வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லி சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் வசிக்கும் தொகுதிகளில், 'ஜஹான் ஜூக்கி, வஹா மக்கான்' - 'எங்கே குடிசை; அங்கே வீடு' என்ற, கோஷத்தை மையப்படுத்தி, தமிழக பா.ஜ.,வினர் நடத்திய பிரசாரம், நான்கு தொகுதிளில், பா.ஜ., வெற்றி பெற உதவியுள்ளது.

பிரசாரம்
நடந்து முடிந்த, டில்லி சட்டசபை தேர்தலில், மீண்டும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக, இன்று முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். 1998ல் ஆட்சியை இழந்த, பா.ஜ.,வால், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த தேர்தல், பா.ஜ.,வுக்கு தோல்வி என்றாலும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது, ஓட்டு சதவீத கணக்கு காட்டுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மூன்று தொகுதிகளை கைப்பற்றி, 33 சதவீத ஓட்டுகளை பெற்றது.தற்போது, 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, 38.51 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்து, படுபாதாளத்திற்குதள்ளப்பட்டுள்ளது.

டில்லியில் ஒட்டுமொத்தமாக, நான்கு லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கிற
தொகுதிகளில், தமிழக பா.ஜ., சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம், வானதி சீனிவாசன், நடிகையர் நமீதா, காயத்ரி ரகுராம், நடிகர் ராதாரவி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாடார்பூர், லட்சுமி நகர் போன்ற பகுதிகளில், தமிழக பா.ஜ.,வினர், வீடு வீடாக சென்று, திண்ணை
பிரசாரம் செய்தனர். குறிப்பாக, 'ஜஹான் ஜூக்கி, வஹா மக்கான்' என்ற, 'எங்கே குடிசை; அங்கே வீடு' கோஷத்தை மையப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தில், தமிழக பா.ஜ.,வினர் ஈடுபட்டனர்.
வாக்குறுதிஅதன் காரணமாக, தமிழர்கள் வசிக்கும் நான்கு தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற முடிந்துள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழர்கள் வசிக்கும் பகுதிகள், குடிசைகளாக உள்ளன. அதனால், 'எங்கே குடிசை இருக்கிறதோ, அங்கே வீடு கட்டித் தரப்படும்' என்ற
வாக்குறுதியை, தேர்தல் அறிக்கையில் இடம்பெறவைத்தோம்.இந்த பிரசாரத்திற்கு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழர்களின் ஓட்டுகள், ஆம் ஆத்மி கட்சிக்கு
விழவில்லை.
தமிழக காங்கிரஸ் சார்பில், விஜயதாரணி, மயூரா ஜெயகுமார், டி.என்.முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பிரசாரம் மேற்கொண்டும், டில்லி வாழ்
தமிழர்களிடம் எடுபடவில்லை. அதனால் தான் அக்கட்சியினர், தமிழர் பகுதிகளிலும், டிபாசிட் இழந்தனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த தேர்தலை விட, 10 ஆயிரம்
ஓட்டுகளை, குறைவாக பெற்றுள்ளார்.
துணை முதல்வரோ, போராடி தான் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர்கள், 26 சட்டசபை தொகுதிகளில், குறைந்த வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். பா.ஜ.,வுக்கு மோசமான தோல்வி அல்ல; ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றியும் அல்ல.இவ்வாறு, பா.ஜ.,
வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -