மனைவி மீது சந்தேகம் துபாய் சென்று கொலை | Dinamalar

மனைவி மீது சந்தேகம் துபாய் சென்று கொலை

Added : பிப் 14, 2020
Share

துபாய்: துபாயில் பணியாற்றிய மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், 'விசிட் விசா'வில் அந்நாட்டிற்கு சென்று, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சிலிருக்கும் துபாயில் உள்ள ஓர் அலுவலகத்தில், இந்தியாவைச் சேர்ந்த, ௪௪ வயது நபரின் மனைவி பணியாற்றியுள்ளார். அவரது கணவர், இரண்டு மகள்களுடன் இந்தியாவில் வசிக்கிறார். துபாயிலிருக்கும் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பரில், அவர் அங்கு, விசிட் விசாவில் சென்றார். மனைவியின், 'மொபைல்' போனில், அவர் பணியாற்றும் நிறுவன உரிமையாளர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி தொடர்பாக, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மனைவியின் அலுவலகத்திற்கு சென்ற கணவர், அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய, நிறுவன உரிமையாளருடன் தகராறு செய்துள்ளார். பின், கணவன், மனைவி இருவரும் கார் நிறுத்துமிடத்திற்கு வந்தனர். அங்கு, 'அலுவலகத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்' என, மனைவி கணவனிடம் சண்டைபோட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி யின் உடலில் மூன்று இடங்களில், கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், தப்பிச் செல்ல முயன்ற அவரை, போலீசார் கைது செய்தனர். கணவர் மீதான கொலை வழக்கில், துபாய் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அடுத்தகட்ட விசாரணை, மார்ச், ௨ம் தேதி நடைபெற உள்ளதாக துபாய் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X