ஆர்வலர் தொல்லை

Added : பிப் 15, 2020
Advertisement

ஊ ர் போற்றும் ஊர்' என்ற பேரைப் பெற்றிருக்கிற இந்த கோவை மாநகரத்திலே, 'இந்தப்படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்று எதிர் அணியினரின் மூக்குடைத்துக் கேட்கிற வகையிலே, இந்த கொடிசியா மைதானத்தில் திரண்டிருக்கும் அஞ்சா நெஞ்சங்களே, ஆருயிர் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இந்த தீப்பொறி திருமுகத்தின் முரட்டு வணக்கங்கள்!சாதா முட்டை அஞ்சு ரூபா; சாயம் அடிச்சு வித்தா, 13 ரூபா. நாட்டுல இப்புடி எல்லாம் ஈசியா தொழில் பண்ணுற வித்தையை, வந்தாரை வாழ வைக்கும் கோவை மாநகரத்துல நெறயப் பேரு ரொம்ப நல்லா தெரிஞ்சு வெச்சுருக்கான் பாருங்க.
எல்லாத்துக்கும் மக்கள் ஏமாளியா இருக்குறதுதான் காரணம்.அந்த ஏமாளிகளை எல்லாம், கோமாளி நிலையில் இருந்து, அறிவாளி நிலைக்கு மாற்றத்தான் நாமெல்லாம், பொதுக்கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனா நம்ம நாட்டு நெலமை அப்படியா இருக்குது?ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை என்று தலைவர் பாடியது அந்தக்காலம்; ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், ஆர்வலர் கொட்டம் அடங்குவதில்லை என்பது இந்தக்காலம்.

