இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையான Deepfake ஐ பயன்படுத்தி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி டில்லி சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் செய்தது தெரிய வந்துள்ளது. உலகிலேயே தேர்தல் பிரசாரத்திற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

டில்லி தேர்தலுக்கு முன் புதிய வாக்காளர்களை கவருவதற்காக மனோஜ் திவாரி பேசுவது போன்ற 44 விநாடிகள் கொண்ட வீடியோ உலா வந்தது. இந்த வீடியோவை ