பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையல்ல சருகுகள்... உரமாகும் அற்புதம்

Added : பிப் 15, 2020
Advertisement
 குப்பையல்ல சருகுகள்...  உரமாகும் அற்புதம்

விருதுநகர்:இயற்கை படைப்பில் பெரும் பங்கு வகிப்பது மரங்கள், செடிகள் தான். அசையும் உயிர்கள் இயங்குவதற்கு இந்த அசையா உயிர்களே காற்று உற்பத்தியை பெருக்கி உதவுகின்றன. இத்தகைய இயற்கை கட்டமைப்பில் பிற உயிர்களை சார்ந்தே மனித வாழ்வு உள்ளது. இயற்கையின் கால ஓட்டத்தில் பருவமாற்றம் குறிப்பிட தக்கது.

இதில் கோடைகாலம், மழைக்காலம், குளிர்காலம், இளவேனிற் காலம் உண்டு. குளிர் முடிந்து கோடை துவங்கும் முன்பும் கோடை முடிந்து மழை துவங்கும் முன்பும் மரம், செடிகளில் இலை உதிர்வது அதிகமாக இருக்கும்.

இந்த காய்ந்த இலைகள் சருகுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சருகுகளை நாம் சாதாரண மாக கடந்துவிடுகிறோம்.வெறும் குப்பையென நினைத்து ஓரமாக ஒதுக்கி எரிக்கிறோம்.சருகுகள் இயற்கை நமக்கு தந்த வரங்கள். சருகுகளை இயற்கை உரமாக்கி பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள வறட்சி நோய், நச்சுதன்மைகள் நீங்குகிறது. மண் வளமாகி மரங்கள் செடிகள் நன்கு வளர்ச்சி பெறுகின்றன.

காசில்லாமல் கிடைக்கும் உன்னதமான உரங்கள் சருகுகள் தான். சருகுகளை தேவையற்றது என நினைப்பது மடமை. காடுகள், மலைகள் எப்போதும் பசுமையாக காட்சியளிக்க காரணம், மரங்களிலிருந்து விழும் இவைகள் மக்கி பலன் தரும் உரமாகிறது. இதனால் வறட்சி
காலங்களில் கூட மரங்கள் பசுமையாய் காட்சி தருகின்றன. இதை நாமும் வீடு, வளாகங்களில் பின்பற்றலாம். வீடு, பெரும் வளாகங்களில் சருகுகளை ஓரிடத்தில் சேகரித்து இயற்கை
உரமாக்கலாம். இந்திய நிலபரப்பை காட்டிலும் குறைந்த நிலபரப்பு கொண்ட ஜப்பானில்
அதிகளவு வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ரசாயன உரமோ, நவீன தொழில்நுட்பமோ அல்ல. இயற்கையான உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதே. இயற்கை உரங்கள் ஊட்டசத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கையான வேதி பண்புகளை மேம்படுத்துகின்றன. வீட்டின் முக்கில் ஒரு குழி தோண்டி சாணம், உரக்கடைகளில் கிடைக்கும் நுண்ணுயிரி கூட்டு கலவையை ஊற்றி வரலாம்.

இரண்டும் முடியாத நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை நீர் தெளித்தாலே போதும். குழிகளில் உள்ள இலைகளை அவ்வப்போது கிளறி விட வேண்டும். இப்படி 4 அல்லது 5 மாதங்களுக்கு செய்த பிறகு மக்கிய இயற்கையான உரம் கிடைக்கும். இப்படி எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.பெருக்கி சேர்த்த இலைகளை மூட்டை கட்டி அருகில் உள்ள விவசாயிகளிடம் கொடுத்தாலே அவர்கள் அதை நிலத்தில் இட்டு மேம்படுத்தி கொள்வார்கள்.

ஆகவே சருகுகளை எரிக்காமல் இயற்கை உரமாக்கி மண்வளத்தை காப்போம்.
எரிப்பதை தவிர்க்கலாம்

பெரும்பாலான சருகுகள் குப்பை தொட்டிக்கு தான் செல்கின்றன. வீடுகளில் சேகரமாகும் சருகுகளை அந்தந்த வீட்டினரும் தெருக்களில் சேகரமாகும் சருகுகளை உள்ளாட்சி அமைப்புகளும் சேர்த்து உரமாக்க முன்வர வேண்டும். சருகுகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

- - மித்ரு நாகேந்திரன், விருதை விழுதுகள், விருதுநகர்.

நாமே தயாரிப்போம்

இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் அதிகமாகி மகசூல் அதிகரிக்கிறது. மரம் இறந்தும் பயன் தருகிறது. நாம் தான் பயன்படுத்த மறுக்கிறோம். விவசாயிகளின் நலன் கருதி பொதுமக்களே இயற்கை உரங்களை தயாரிக்க முன்வர வேண்டும்.

- மகேந்திரபாண்டி, இயற்கை ஆர்வலர்,விருதுநகர்.

ஒத்துழைப்பு தேவை

சருகுகளை மூன்றுக்கு மூன்று நீள, அகல குழியில் இட்டு பராமரித்து வந்தால் நிச்சயம் தரமான இயற்கை உரம் கிடைக்கும். இது குறித்து பொதுமக்களிடம், மாணவர்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும். இயற்கை உரங்களை பெருக்குவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.

- ராஜா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், விருதுநகர்.

உயிரி உரமாக மாற்றுங்கள்

சருகுகளை எரிப்பதால் தேவையற்ற தீ விபத்து தான் ஏற்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் சருகுகளை தனிநபர் ஒருவர் எரித்துள்ளார். அதன் தீ பட்டாசு ஆலை அருகில் வந்து விட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுவிட்டதால் அவை அணைக்கப்பட்டுவிட்டன. சருகுகளை எரிக்காதீர்கள். உயிரி உரமாக மாற்றுங்கள்.

- கணேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X