அந்தளவுக்கு நம்ம நாட்டுல, ஆர்வலர்ங்குற பேர்ல நடக்குற அட்டகாசம் இருக்குது.என்ன ஆர்வலர்னு கேட்குறீங்களா... வன ஆர்வலர், வாழைப்பழ ஆர்வலர், சூழல் ஆர்வலர், சும்மா ஆர்வலர், சமூக ஆர்வலர், சட்டி பானை ஆர்வலர் வரைக்கும் நாட்டுல நிறையப்பேரு வந்துட்டாங்க. இந்த ஆர்வலருங்க சில பேரு... சில பேரு தாங்க, எல்லோரையும் சொல்லலை...
சில பேரு பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலை.அதனால, இந்த நாட்டிலே, மிக மிகக் கேவலம் செய்யப்பட்ட வார்த்தைகளிலே ஒன்றை குறிப்பிடுங்கள் என்றால், தைரியமாக சொல்வேன், 'ஆர்வலர்' என்ற வார்த்தைதான் அது.ஒரு காலத்திலே, தொழிலதிபர் என்ற வார்த்தை மேலே, மக்களுக்கு ரொம்ப ஆசை இருந்துச்சு. எல்லோரும், எப்படியாச்சும் நாமளும் தொழிலதிபர்னு பேரு வாங்கனும்னு நெனைச்சாங்க. மளிகைக்கடை நடத்துறவுங்கள்ள இருந்து, ரோட்டோரம் கர்ச்சீப் விக்குறவுங்க வரைக்கும் எல்லாரும் தொழிலதிபர்னு சொல்லிக்க ஆரம்பிச்சாங்க...
இதைத்தான் ஒரு சினிமாவுல, குண்டூசி விக்குறவன்லாம் தொழிலதிபரான்னு, நம்ம கவுண்டமணி அண்ணன் டயலாக் பேசியிருப்பாரு.இப்போ காலம் மாறிப் போச்சு. தொழிலதிபர் என்கிற வார்த்தை, 'அவுட் ஆப் பேஷன்' ஆகிடுச்சு. ஆர்வலர்ங்குற பதவி, பட்டம் மேல ஒரு 'கிரேஸ்' வந்துடுச்சு. எல்லோருக்கும், 'நாமளும் ஆர்வலர் ஆகிடுவோம்'னு எண்ணம் வந்துடுச்சா, அப்புறம் வீதிக்கு நாலு பேரு ஆர்வலரா உருவாகிட்டாங்க. இப்ப அவங்களுக்குள்ள, யாரு ஒஸ்தி கிரேடுன்னு போட்டி வேற, இந்த கெரகத்துக்கு யாரு பஞ்சாயத்து பேசுறது?சரி, இந்த ஆர்வலர்களால, அதிகமா பாதிக்கப்படுறது யாருன்னா, அது இந்த வனத்துறைதான். நாட்டைக் காப்பாற்ற அரசுத்துறைகள் ஆயிரம் இருக்குது.
ஆனா காட்டைக் காப்பாற்ற இருப்பதோ வனத்துறை மட்டும்தான். அந்த காட்டுக்குள்ள இருந்து ஊருக்குள்ளாற யானை வருதா, போகுதான்னு பார்ப்பதற்கு, ஓராயிரம் பேர் தயாரா இருக்காங்க.எல்லாம் ஒரு ஆர்வத்துல தான். இப்படியே ஆர்வத்துல யானையை வெரட்டப் போன குரூப்புல சில பேரு, வனத்துறைல என்னவெல்லாம் வசதியிருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க.இப்ப அவங்க எல்லாம் உலக அளவுல, தேசிய அளவுல, மாநில அளவுல, உள்ளூர் அளவுல, கோவை வடக்கு வட்ட அளவுல, பிரபலமான ஆர்வலர்களா உருவாகிட்டாங்க.
இப்ப இவ்வளவு அறிவை சேகரிச்சு வெச்சுக்கிட்டு, அவங்க என்ன தான் செய்வாங்க, வீட்டுல சும்மா இருக்க முடியுமா, முடியாதே. அப்புறம் என்ன செய்யுறது?இந்த வனத்துறையில என்ன செஞ்சா வருமானம் பாக்கலாம்; எந்த ஊரச் சுத்தலாம்னு தெரிஞ்சுக்கிட்டாங்க... அதாவது, கோவை மாநகரத்துல பல பேரு, வனத்துறை அதிகாரிங்களுக்கே பாடம் எடுக்குற அளவுக்கு, வனத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க.
அது மட்டுமில்லாம, 'பாரஸ்ட்காரங்களுக்கு ஒண்ணுமே தெரியறது இல்லை'ன்னு விமர்சனம் பண்ணவும் ஆரம்பிச்சுட்டாங்க. நாட்டுல நம்மல்லாம் இருக்கும்போது, ஏன் இந்த வனத்துறைக்காரங்க ஆட்டம் போடுறாங்கன்னு, வெளியில கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.ஊருக்குள்ள பாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் எங்க இருக்குன்னு, பாரஸ்ட்காரங்களுக்கே தெரியாத எடமெல்லாம், இவங்க தெரிஞ்சு வெச்சுருக்காங்காக.
அதிகாரிங்களுக்கும் இவங்களைக் கண்டா, கொஞ்சம் கருக்குன்னுதான் இருக்கும்போல. எதுக்கு இவங்ககிட்ட வம்புன்னு, கேட்குற கெஸ்ட் ஹவுஸை கொடுத்து விடுய்யான்னு விட்டுடுறாங்க. இந்த நாட்டிலே, முதலில் வனத்துறை விடுதிகளை எல்லாம் மூடினால்தான், இவங்க தொல்லைக்கு ஒரு முடிவு வரும்.யானை வழித்தட ஆக்கிரமிப்புக்கு குரல் கொடுக்கும் வன ஆர்வலர்களே, மலையிட பாதுகாப்பு விதிமீறலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்வலர்களே, உங்களையெல்லாம் பாராட்டுகிறேன். வரவேற்கிறேன்.
அப்படியே, வனத்துக்குள் கட்டியிருக்கும் ஓய்வு விடுதிகளை இடித்து அகற்றுவதற்கும், நீங்கள் குரல் கொடுத்தால், கோடி புண்ணியமாய்ப் போகும்.ஏன்னா, வனத்துறை கெஸ்ட் ஹவுஸ்லதான், உலகத்துல இருக்குற எல்லா விதிமீறலும் நடக்குது. ஆர்வலர்களே, உங்கள் ஆர்வத்தை, வனத்துறை விடுதிகளை இடிக்குறதுல, அப்புறப்படுத்துறதுல, அதுல வனத்துறைக்காரங்களை தவிர பிறர் தங்கக்கூடாதுன்னு விதிமுறை போடுறதுல குரல் கொடுத்தா ஏத்துக்கிடலாம்.சரி போகட்டும், வனத்துறைய விடுங்க. இன்னிக்குநாட்டுல என்ன நடக்குது? ஏதோ ஒரு நடிகர் வீட்டுல ரெய்டுன்னு பேசிக்கிறாங்க... சரி நடக்கட்டும். போன வாரத்துல, ஒரு நடிகர் மேல இருந்த கேஸ் வாபஸ் ஆகிடுச்சு. சரி ஆகட்டும்.இங்க ரெய்டு; அங்க வாபஸ், இவரு என்ன பாவம் பண்ணாரு, அவரு என்ன நல்லது பண்ணாரு. ஒண்ணும் கெடையாது.
எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்.நாட்டிலே ஓராயிரம் வழக்குகள், பிரச்னைகள், அக்கப்போர்கள் எல்லாம், நாம் அளிக்கப்போகும் தீர்வை எதிர்பார்த்து காத்து நிற்கின்றன.ஆகவே, உங்கள் கவலை தோய்ந்த முகங்கள், என் கண் முன்னால் இருந்தாலும், அங்கே கடையை மூடி விடுவார்களே என்ற நல்லெண்ணத்தில், இன்றைய பொதுக்கூட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.நன்றி, வணக்கம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X