கோடை தொடங்கும் முன் குடிநீர் தட்டுப்பாடு:சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை தொடங்கும் முன் குடிநீர் தட்டுப்பாடு:சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

Added : பிப் 15, 2020
Share

திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றில் செயல்படும் கூட்டு குடிநீர் திட்டங்களில் கோடை தொடங்கும் முன்னரே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து மதுரை,அருப்புக்கோட்டை, கட்டனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தினமும் குடிநீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகின்றன.

கடந்தாண்டு பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து வரும் வேளையில் போதிய பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பலவும் சுத்தம் செய்யப்பட்டு பல ஆண்டு ஆகிவிட்டபடியால் சுகாதார கேடும் நிலவி வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,' சிவகங்கை மாவட்ட எல்லையான மணலுாரில் தொடங்கி பார்த்திபனுார் மதகு அணை வரை வைகை ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 14 பெரிய கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் மதுரை கிழக்கு, அருப்புகோட்டை, கட்டனுார், சாயல்குடி, இடைக்காட்டூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் செயல்படுத்தப்படுகிறது.

தனி நபர் ஒருவருக்கு தினசரி 40 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும், முன்பு கண்மாய், வாய்க்கால், கிணறு, ஊரணி உள்ளிட்டவற்றில் போதிய தண்ணீர் இருப்பு இருந்ததால் தனி நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் போதுமானதாக இருந்தது. கடும் வறட்சி, நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் சமீபத்திய கணக்கெடுப்பின் படி குடிநீர் வடிகால் வாரியம் நபர் ஒன்றுக்கு 60லிட்டர் தண்ணீர் வழங்க நிர்ணயிக்கப்பட்டது.

நடைமுறையில் 50 சதவிகிதம் கூட தர முடியவில்லை. கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள், மோட்டார்கள், குழாய்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பலவும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. குழாய்கள் பலவும் பழுதடைந்துள்ளன. நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீரில் 40 சதவிகிதம் தான் விநியோகிக்கப்படுகிறது. மற்ற 60 சதவிகிதம் தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே கூட்டு குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றனர். கோடை காலம் தொடங்கும் முன் சிறப்பு நிதி ஒதுக்கி கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X