திருவனந்தபுரம்: கேரளாவில் ஹிந்து சிறுமியை தத்தெடுத்த முஸ்லிம் குடும்பம், சிறுமி வளர்ந்ததும் ஹிந்து முறைப்படியே கோயிலில் திருமணம் நடத்தி வைத்தது அனைவரையும் கவர்ந்தது.
கேரளா மாநிலம் கசரகாட் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்ஹங்காட்டில் உள்ள ஹிந்து கோயிலின் உள்ளே முஸ்லிம்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பர்கா அணிந்த பெண்கள் சூழ்ந்து நிற்க, மேளம் முழங்க, ராஜேஸ்வரி என்பவரை விஷ்ணு என்பவர் திருமணம் செய்தார். ஹிந்து கோயிலில் முஸ்லிம்களின் வாழ்த்து மழையில் அரங்கேறிய இந்த திருமணம் தான் அனைவரின் வைரல் டாப்பிக்காக உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி மற்றும் அவரது பெற்றோர் கேரளாவிற்கு குடியேறியுள்ளனர். சிறுமிக்கு 10 வயது இருக்கும் போது அவரது தாய் - தந்தை இறந்துள்ளனர். இதனால் அனாதையாக தவித்த ஹிந்து குடும்பத்தை சேர்ந்த சிறுமியை, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்துல்லா - கதிஜா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்தனர். இவர்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் ராஜேஸ்வரியையும் மகளாக சேர்த்து வளர்த்து வந்தனர். தாங்கள் ஒரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சிறுமியை ஹிந்து முறைப்படியே வளர்த்து வந்துள்ளனர்.

அவர்களின் வளர்ப்பில் படித்த ராஜேஸ்வரிக்கு தற்போது 22 வயது ஆனதால் அவருக்கு திருமணம் செய்துவைக்க அப்துல்லா - கதிஜா தம்பதியினர் விரும்பினர். பிறப்பு முதல் ஹிந்துவாக வளர்ந்த ராஜேஸ்வரியின் திருமணத்தையும் ஹிந்து முறையிலேயே நடத்த முடிவு செய்தார். இதற்காக விஷ்ணு பிரசாத் என்ற இளைஞரை, இருவரின் சம்மதத்துடனும் திருமணம் நிச்சயித்தனர்.
இதற்காக புடவை, தங்க ஆபரணங்கள் அணிந்து முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் ஆசியுடன் ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தேறியது. தன் மதத்தின் சாயல் இல்லாமலும், அதனை வற்புறுத்தாமலும், சிறுமியின் சொந்த மத அடையாளத்துடனேயே அவர்களின் வாழ்க்கையை முழுமையாக்கிய அப்துல்லா - கதிஜா தம்பதியினரை அனைவரும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE