செய்தி சில வரிகளில்...

Added : பிப் 15, 2020
Share
Advertisement

மும்பை ஐகோர்ட் நீதிபதி ராஜினாமா

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி, சத்யரஞ்சன் தர்மாதிகாரி, வேறு ஒரு மாநில உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.இதையடுத்து, 'குடும்ப பிரச்னை உள்ளதால், மும்பைக்கு வெளியில், வேறு எங்கும் பணியாற்ற விரும்பவில்லை' எனக் கூறி, நீதிபதி பதவியை, சத்யரஞ்சன் ராஜினாமா செய்து உள்ளார்.

உ.பி., சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டங்களின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிரிழந்தனர். இந்த விவகாரம், சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. இது குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களது கோரிக்கையை, பா.ஜ., அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கல்லுாரியில் துப்பாக்கிச்சூடு

பக்பாட்: உத்தர பிரதேச மாநிலம், பக்பாட்டில் உள்ள ஹிமாலயன் கல்லுாரியில், மேலாளராக பணியாற்றியவர் குல்வீர் சிங். நேற்று, கல்லுாரி வளாகத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை சுட்டுக் கொன்றது. தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். 3 மாணவர்கள் காஷ்மீரில் கைதுஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பாதுகாப்பு படையினர், நேற்று வாகன சோதனை நடத்தினர். இதில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரிடம் நடத்திய சோதனையில், அவர்கள் கையெறி குண்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பதவி பறிப்பு

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மார்ச், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.இதன்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்கும் வேட்பாளர்கள் கையும், களவுமாக பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் வெற்றிக்கு பிறகு இந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பதவி பறிக்கப்படும்.இந்த குற்றங்களுக்கான ஜெயில் தண்டனை தற்போது, மூன்று முதல், ஆறு மாதங்கள் வரை உள்ளது. இனி இந்த குற்றங்களுக்கான தண்டனை, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

மாணவியரிடம் நடந்த சோதனையால் சர்ச்சை

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில், ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கல்லுாரியின் கட்டுப்பாட்டில், இயங்கும் விடுதியில், 68 மாணவியர் தங்கியுள்ளனர். இவர்கள், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மாதவிடாய் காலத்தில் மாணவியர் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லுாரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாணவியரின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என, கல்லுாரி நிர்வாகம் சோதனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து விசாரிக்க, கல்லுாரி பொறுப்பு துணைவேந்தர், விசாரணை குழு அமைத்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X