்வி தரம் உயரும். குறிப்பாக, ஆரணி அடுத்த நெசல் அரசு உயர்நிலைப் பள்ளி செய்தது போல, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' மற்றும் 'பாடங்கள் வாரியாக முதலிடம்' பெறும் மாணவர்களை சிறப்பு வகுப்பு எடுக்க அழைப்பு விடுக்கலாம். பெற்றோர் மத்தியில் போட்டி ஏற்பட்டு, ஒருவரையொருவர் முந்த நினைப்பர்.

ஒருவனுக்கு, எந்த வகையிலும் அழிவே இல்லாத சொத்து, கல்வி தான். பொன்னும், பொருளும் கல்வியின் முன், பொருட்டே அல்ல. இதை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தாலே கல்வி தரம் உயரும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
16-பிப்-202007:34:51 IST Report Abuse
venkat Iyer திரு.சாணக்கியன் அவர்களே,நீங்கள் சாணக்கியன் என்று பெயர் இருப்பதால் உங்களிடம் சாணக்கியன் தனம் இருந்துவிடு மா?.தமிழருவி மணியன் உண்மையில் கறைபடியாத நபர் அதோடு காந்தியவாதி .தமிழ்நாட்டில் ஊழலற்ற ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு எதுவும் கிடையாது. அதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். அதில் தவறு ஏதும் கிடையாது.பாமக சாதியை வைத்து கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் அவர்களது மிகுந்த பலவீனம். அது எங்கள் சாபகேடாகிவிட்டது என்று அன்புமணி வருத்தப்பட்டு கூறிவருகிறார்.அப்படி நிலை இல்லாமல் எதார்த்தமாக ஒரு கட்சியை இரமாதாஸ் ஆரம்பித்து இருந்தால் தமிழ் நாட்டில் அனைத்து மக்களும் அவரை ஆட்சி பீடத்தில் உட்கார வைத்திருப்பார். அன்புமணி மத்தியில் யூனியன் சுகாதார துறை அமைச்சராக இருந்த போது சிகரெட் பொது இடத்தில் பிடிப்பதை தடை சட்டத்தில் கொண்டு வந்தார்.சினிமாவில் நடிகர்கள் சிகரெட் மது அருந்தினால் உடல் நலத்துக்கு தீங்கானது என்று கீழே எழுதி போட வேண்டும் என்று கொண்டு வந்தார். நடிகர்களை பார்த்து இளைஞர்கள் மது மற்றும் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று தாக்கப்பட்டு வருத்தப்பட்டார்.அதுவும் நடிகர் ரஜினி சிகரெட் ஸ்டைலாக தூக்கி போட்டு சிகரெட் குடிப்பதை இளைஞர்கள் பின்பற்றியதையும் அவர் அறிந்து அவர் மீது கோபப்பட்டது தவறு கிடையாது. நடிகர்கள் மது சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தி படங்களில் நடிப்பதை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவரும் அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். அதோடு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி இவர்களுடையது தான்.மேலும்,மாடல் பட்ஜெட், விவசாயத்துக்கு முக்கியத்துவம்,நீர் மேலாண்மை போன்றவற்றிர்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாமாக-தான்.ரஜினியை பொருத்தவரையில் தற்போது நடிக்கும் படங்களில் மது மற்றும் சிகரெட் போன்றவை எல்லாம் வைத்து நடிப்பது குறைத்து கொண்டு வருகிறார். ஆன்மிக பற்றினை படங்களில் புகுத்தி வருகிறார். மதுவிலக்கு,லஞ்சம்,கெட்ட பழக்கங்கள் போன்றவற்றிர்க்கு இருவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர்..அன்புமணி அவர்களிடம் நல்ல குணங்கள் இருப்பதை அனைவரும் அறிந்தே உள்ளனர்.பலருக்கு இவர்கள் இணைவது பிடிக்கவில்லை.காலம் எல்லாவற்றிர்க்கும் பதில் சொல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X