டாரஸ் லாரில ரேஷன் கடத்துவேன்...! அதிர வைக்கும் உடன் பிறப்பு ஆடியோ வைரல்| Dinamalar

'டாரஸ்' லாரில ரேஷன் கடத்துவேன்...!' அதிர வைக்கும் ' உடன் பிறப்பு' ஆடியோ வைரல்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020
Share
கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள பிரபலமான ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். நிகழ்ச்சி துவங்க சற்று தாமதமானதால், பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, காவல்துறையில் உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியும், அரசியல் பின்புலத்துடன், 'மாவட்டத்தை' ஆட்டிப்படைக்கும் 'லேடி' அதிகாரியும், 'மப்டி'யில் கடந்து
 'டாரஸ்' லாரில ரேஷன் கடத்துவேன்...!' அதிர வைக்கும் ' உடன் பிறப்பு' ஆடியோ வைரல்

கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள பிரபலமான ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். நிகழ்ச்சி துவங்க சற்று தாமதமானதால், பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காவல்துறையில் உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியும், அரசியல் பின்புலத்துடன், 'மாவட்டத்தை' ஆட்டிப்படைக்கும் 'லேடி' அதிகாரியும், 'மப்டி'யில் கடந்து சென்றனர்.அவர்களை பார்த்த சித்ரா, ''ஏய் மித்து, அங்க பாரு, அவுங்க யாருன்னு தெரியுதா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''அக்கா, இப்ப, ஓட்டல்ல 'ரூம்' போட்டுதானே, எல்லா விஷயத்தையும் 'டிஸ்கஸ்' பண்றாங்க. இவுங்க ரெண்டு பேரும்தானே, காவல்துறையையே ஆட்டிப் படைக்கிறாங்க.

'சனிக்கிழமை இரவு விருந்து' கலாசாரத்தை துவக்கி வச்சதே, இவுங்க ரெண்டு பேருதான் சொல்லுறாங்க,,'' என்றாள்.''அடக்கடவுளே,'' என்ற சித்ரா, ''ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து ரொம்பவே அதிகமாகிடுச்சாமே,'' என, கொக்கி போட்டாள்.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். மோசடி தொடர்பா மனு கொடுத்தா, வழக்கு பதியாம கட்டப்பஞ்சாயத்து செஞ்சே முடிச்சு வச்சிடுறாங்களாம். ரூரல் லிமிட்டுல போலீஸ் அதிகாரிகளை, நீலகிரி மாவட்டத்துக்கு துாக்கியடிச்சிட்டாங்க''''ஏன்?''''சிறுமி பாலியல் வழக்குல, ஐகோர்ட்டுல நடந்த விசாரணையில, கோவை போலீசுக்கு அவப்பெயர் ஏற்பட்டதால, துடியலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் லேடி இன்ஸ்., சையும் அங்க அனுப்பிட்டாங்க,'' என்ற மித்ரா, ''விசாரணைக்கு போன, ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க 'பம்மிட்டு', திரும்பி போயிட்டாங்களாமே,'' என, கிளறினாள்.

''அது, ஒனக்கு தெரிஞ்சும் போச்சா. கோர்ட் கேம்பஸ் பார்க்கிங் ஏரியாவுல ஒரே பதிவு எண் எழுதி, ரெண்டு புல்லட் நின்றிருந்தன. விஷயம் தெரிஞ்சு ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க விசாரணை நடத்துனாங்க.''ரெண்டு வக்கீல்களுக்கு சொந்தமானதுன்னு சொல்லியிருக்காங்க. சில வக்கீல்கள் சேர்ந்து போலீஸ்காரங்களை சமரசம் பேசி, திருப்பி அனுப்பி வச்சிட்டாங்க. ஒரே பதிவு எண்ணை இரண்டு வாகனங்களில் எழுதி ஓட்டுறது சட்டப்படி குற்றம். திருட்டு வண்டியா கூட இருக்கலாம்.

இது சம்பந்தமா 'ஆக் ஷன்' எடுக்காம, திரும்பி வந்ததுனால, போலீஸ்காரங்க மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு,''அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர், ரெஸ்டாரென்டில் இருந்து, வரவேற்பு அறைக்கு வந்து அமர்ந்தார்.அவரை பார்த்த மித்ரா, ''நம்மூர்ல இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை துவக்கணும்னு, டில்லியில மனு கொடுத்துட்டு வந்திருக்காங்களே,'' என, பொடி வைத்து பேசினாள்.

