யாரையும் திட்ட வேண்டாம்; தேவையில்லாத விமர்சனத்தில் இறங்க வேண்டாம்; மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வோம்; எதைச் செய்தோமோ, அதை மட்டும் சொல்வோம்; மொத்தத்தில், 'படிச்சபுள்ள' மாதிரி நடந்துக் கொள்வோம் என்று முடிவு செய்து, தேர்தல் களம் கண்ட, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், 51, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, டில்லி முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ளார்.
'டில்லி முதல்வர் பதவி, அவ்வளவு அதிகாரம் இல்லாத பதவி; எதற்கு எடுத்தாலும், மத்திய அரசிடம் கையேந்த வேண்டும்... டில்லியைத் தாண்டி, இவருக்கு செல்வாக்கு கிடையாது... காங்கிரசிற்கு விழ வேண்டிய ஓட்டுகளைத் தான், இவர் மகசூல் செய்துள்ளார்' என, என்னவெல்லாம் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் இப்போது சொல்கின்றனர், தோல்வி அடைந்தவர்கள்.அவ்வளவு அதிகாரம் இல்லாத பதவிக்கு, எதற்கய்யா, பிரதமர் மோடி முதல், உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை, தீவிர பிரசாரம் செய்தனர்...
காங்கிரஸ் தலைவர்கள், இரவு, பகலாக பிரசாரம் செய்தனரே எதற்காக; அவர்கள், 'ஹாஹீன்பாக்' என்ற இடத்தில், 50 நாட்களாக நடக்கும் போராட்டத்தை, அணைய விடாமல் பார்த்துக் கொண்டனரே எதற்காக?மத்தியில் நடக்கும், பா.ஜ., ஆட்சி போல, டில்லியிலும், பா.ஜ.,வே ஆட்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, என்னவெல்லாமோ, பா.ஜ., செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அசைக்க முடியாத முதல்வராக, கெஜ்ரிவால் விளங்க உள்ளார்.இனிமேலாவது அவரை சுதந்திரமாக செயல்பட, மத்திய, பா.ஜ., அரசு அனுமதிக்க வேண்டும்.
டில்லி தேர்தல் களம் வித்தியாசமானது. அதில், உள்ளூர் பிரச்னையை பேசாமல், தேசிய பிரச்னைகளை, பா.ஜ., பேசியது, டில்லி மக்களுக்கு புரியவில்லை. மேலும், தங்கள் வீட்டுப் பிள்ளை போல நினைக்கும் கெஜ்ரிவாலை, பா.ஜ., கடுமையாக சாடியதும் மக்களுக்கு பிடிக்கவில்லை.
இதற்கெல்லாம், கெஜ்ரிவால் பதில் சொல்லவில்லை; அவர் சார்பாக, மக்கள் தான் ஓட்டுச் சீட்டு மூலம், பதில் சொல்லியுள்ளனர். 'எங்களுக்கு தண்ணீரும், மின்சாரமும் தேவை. பெண்களுக்கு பாதுகாப்பும் அவசியம். அதை, கண் எதிரே தந்து விட்டார், கெஜ்ரிவால். அடுத்த கட்டமாக, அவர் செய்வதாக சொல்வதும் பிடித்திருக்கிறது. அது போதும்; அவர் போதும்' என்று முடிவு எடுத்து விட்டனர்.ஆனால், அபார வெற்றி பெற்ற பிறகும், 'ஆட்சி பீடத்தில் கொண்டு போய் விளக்குமாற்றை வைத்து விட்டனர், டில்லி மக்கள்' என, இங்குள்ள, பா.ஜ., தலைவர்கள், தங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர். விளக்குமாறு, ஆம் ஆத்மியின் வெற்றிச்சின்னம்.காலில் போடப்படும் செருப்பை, பீடத்தில் வைத்து, ராம ராஜ்யம் நடத்திய நாடு தான் நம்முடையது என்பதை, 'ராம ராஜ்யம் ஏற்படுத்துவோம்' என கூறும் அவர்களுக்கு, யாராவது எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஏனெனில், யார் என்ன சொல்கின்றனர்; என்ன செய்கின்றனர் என்பதை, மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றனர்.
கெஜ்ரிவால் ஒன்றும், வழக்கமான, சராசரி அரசியல்வாதி இல்லை; நன்றாக படித்தவர். ஊழலுக்கு எதிராக அறப் போராட்டங்களை நடத்தும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் பல ஆண்டுகள் இணைந்திருந்தவர்; பல போராட்டங்களில் பங்கேற்றவர்.டில்லி அருகே உள்ள, ஹரியானா மாநிலத்தில் பிறந்து, உ.பி.,யின் காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்; 'டாடா ஸ்டீல்' நிறுவனத்தில் வேலை பார்த்தவர். ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வென்று, 1995ல், வருமான வரி இணை கமிஷனராக இருந்தவர்.சுழலும் சிவப்பு விளக்கு காரில், உயரதிகாரியாக பவனி வந்து, வீடு, வாசல், குடும்பம், பிள்ளைகள் என்று, சொகுசு வாழ்க்கை வாழ பிடிக்காமல், 'டில்லியை மாற்றிக் காட்டுவேன்' என, உறுதிபூண்டு, அனைத்தையும் உதறியவர்; மக்களின் நலனிற்காக, அரசியலில் களம் இறங்கியவர்.அன்னா ஹசாரே போல, வெறும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தால், எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை, ஆட்சியிலும், அரசிலும், அரசியலிலும் கொண்டு வர முடியாது என, உறுதியாக நினைத்தார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதை உணர்ந்தார். ஆம் ஆத்மி என்ற பெயரில், கட்சியை துவக்கினார்.
டில்லியில், 2013ல் அவர் சந்தித்த முதல் தேர்தலில், 28 இடங்களில் வென்று, நாட்டு மக்களின் பார்வையை, தன் பக்கம் திருப்பினார். காங்., ஆதரவுடன், அதே ஆண்டில், டிச., 28ல் முதல்வரானார். பின், காங்., கைப்பாவையாக இருக்க விரும்பாமல், 49 நாளில், முதல்வர் பதவியை துாக்கி எறிந்தார். பதவியை வைத்து, மக்களுக்கு நன்மை செய்ய முடியா விட்டால், அந்தப் பதவியை துாக்கி எறிய தயங்காதவர் என்ற பெயரை பெற்றார்.இதனாலேயே அவருக்கு, மக்களிடமும், கட்சி தொண்டர்களிடமும் மரியாதை அதிகம் ஏற்பட்டது.
தேசம் முழுமைக்கும், ஏன், தமிழகத்தின் குக்கிராமங்களிலும், அவரின் ஆம் ஆத்மி கட்சி உள்ளது; தொண்டர்கள் இருக்கின்றனர்.எனினும், இலவசங்களால் தான், மக்களின் ஓட்டுகளை பெற முடியும் என்பதை தாமதமாக, இந்த தேர்தலுக்கு முன் உணர்ந்த அவர், ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பலவற்றை, தேர்தலுக்கு முன்னரே நிறைவேற்றியும் காட்டி விட்டார்.உதாரணமாக, பஸ்களில் பெண்களுக்கு, இலவச பயணம்; மாதம், 200 யூனிட் வரை, வீடுகளுக்கு மின்சாரம் இலவசம்; 400 யூனிட் வரை மின் கட்டணம் பாதியாக குறைப்பு; 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம்.தனியார் பள்ளிகளில் கட்டணம் உயர்த்த தடை; இலவச, 'வைபை' இணையதள தொடர்பு உட்பட, பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தியவர்.
கடந்த, 2017ல், ஆம் ஆத்மிக்கு, சட்டசபைஇடைத் தேர்தலில் தோல்வி கிடைத்ததும், கெஜ்ரிவால், தன் குரலை மாற்றிக் கொண்டார். பிரதமர் மோடியை விமர்சிப்பதை குறைத்ததுடன், ஹிந்து -- முஸ்லிம் அரசியல் விவகாரத்தில், தான் இழுத்து விடப்படுவதையும் தவிர்த்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டில்லியில், 50 நாட்களுக்கும் மேலாக, முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தும், ஷாகீன்பாக் என்ற இடத்தின் பக்கம் கூட அவர் போகவில்லை. தன் சொந்த வளர்ச்சி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், தன் கவனத்தை திசை திருப்பிய, பா.ஜ.,வின் அரசியல் விளையாட்டையும் கண்டுகொள்ளவில்லை.
