மொரதாபாத்: உத்தர பிரதேசத்தில், போலீஸ் தடை உத்தரவை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய, காங்கிரஸ் பிரமுகரிடம், 1 கோடி ரூபாய் வசூலிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில், உள்ள மொரதாபாதில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், போலீசார் தடை உத்தரவு பிறப்பித்தனர். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், கடந்த லோக்சபா தேர்தலில், மொரதாபாத் தொகுதியில், அக்கட்சி சார்பில் போட்டியிட்டவருமான இம்ரான் பிரதாப்கார்கி, தடை உத்தரவை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இதில், இரு பிரிவினருக்கும் இடையே வன்முறையை துாண்டும் விதமாக, அவர் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தின்போது, வன்முறை சம்பவங்களை தடுப்பதற்காக, துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடந்ததில் இருந்து, எட்டு நாட்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும், இதற்காக மாவட்ட நிர்வாகம், 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாதுகாப்புக்காக செலவிட்ட தொகையை, தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காகவும், வன்முறையை துாண்டும் வகையில் பேசியதற்காகவும், இம்ரான் பிரதாப் கார்கிடம் இருந்துவசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, இம்ரானுக்கு, மொரதாபாத் மாவட்ட நிர்வாகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இது குறித்து இம்ரான் கூறுகையில், ''குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறேன். ஆனால், மொரதாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, ஆச்சரியம் அளிக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE