பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன் லாலுவுக்கு ஜாமின்: ஆர்.ஜே.டி., நம்பிக்கை

Added : பிப் 15, 2020
Advertisement

புதுடில்லி: 'பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன், தங்கள் கட்சியின் தலைவர், லாலு பிரசாத் யாதவுக்கு,'ஜாமின்' கிடைக்கும்' என, ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில், வரும் அக்டோபரில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநில முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு, கால்நடை தீவன ஊழல் தொடர்பான, நான்கு வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லாலு, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லோக்சபாவுக்கு, கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ஜாமின் கிடைக்காததால், லாலுவால் பங்கேற்க முடியவில்லை.

இதையடுத்து, வரும் அக்டோபரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல், லாலு கட்சிக்கு வாழ்வா, சாவா போராட்டமாக அமைந்துள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வுக்கு எதிராக, லாலு நிதிஷுடன் கைக்கோர்த்தார். காங்கிரசும் இணைந்திருந்த இந்த கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கூட, இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கவில்லை. கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ், பா.ஜ.,வுடன் கைக்கோர்த்து மீண்டும் ஆட்சியமைத்தார்.கடந்த லோக்சபா தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி, பீஹாரில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி, சட்டசபை தேர்தலிலும் தொடரும், என, அந்தக் கூட்டணி நம்பிக்கையில் உள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு எதிர்காலம் இருக்கும் என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், ஆர்.ஜே.டி., மூத்த தலைவர்கள் கூறியதாவது:கடந்த தேர்தலில், ஆர்.ஜே.டி., - ஐக்கிய ஜனதாதளம் - காங்., கூட்டணியின் முக்கிய பிரசாரகராக லாலு இருந்தார். அவரால்தான் கூட்டணி வெற்றி பெற்றது. பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு முன், லாலுவுக்கு ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து, அவர் கட்சிக்கு வெற்றியை தேடித் தருவார். முதல்வர் நிதிஷ் குமார் மீது, பீஹார் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்'கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, நான்கு வழக்குகளில், லாலுவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு வழக்கில், அவருக்கு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், ஜாமின் வழங்கியுள்ளது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, லாலுவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X