அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவல் துறைக்கு, ரூ.8,877 கோடி ஒதுக்கீடு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1+ 95)
Advertisement
Tamilnadu, Budget,police, OPS,NirbayaFund, CCTV, GovtBus, FinanceMinister, தமிழகம், தமிழ்நாடு, பட்ஜெட், நிர்பயா, திட்டம், சிசிடிவி, கண்காணிப்பு, அரசுபேருந்து,

சென்னை : ''வரும் நிதியாண்டில், 10 ஆயிரத்து, 276 சீருடை பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பட்ஜெட்டில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக காவல் துறையில், தற்போது, 1.13 லட்சம் காவலர்கள் பணியாற்றுகின்றனர். 2019 - 20ல், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, 10 ஆயிரத்து, 242 பேர் புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். வரும், 2020 - 21ல், 10 ஆயிரத்து, 276 சீருடை பணியாளர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

* குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும், 'கணினி வலையமைப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* இத்திட்டம், 54.84 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும். இணையவழி குற்றங்களை தடுத்து, பாதுகாப்பை அதிகரிக்க, 28.97 கோடி ரூபாயில், இணையதள குற்ற காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

* காவல் துறையில் கட்டுமான பணிகளுக்காக, 431 கோடி ரூபாய், காவல் துறை நவீனமய மாக்கல் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்கு மொத்தமாக, 8,876.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தீயணைப்பு துறை


தமிழகத்தில், 326 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன; புதிதாக, 16 தீயணைப்பு நிலையங்கள், 18.22 கோடி ரூபாய் செலவில் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை, நவீன முறையில் தடுப்பு மற்றும் மீட்புக்கான கருவிகள், 13.67 கோடி ரூபாயில் வாங்கப்படும். தேசிய பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்பு பணிகள், நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக, 1,000 கோடி ரூபாயை ஒதுக்க, 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியை பெற, தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும். பட்ஜெட்டில், மொத்தமாக, தீயணைப்புத் துறைக்கு,405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது


சிறைத்துறை


சிறைவாசிகள், சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில், அவர்களின் பராமரிப்புக்காக பிடிக்கப்படும் தொகை, 50 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக குறைக்கப்படும்; ஊதியத்தில், அவர்களின் பங்கு, 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்படும். சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, வரும் நிதியாண்டில், மேலும், ஆறு பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். பட்ஜெட்டில், சிறைத் துறைக்கு, 392.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


கட்டட தொழிலாளருக்கு பணி இடத்தில் உணவு'கட்டுமான தொழிலாளர்களுக்கு பணி இடத்திலேயே, உணவு தரும் வகையில், அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், 2013 முதல், அம்மா உணவக திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தை பின்பற்றி, பல மாநிலங்களும், உணவக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும், நிதி சுமையை குறைப்பதற்காக, லாபநோக்கமற்ற, ஒரு சிறப்பு நோக்கு முகைமையை உருவாக்க, அரசு முடிவெடுத்துள்ளது.

கட்டுமான பணியாளர்களுக்காக, அவர்கள் இருக்கும் இடங்களிலேயே உணவு தரும் வகையில், அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில், அம்மா உணவக திட்டத்துக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


ரூ.385 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்


செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 385 கோடி ரூபாயில், புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
* மீன்பிடித் தடை காலத்தில், உதவித் தொகை வழங்கவும், மீனவர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்காகவும், சிறப்பு உதவித் தொகை வழங்க, 298.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 4,997 மீன்பிடி விசைப்படகுகளில், 18 கோடி ரூபாயில், 'டிரான்ஸ் பாண்டர்'கள் பொருத்தப்படும்.
* பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்கான, 2,000 இழுவலை மீன்பிடி படகுகளை, ஆழ்கடல் மீன்படி படகுகளாக மாற்றும் சிறப்புத் திட்டம், 1,600 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக, 500 துாண்டில் செவுள் வலையுடன் கூடிய, ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.

* விழுப்புரம் மாவட்டம், அழகன் குப்பம்; செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரைக் குப்பம்; நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுகாட்டுத் துறையிலும், 385 கோடி ரூபாயில், மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும். துாத்துக்குடி மாவட்டத்தில், 30 கோடி ரூபாயில், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டப்படும். மீன் வளத் துறைக்கு, மொத்தம், 1,229.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஆசிரியர்களின் கற்பித்தல் திறனுக்கு பயிற்சி மையம்


அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு, மானியம் வழங்க, 149.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டில், 20 கோடி ரூபாய் செலவில், 2 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள, 'சிப்காட்' தொழிற் பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில், 15 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வழக்கற்ற படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ற பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சேர்த்து, 17.80 கோடி ரூபாய் செலவில், தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில், 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு, மின் வாகன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்க, சென்னையில், மாநில திறன் பயிற்சி நிலையம், 1.60 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.


எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி


தமிழக அரசின் பட்ஜெட்டில், எரிசக்தி துறைக்கு, 20 ஆயிரத்து, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின் கட்டமைப்பை, 4,650 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தும் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின், 3,150 கோடி ரூபாய் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, பட்ஜெட்டில், 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின் வாரியத்திற்கு, 2019 - 20 ஏற்பட்ட நஷ்டத்தில், 50 சதவீதத்தை ஈடு செய்ய, 4,265 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களின் மின் உற்பத்தியையும், உயரழுத்த நுகர்வோரின் மின் பயன்பாட்டையும் கணக்கிட, தானியங்கி கணக்கீட்டு கருவிகளை நிறுவும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதல் முறையாக, மின் வாரியம் செயல்படுத்தி உள்ளது. மின் வாரியத்தின், நிதி மற்றும் இயக்க செயல்பாட்டு திறனை மேம்படுத்த, ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள, அரசு, நிதியுதவி வழங்கும் பட்ஜெட் மதிப்பீடுகளில், எரிசக்தி துறைக்கு, 20 ஆயிரத்து, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
'மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வது மத்திய அரசின் கடமை' சென்னை : ''மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
பட்ஜெட் உரையில், அவர் கூறியதாவது: மாநிலத்தின் பன்முகப் பொருளாதாரம், மாநில அரசின் நிலையானக் கொள்கை போன்றவை, 2018 - 19ம் ஆண்டில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், 8.17 சதவீதம் அடைவதை உறுதி செய்துள்ளன. வரும் நிதியாண்டில், மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
பரிந்துரை தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக, 4,025 கோடி ரூபாய் வழங்க, 15வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இந்த அறிக்கை ஏற்றதையே, இது குறிக்கும். ஆனால், 74 ஆயிரத்து, 340 கோடி ரூபாயை, நிதிக் குழு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில், மானியத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய, மாநில அரசு வலியுறுத்தும்.
ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தியதில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை வழங்குவதற்கான வருவாயை பெருக்க, உரிய வழிகளை கண்டறிவது, மத்திய அரசின் கடமையாகும்.
விவாதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. 2019 அக்டோபர் மாதம், பிரதமரை சந்தித்தபோது, முதல்வர், இதை எடுத்துரைத்தார். எனவே, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தில், இது குறித்து விவாதித்து, உரிய தீர்வை எட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ரூ.3,700 கோடியில் 1.77 லட்சம் வீடுகள் தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 2020 - 21ம் நிதி ஆண்டில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, 3,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளுக்கான, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், இதுவரை, 16 ஆயிரத்து, 774 கோடி ரூபாயில், 5.53 லட்சம் தனி வீடுகளும், 13 ஆயிரத்து, 677 கோடி ரூபாயில், 1.32 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்ட, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், 2020 - 21ம் நிதியாண்டில், 1.12 லட்சம் தனி வீடுகள், 65 ஆயிரத்து, 290 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, 3,700 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு, 2020 - 21ம் நிதி ஆண்டில், 169.20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியில், 5,000 கோடி ரூபாய் செலவில், வீட்டுவசதி மற்றும் உறைவிட திட்டம் செயல்படுத்தப்படும். 2020 - 21ம் நிதி ஆண்டில், நெல்லை, காரைக்குடி, தஞ்சை, பள்ளிப்பாளையம், திண்டுக்கல், தேனி ஆகிய நகரங்களில், துணை திட்டங்கள் தயாரிக்க, 171 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2,000 கோடி சுற்றுலா தலங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு, வணிக ரீதியிலான விருந்தோம்பல் உட்பட, பல்வேறு திட்டங்களுக்காக, பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆசிய வங்கியுடன் செயல்படுத்தப்படும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 90.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், 295 சுற்றுலாத் தலங்கள், ஆறு கட்டங்களாக மேம்பத்தப்படும். இதற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்படும். இதன்படி, அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு, வணிக ரீதியிலான விருந்தோம்பல் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்திற்காக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்க, 563.50 கோடி ரூபாய் மதிப்பில், சிறப்பு தொகுப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், மாநில அரசுகள் வகுக்கும் சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், மத்திய அரசின் நிதி உதவி பெறப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (1+ 95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
15-பிப்-202006:41:06 IST Report Abuse
blocked user வெறும் 15 கோடி என்பதை விட்டு தொழிற்பயிற்சிக்கு இன்னும் அதிகமாக ஒதுக்கி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X