ஒருங்கிணைந்த மாவட்ட வாக்காளர் பட்டியல்...வெளியீடு!; கூடுதலாக 69 ஆயிரத்து 770 பேர் சேர்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த மாவட்ட வாக்காளர் பட்டியல்...வெளியீடு!; கூடுதலாக 69 ஆயிரத்து 770 பேர் சேர்ப்பு

Added : பிப் 15, 2020
Share
ஒருங்கிணைந்த மாவட்ட வாக்காளர் பட்டியல்...வெளியீடு!; கூடுதலாக 69 ஆயிரத்து 770 பேர் சேர்ப்பு

விழுப்புரம்:விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணியின் கீழ், மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 128 வாக்காளர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை, 18 வயது நிரம்பியோருக்கான பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய மனுக்கள் பெறப்பட்டது.

அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க., நகர செயலர் பாஸ்கரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சரவணன், தே.மு.தி.க., நகர செயலர் மணிகண்டன், பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், பொதுச்செயலர் சுகுமார், காங்., மாவட்ட தலைவர் ரமேஷ், நகர செயலர் செல்வராஜ், தி.மு.க., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உட்பட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் தற்போது, சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் படி, ஆண்கள் 31 ஆயிரத்து 680 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 68 பேரும், இதர பிரிவினர் 22 பேர் என 69 ஆயிரத்து 770 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம், 27 லட்சத்து 53 ஆயிரத்து 128 வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், இறுதியாக கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் கூடுதலாக 69 ஆயிரத்து 770 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த வாக்காளர் பட்டியல் அனைத்தும், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., சார் ஆட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்கள் மூலம், இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், வாக்காளர்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.2020ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ், அனைத்து சட்டசபை தொகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து நடைபெறும்.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் கொடுக்கலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் தேவைப்படுவோர், அலுவலக பணி நாட்களில், பணி நேரங்களில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950ஐ தொடர்பு கொள்ளலாம்.வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், 'விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 18 வயது நிறைவடைந்தோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

அதன்படி, 69 ஆயிரத்து 770 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், இளம் வாக்காளர்கள் 35 ஆயிரத்து 294 பேர், புதியதாக சேர்ந்துள்ளனர்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X