பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு 'டேக் இட் ஈசி' கற்றுக்கொடுங்க!

Added : பிப் 15, 2020
Advertisement
 குழந்தைகளுக்கு 'டேக் இட் ஈசி' கற்றுக்கொடுங்க!

''அம்மா...கொஞ்சம் இங்க வா... யாரோ நம்மள பார்க்கற மாதிரி இல்லை...? ஏதோ ஆபத்து வரப்போகுதுன்னு பயம்மா இருக்கும்மா,''சமீபகாலமாக மகள் ஜானு கேட்கும், இது போன்ற விசித்திரமான கேள்விகள், அவளது தாயை ஆச்சரியப்படுத்தவில்லை; மாறாக அச்சத்துக்கு உள்ளாக்கியது.'நல்லாத்தானே இருந்தா...' என்றபடி யோசனையில் ஆழ்ந்தார்.மூன்று பிள்ளைகளில் மூத்தவர் ஜானு. படிப்பில் சுட்டி. ஆனால், 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்ணே கிடைத்தது. ஜானுவை பெற்றோர் திட்டித்தீர்த்தனர். இரண்டு நாட்களில் சரியாகி விடுவாள் என்று நினைத்திருக்க, குடும்பத்தினருடன் பேசுவதையே குறைத்துக் கொண்டு, தனிமைச்சிறையில் நாட்களை நகர்த்தத் துவங்கினாள் ஜானு.ஒரு மாதமாகியும் மீளவில்லை. பிரச்னைகள் தீவிரமாகின. ''மத்தவங்க கேக்கற மாதிரி சத்தமா பேசாதீங்க; வீட்டிலிருந்து யாரும் வெளியே போகாதீங்க. யாரையும் வீட்டுக்குள்ளே விடாதீங்க,'' என கட்டளையிட துவங்கினார் ஜானு. மீறினால் கூச்சலிடுவது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.தற்கொலை முயற்சி'நாம் திட்டியதே மகளின் இந்த நிலைமைக்கு காரணம்' என பெற்றோர், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகினர்.இரு மகன்களையும் விடுதியில் சேர்த்துவிட்டு, உறவினர்கள், நண்பர்கள் இல்லாத வெளியூருக்கு வீட்டை மாற்றினர். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிலேயே இருந்து மகளை கவனித்துக்கொண்டனர்.இப்படியே, 3 ஆண்டுகள் கடந்துவிட, வீட்டுக்கு புதிய நபர் ஒருவர் வந்தபோது, ரகளையில் ஈடுபட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஜானு.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பெற்றோர், குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி, பீளமேடு, நேரு வீதியிலுள்ள வழிகாட்டி மனநல மருத்துவமையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், மனநல மருத்துவர் இந்துமதியை சந்தித்தனர்.பரிசோதனையில், மனச்சீர்குலைவு நோயால் மாணவி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுதான் மனச்சீர் குலைவு நோய்!''மனச்சீர்குலைவு நோய் குறித்து சமூகத்தில் தவறான புரிதல் உள்ளது. காத்து, கருப்பு, நேரம் சரியில்லை என, மூடநம்பிக்கையின் பக்கம் சிலர் செல்கின்றனர். படித்தவர்களாக இருந்தும், சமூகத்தில் களங்கம் ஏற்பட்டு விடும் என எண்ணி, சிலர் சிகிச்சைக்கு முன்வருவதில்லை,'' என்கிறார் மனநல மருத்துவர் இந்துமதி.தொடர்ந்து அவர் கூறியதாவது:தாங்கள் திட்டியதே, மகளின் பிரச்னைக்கு காரணம் என பெற்றோர் நினைப்பது தவறு. இந்நோய், மூளையிலுள்ள ரசாயன குறைபாடுகள் மற்றும் வேறுபாடுகள், மரபு வழியாக, போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றால் ஏற்படும்.மாணவியின் பாட்டி மனச்சீர்குலைவு நோயால் பாதித்து, பின்னர் குணமடைந்துள்ளார். மரபுரீதியாகவே மாணவிக்கு பிரச்னை இருந்துள்ளது. பெற்றோர் திட்டியதால் நோயின் அறிகுறிகள் வெளியே தெரிந்துள்ளன.முதலில் மாணவிக்கு நோயின் தன்மை, அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து புரிய வைத்தோம். மருந்துகள் மூலம் அறிகுறிகளின் தீவிரம் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பினார். பர்சனாலிட்டி, சமூக கண்ணோட்டம் குறித்து பல கட்ட உளவியல் கவுன்சிலிங்குக்கு பின், முழுமையாக மாணவி குணம் பெற்றார். இப்போது மேற்படிப்பு படிக்கிறார்.டாக்டர் இந்துமதிமனநல மருத்துவர்83008 85575பிரச்னைகளை மனம் விட்டு பேசணும்!மனரீதியாக பாதிப்பு ஏற்படுவது என்பது, பிரச்னையை ஒருவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொருத்தது. கவலைகளிலிருந்து அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் மீள வேண்டும். மாதக்கணக்கில் கவலைப்பட்டு, மூளைக்கு அதிக அழுத்தம் தந்தால், மனபாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஓவர் புரோடக்டிவ்' ஆக வளர்க்கப்படும் குழந்தைகள், தனியாக சமுதாயத்தை சந்திக்கும் போது, இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகின்றனர். எதையும் எளிதாக கையாளவும், பிரச்னைகளை பிறருடன் மனம் விட்டு பகிரவும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்கிறார் டாக்டர்.இதுதான் நோயின் அறிகுறிகள்''நுாறில் ஒருவர் மனச்சிக்கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். செயல்பாடுகள் மாறுதல், தனக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், சிரித்தல், மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்தல், தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு ஆகியவை துவக்ககால அறிகுறிகள்.நோய் தீவிரமாகும் போது, குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட செயல்களில் பாதிப்பு, படிப்பு அல்லது பணியை தொடர முடியாத நிலை, தனியாக இருக்கும் போது காதில் குரல் கேட்பது மற்றும் தேவையற்ற சந்தேக உணர்ச்சி ஏற்படும். இந்த சந்தேக உணர்ச்சியினால் உந்தப்பட்டு, பிறருடன் சண்டை போடுவார்கள்,'' என்கிறார் டாக்டர் இந்துமதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X