''மித்து, எப்பவும் பொது நலத்தோடு சுயநலமும், லேசா கலந்திருக்கும். நம்மூரை சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருத்தரு, வெளிநாடுகளில் 'ஜூவல் பிசினஸ்' செய்றாரு. பிசினஸ் விஷயமா, அடிக்கடி விமானத்துல பறக்க வேண்டியிருக்குமே. நம்மூருக்கு புது வசதி வந்தா, சந்தோஷமா நெனைக்கணும்,'' என்ற சித்ரா, நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்தாள்.

ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்தது. இருவரும் ரெஸ்டாரென்ட் சென்று, பில்டர் காபி ஆர்டர் செய்தனர். சற்றுத்தள்ளி இருந்த மேஜையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரி ஒருவர், அரசியல் பிரமுகர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, அவுங்க யாருன்னு தெரியுதா,'' என, கேட்டாள்.''தெரியாது,'' என, சித்ரா கையை விரிக்க, ''நம்ம மாவட்டத்துல எல்லா குடும்பத்துக்கும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கொடுத்துட்டாங்க. இருந்தாலும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு, லாரி லாரியா கடத்திட்டு போறாங்க.

தி.மு.க.,வை சேர்ந்த ரெண்டு பிரமுகர்கள் மொபைல் போனில் பேசிய ஆடியோ, 'வாட்ஸ்ஆப்'புல வைரலா பரவிக்கிட்டு இருக்கு.அதுல...''ஏனுங்க, நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா, எல்லா ரேஷன் கடையும் நீங்கதான் 'பிடிப்பீங்கன்னு' (கன்ட்ரோல்ல வந்துரும்னு) சொல்றாங்க என ஒருவர் கேட்க... மறுமுனையில் இருப்பவர், இப்ப என்ன ரேஷன் கடையை பிடிக்கிறதில்லையான்னா என, கேட்க, 'இல்ல, ஒன்றிரண்டு மிச்சம் மீதி வச்சிருக்கீங்களே; பூராவே நீங்க எடுத்துக்குவீங்கன்னு சொல்றேன்.

''அடுத்தது நம்ம ஆட்சிதான். வரட்டும். அப்ப, என்னோட தொழிலையே மாத்திடுவேன். பெரிய டாரஸ் லாரி வாங்கி, 'எஸ்கார்டு' போட்டு, ரேஷன் அரிசிய கேரளாவுக்கு கொண்டு போவேன்... துணிஞ்சவனுக்கு துாக்கு மேடை பஞ்சு மெத்தை...'' என்கிறார், என, மித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, 'நிசாரும் - இமயனும் வர்றன்னாங்களே... காணோமே' என்றவாறு, ஒருவர் தனக்குத்தானே பேசியவாறு கடந்து சென்றார்.

''மித்து, இப்ப, ஏ.டி.எம்.கே., ஆட்சி நடக்குது. ஆனா, டி.எம்.கே.,காரங்க துணிச்சலா ரேஷன் அரிசி கடத்துறாங்க. இதுவரைக்கும் ஒருத்தரையும் கைது செய்யலை. போலீஸ்காரங்களும் கூட்டா? மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்குது. எதிர்க்கட்சிக்காரங்களா இருந்தாலும், மினிஸ்டர் ஏரியாவுலேயே வாலாட்டுறாங்க பாரு. 'சிஸ்டம்' சரியில்லைன்னு ரஜினி சொல்றது இதைத்தானோ'' என்ற சித்ரா, ''நம்மூரு போலீஸ்காரங்க, கேரளாவுக்கு போயி, திருடனை துாக்கிட்டு வந்தாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவுண்டம்பாளையம் ஏரியாவுல நகை, பணம் திருடு போச்சு; 134 பவுன் நகை, மூணு லட்சம் ரூபாய் காணலைன்னு புகார் சொல்லியிருக்காங்க. போலீசாரிடம் சிக்கிய திருடனோ, 'ஐயா, அவ்ளோ நகை திருடலைங்க. 50 பவுன் நகை, மூணு லட்சம் ரூபாய்தாங்க இருந்துச்சு.

'வேணும்னா அடகு வச்ச ரசீதை காட்டுறேன்னு சொல்லியிருக்கான். போலீஸ்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்க. 'கம்ப்ளைன்ட்' கொடுத்தவங்களிடமும், திருட்டு நகையை அடமானம் வாங்குன வியாபாரியிடமும் விசாரிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்றபடி, ஓட்டலை விட்டு வெளியே வந்த மித்ரா, 'பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை எடுத்து வந்து கிளப்பினாள்.

