பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு தர வேண்டிய பாக்கி ரூ.12,263 கோடி நிதித்துறை செயலர் தகவல்

Added : பிப் 15, 2020
Share
Advertisement

சென்னை: ''மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை தொகை, 12 ஆயிரத்து, 263 கோடி ரூபாயாக உள்ளது,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின், 2020 - 21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், வளர்ச்சியை கருதி தயாரிக்கப்பட்டு உள்ளது. நிதி நெருக்கடி உள்ள நிலையிலும், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, துல்லியமாக ஆராய்ந்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

சாலை வசதி, பாசன வசதி, மின் திட்டம், குடிநீர் திட்டம் போன்ற மூலதன செலவுகளுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும், போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், மத்திய அரசின் வருவாயில் இருந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியில், 7,586 கோடி ரூபாய் குறைந்து விட்டது. இதுவே, பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்ததற்கு முக்கிய காரணம்.

தமிழகத்திற்கு, 15வது நிதிக்குழுவில், 4,025 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை வரியில் இருந்தும், 5 - 12 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, 1.75 லட்சம் மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. வரும் ஆண்டில், கூடுதலாக, 35 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும்.முதியோர்களுக்கு ஓய்வூதியம் தவிர்த்து, வேறு என்ன தேவை உள்ளது என கண்டறிந்து, அதை பூர்த்தி செய்ய, நிதி ஒதுக்கப்படும். நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்வதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மற்ற மாநிலங்களில், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், தமிழகத்தில், அந்த நிலை இல்லை. இதனால், வருவாய் அதிகரிப்பதற்கு ஏற்ப, கடன் அளவும் உயர்கிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மாநிலத்தின் கடன் அளவு, 25 சதவீதம் இருக்க வேண்டும். அதன்படி, தமிழக அரசின் கடன், 21.83 சதவீதம் என்றளவில் தான் உள்ளது. எனவே, 4 லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது கட்டுக்குள் உள்ள அளவாகும்.

வருவாய் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தால் நல்லது. மத்திய அரசிடம் இருந்து, ஜி.எஸ்.டி., வரி நிலுவை தொகை சரியாக கிடைப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கும், உள்ளாட்சி நிதி ஒதுக்கீட்டிற்கும் தொடர்பு இல்லை.தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசிடம் இருந்து, வர வேண்டிய நிலுவை தொகை, 12 ஆயிரத்து, 263 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. 'டாஸ்மாக்' மது விற்பனையால், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தற்போது, மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டதால், கூடுதலாக, 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அரசின் மானிய செலவில், 10 ஆயிரம் கோடி ரூபாயுடன், இலவச மின்சார திட்டம் முதலிடத்திலும்; 6,500 கோடி ரூபாயுடன் உணவு மானியம், இரண்டாவது இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X