அதிகாரம் இல்லாத உணவு பாதுகாப்பு அலுவலர்: கலப்படத்தை ஒழிப்பது எப்படி?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரம் இல்லாத உணவு பாதுகாப்பு அலுவலர்: கலப்படத்தை ஒழிப்பது எப்படி?

Added : பிப் 15, 2020
Share

திருப்பூர்:உணவு கலப்படம் தொடர்பாக, அபராதம் விதிப்பதற்கான, ஆண்டு வணிக நிர்ணயத் தொகையை தளர்த்த வேண்டும்.உடனடி அபராதத் தொகையை உயர்த்தி, பதிவு உரிமம் ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அலுவலர்களுக்கு அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த, 2011ல், உணவுக் கலப்பட தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. புதிதாக தனித்துறையும் உருவாக்கப்பட்டது. பணி அமைப்பு விதிகள் தொடர்பாக அரசாணையை, 2019, ஆக., 4ம் தேதிக்குள், பிறப்பிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் காலக்கெடு விதித்தது.ஆனால், காலக்கெடு முடிந்தும், பணி அமைப்பு விதிகள் தொடர்பான அரசாணை, தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை.பணி குறித்த ஷரத்துகள் தெரிவிக்கப்படாமல் உள்ளதால், துறை நியமன அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆய்வக பரிசோதகர்கள், அலுவல் பணியாளர்கள் சுறுசுறுப்பு இல்லாமலே செயல்படுகின்றனர்.உணவு கலப்படம், பதிவு உரிமம் பெறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட்டால், பொருட்களை பறிமுதல் செய்தும், நோட்டீஸ் வழங்கியும் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.சில நேரங்களில், உணவு மாதிரிகளின் ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு, டி.ஆர்.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட்டில் உரியஅபராதம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், உணவு கலப்படத்தை முற்றிலும் தடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.இதுஒருபுறமிருக்க, தனித்துறை உருவாக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே, உணவு பாதுகாப்பு நியமன அலுவலரே அபராதம் விதிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதிலும், 12 லட்சத்துக்கும் கீழ், உணவு வணிகம் செய்பவர்கள், விதிமீறினால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். தற்போது, இத்தொகையை உயர்த்தி, உணவு கலப்படத்தை முற்றிலும் தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.'உணவு தர நிர்ணய சட்டப்படி, அபராதம் விதிப்பதற்கான, ஆண்டு வணிக நிர்ணயத் தொகையை தளர்த்த வேண்டும்.மாறாக எவர் ஒருவர், விதிமீறலில் ஈடுபட்டாலும் உடனடி அபராதம் விதிக்கவும், பதிவு உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்க வேண்டும். குறிப்பாக, அபராதத் தொகையை உயர்த்த வேண்டும்,' என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X