'யூ டேர்ன்' எடுத்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி, ஸ்கூட்டர் பறந்தது.''ஏம்ப்பா, கலெக்டர் ஆபீசுல வேலைபார்க்குற 'லேடி' ஊழியர்கள் அதிருப்தியில இருக்காங்களாமே,'' என்றாள் மித்து.''ஆமாக்கா, ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த ஒருத்தரு, 'லேடி' ஊழியர்களிடம், வரம்பு மீறி, கொஞ்சி பேசுறாராம். அவரு கூப்பிட்டாலே, செக் ஷன் ஊழியர்கள் நடுங்குறாங்க. நைட், 8:30 மணி வரைக்கும் வேலை பார்க்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கறதாவும் சிலர் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, கலெக்டர் ஆபீசில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.

அப்பகுதியில், எஜூகேசன் டிபார்ட்மென்ட் ஜீப் நின்றிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''சி.இ.ஓ., அய்யண்ணன், நம்மூருக்கு வந்து மூணு மாசம்தானே ஆச்சு; ஏன் மாத்திட்டாங்க,'' என, கேட்டாள்.''கல்வித்துறையில கோலோச்சிக்கிட்டு இருக்கிற, ரெண்டெழுத்து 'லேடி' அதிகாரிதான் காரணம்னு, ஆசிரியர்கள் மத்தியில, பேச்சு ஓடிட்டு இருக்கு. அவருக்கும், கோபிக்காரரின் மகன், மருமகள் நெருக்கமான உறவு இருக்காம். அதை பயன்படுத்தி, கல்வித்துறை உயரதிகாரிகளை பந்தாடுறாங்களாம்.

இந்தம்மாவோட பொய் புரட்டல் தெரியாம, ஆக் ஷன் எடுக்கறவங்க மேலதான், இப்ப டீச்சர்ஸ் கோபம் திரும்பியிருக்கு,''.''சி.இ.ஓ.,க்களை அடிக்கடி மாத்திட்டு இருந்தா, பொதுத்தேர்வுல எப்படி ரேங்க் வாங்குறதுன்னு ஆசிரியர்கள் புலம்பிட்டு இருக்காங்க. டிரான்ஸ்பர் உத்தரவை கேன்சல் செய்யணும்னு சில தலைமையாசிரியர்கள், அமைச்சர் வேலுமணியை சந்திச்சு முறையிட்டு இருக்காங்க. டிரான்ஸ்பரை நிறுத்தி வைப்பாங்களான்னு தெரியலை,''''மித்து, எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் நியூஸ் தெரியும்.

நம்மூர்ல சிலம்பம், யோகா, கராத்தே விளையாட்டுகளுக்கு மட்டும், 30க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் இருக்காங்க. இதுல பாதிக்கு மேல 'டுபாக்கூர்'. இவுங்களுக்குன்னே அசோசியேசன் வச்சு, மாசம் ரெண்டு போட்டி நடத்துறாங்க.''தலைக்கு, ரூ.1,000ல் இருந்து, 3,000 வரைக்கும் கட்டணம் வசூலிக்கிறாங்க. குழந்தைங்க விளையாட்டுகளை கத்துக்கிறாங்களோ, இல்லையோ, ஒரு மெடலும், சர்ட்டிபிகேட்டும் கொடுத்திடுறாங்களாம். இப்ப, விளையாட்டையும் வியாபாரமா சில பேரு மாத்திட்டு இருக்காங்க,''

''அக்கா, பிசினஸ்ன்னு சொன்னதும், இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'ஸ்மார்ட் சிட்டி'யில, ரூ.377.54 கோடியில குளங்களை மேம்படுத்துறாங்கள்ல. இன்னும் ஒரு குளத்துக்கு மட்டும் டெண்டர் இறுதி செய்ய வேண்டியிருக்கு. ரெண்டெழுத்து, மூன்றெழுத்து கம்பெனிக்காரங்க மோதுறாங்க. மூன்றெழுத்து கம்பெனிக்காரங்களுக்கு 'பைனல்' ஆகும்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, வீட்டுக்குச் செல்ல, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள்.''ஏம்பா, அதெல்லாம் ஊரு உலகத்துக்கு தெரியாததா? அவுங்க ராஜ்ஜியம்தானே நம்மூர்ல நடக்குது,'' என்ற சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X