மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு? கூட்டணி கட்சிகளை குஷிப்படுத்த பிரதமர் முடிவு| Dinamalar

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு? கூட்டணி கட்சிகளை குஷிப்படுத்த பிரதமர் முடிவு

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (18)
Share
மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு? கூட்டணி கட்சிகளை குஷிப்படுத்த பிரதமர் முடிவு

புதுடில்லி : நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சேர அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது; பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளை குஷிப்படுத்த பிரதமர் முடிவு செய்திருப்பதால் இந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது என டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும் கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் இணக்கமான சூழ்நிலை இல்லாததால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை பிடித்தது. ஜார்கண்ட் மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்ததால் பா.ஜ. தோல்வியை தழுவியது. சமீபத்தில் தலைநகரான டில்லி சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ. கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது.

தன் பலனாக அக்கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. ஆனால் இரட்டை இலக்க வெற்றியை கூட பெற முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. டில்லி தோல்வியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளை அரவணைத்து அவற்றை குஷிப்படுத்த பா.ஜ. தலைமை முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசித்து உள்ளனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ. முயற்சித்து வருகிறது. கடந்த வாரம் டில்லி வந்த ஜெகன் பிரதமரைச் சந்தித்து அரை மணி நேரம் தனியாக பேசினார். ஆந்திரா திரும்பிய ஜெகன் மறுநாளே மீண்டும் டில்லி வந்து அமித்ஷாவையும் சந்தித்தார். ஜெகனின் இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெகன் கட்சியிலிருந்து இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெகன் இதை மறுத்துள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் தங்களுடைய கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விற்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் தேனியில் இருந்து வெற்றி பெற்ற ஒரே அ.தி.மு.க. - எம்.பி.யும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர். இப்படி இரு கோஷ்டியினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்க பா.ஜ. முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெற்றால் அது கட்சிக்கு பலமாக இருக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஆலோசனை கூறியுள்ளனர். எனவே அ.தி.மு.க.வும் இவ்வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X