போலீஸ் டைரி,,| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி,,

Added : பிப் 15, 2020
Share

வாலிபரை தாக்கி வழிப்பறி

திருவல்லிக்கேணி: நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 45. இவர், நேற்று அதிகாலை, திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலை வழியாக நடந்து சென்றபோது, நான்கு பேர் கும்பல் சரமாரியாக தாக்கி, 600 ரூபாய், மொபைல் போனை பறித்துச் சென்றது. திருவல்லிக்கேணி போலீசார், இது தொடர்பாக, 16 வயது சிறுவனை பிடித்து விசாரிக்கின்றனர்.

குண்டாசில் எட்டு பேர் கைது

சென்னை: வியசார்பாடியைச் சேர்ந்தவர்கள் சுபாஷ், 27, செல்வகுமார், 31, கரண், 22, சீனி, 24, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த செபாஸ்டின், 30, மைக்கேல், 27, வடபழனியைச் சேர்ந்த வடிவேல், 27, கொசப்பூரைச் சேர்ந்த சுதர்சன், 32, ஆகியோரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, எட்டு பேரையும், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

நுங்கம்பாக்கம்: சூளைமேடு, அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர், ராஜேஷ், 25; மத்திய அரசு ஊழியர். ஜன., 10ம் தேதி, லயோலா கல்லுாரி அருகே, இருசக்கர வாகனங்களில் வந்த போதை ஆசாமிகள், ஆறு பேர், ராஜேஷிடம் மொபைல் போன் கேட்டுள்ளனர். ராஜேஷ் தர மறுக்கவே, இருவர் அவரை தாக்கியுள்ளனர். விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார், பட்டாளத்தைச் சேர்ந்த அபிலாஷ், 19, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

பெண்ணுக்கு கும்மாங்குத்து

ஏழுகிணறு: ஏழுகிணறு, சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் சாந்தலட்சுமி, 70. இவர், ஏழுகிணறு, போர்ச்சுகீசிய தெரு வழியாக, நேற்று நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்த பெண் ஒருவர், மனங்குளிர பேசி, குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அவரை நம்பிய சாந்தலட்சுமி, குளிர்பானத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழ, அவரது 5 சவரன் நகையை திருடி, அப்பெண் தப்ப முயன்றார். சுதாரித்த சாந்தலட்சுமி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் அவரை நையப்புடைத்து, ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புழல், காவாங்கரையைச் சேர்ந்த பரிதா பீவி, 44 என்பது தெரியவந்தது.

நுாதன முறையில் நகை, 'ஆட்டை'

தாம்பரம்: மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர், கார்த்திக், 24. நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணா நகர் அருகே, டூ - வீலரில் வந்த இருவர், கார்த்திக்கிடம், 'செயின் அணிந்து சென்றால், யாராவது பறித்துச் சென்றுவிடுவர்; காகிதத்தில் மடித்து வைத்து தருகிறோம்' எனக் கூறியுள்ளனர். அதை நம்பிய கார்த்திக், தன், ஒன்றரை சவரன் செயினை கழட்டிக் கொடுத்துள்ளார். காகிதத்தை மட்டும் கொடுத்த அவர்கள், செயினுடன் தப்பினர். சிறிது துாரம் சென்றபின், காகிதத்தை திறந்து பார்த்த போது தான், ஏமாற்றப்பட்டது கார்த்திக்கிற்கு தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாதவரம்: மாதவரம் அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்தவர், சகுந்தலா பாய், 67. இவர், நேற்று முன்தினம் இரவு, மூலக்கடை பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அருகில் நின்ற பெண், 'நகைகளை பத்திரமாக வையுங்கள்' என, பேச்சு கொடுத்துள்ளார். சகுந்தலா பாய் தன் நகையை, பர்ஸில் வைத்து, அப்போது வந்த பேருந்தில் ஏறிச் சென்றார். சிறிது துாரத்தில் தான் வைத்திருந்த பை, பிளேடால் வெட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதில் இருந்த, 3 சவரன் நகை, 3000 ரூபாயோடு பர்ஸ் திருடு போனது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாமியார் மண்டை உடைப்பு

புதுவண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர், கற்பகம், 68. இவரது கணவர் ரத்தினகுமார், 70, மூன்று நாட்களாக, உடல் நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்க்க, அவரது முதல் மனைவியின் மகன் சங்கர், நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, முன்விரோதம் காரணமாக, சங்கர் மனைவி சேரமாதா, 40, என்பவருக்கும், கற்பகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக மாற, சேரமாதா, கற்பகத்தை அடித்து சுவரில் தள்ளி உள்ளார். இதில் தலையில் காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

அடுத்தடுத்து கடைகளில் திருட்டு

ஐ.சி.எப்: ஐ.சி.எப்., - எம்.டி.எச் சாலையில், கிருஷ்ணகுமார், 60, என்பவர் மருந்தகம் நடத்தி வருகிறார். நேற்று காலை மருந்தகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மடிக்கணினி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருட்டு போனது தெரிய வந்தது. அதேபோல் அடுத்துள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையில், பணம் ஏதும் இல்லாததால், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். மேலும், மற்றொரு கடையில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X