அவர் எப்போதுமே, ஆளுயர மாலை, மலர்க்கிரீட, 'நோய்'களில் சிக்கியது கிடையாது.'டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள். டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்' என, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.அதற்கு நன்றி தெரிவித்து, 'டில்லியை, உலகத் தரமான நகரமாக மாற்ற, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என, கெஜ்ரிவால் பதில் அனுப்பி இருந்தார். இந்த மென்மையான, போட்டி போடாத போக்கை தான், டில்லி மக்கள் விரும்புகின்றனர்.
அவர் சொன்னால், தொண்டர்களும், மக்களும் கேட்கவும் செய்கின்றனர். காற்றை மாசாக்கும் விதத்தில், எந்த செயல்பாடும் கூடாது என்பதற்காக, வெற்றியை பட்டாசு வெடித்து யாரும் கொண்டாடக் கூடாது என, கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்; கட்சியினர், பட்டாசு வெடிக்கவில்லை.
காங்., பற்றி பேச வேண்டியது இல்லை...ஏனெனில் கடந்த சில தினங்களாக முட்டுச்சந்தில் வைத்து, சாத்துவது போல, 'மீடியா'க்கள், சோனியா தலைமையிலான காங்., தோல்வியை பல விதமாக, பலமாக விமர்சித்து விட்டன.'வெற்றியை விடுங்கள்... 'டிபாசிட்'டாவது வாங்க முடியாத நீங்களெல்லாம், எப்படித் தான், 15 ஆண்டுகள் தொடர்ந்து, டில்லி மாநிலத்தை ஆட்சி செய்தீர்களோ...' என்று வறுத்தெடுக்கின்றனர்.ஆனால், காங்., தலைவர்கள், தங்கள் படுதோல்வி குறித்து சிறிதும் கவலைப்படாமல், 'பா.ஜ.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை; அது போதும்' என, கொண்டாடி வருகின்றனர்.
இப்படித் தான், சமீப காலமாக அவர்களின் கொண்டாட்டம், விருப்பம் எல்லாம் உள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டில்லியில், ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா பல்கலை மற்றும் பிற இடங்களில், சிறு சிறு குழுக்களுடன் இணைந்து செயல்பட்டதால், ஓட்டுகள் தங்களுக்கு குவியும் என, காங்., தலைவர்கள் நினைத்தனர்.
ஆனால், அதற்கு வாய்ப்பே தராமல், டில்லி வாக்காளர்கள் தெளிவாக, ஓர் இடத்தில் கூட, காங்கிரசை வெற்றி பெற விடவில்லை.மொத்தத்தில், இந்த தேர்தலை, ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, காங்., தலைவர் சோனியா குடும்பத்தினர், நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தினர் மட்டுமின்றி, காங்., என்ற, 'கம்பெனி'யின் அனைத்து பங்குதாரர்களும், இயக்குனர்களும், பாடம் கற்க வேண்டும். இல்லையேல், காங்., காணாமல் போய் விட வாய்ப்பு அதிகம்.
சரி, கெஜ்ரிவாலுக்கு வருவோம்.'தங்களின் மகனாக என்னை, டில்லி மக்கள் கருதுகின்றனர். அவர்கள் காட்டும் அன்புக்கும், ஆதரவுக்கும் தலை வணங்குகிறேன்; இது, டில்லி மக்களின் வெற்றி. கடவுள் அனுமன், நம்மை ஆசிர்வதித்துள்ளார்; டில்லி மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவை செய்ய, அவர் மேலும் அருள் புரிவார்' என, அடக்கத்துடன் சொல்லியுள்ளார், கெஜ்ரிவால். இதன் மூலம், யாராலும் வெல்ல முடியாத, டில்லியின் செல்ல மகன் என்பதை நிரூபித்துள்ளார். வாழ்த்துவோம் அவரை!
எல்.முருகராஜ்,
பத்திரிகையாளர்,
தொடர்புக்கு:
மொபைல்: 99443 09637
இ -- மெயில்: murugaraj@dinamalar.in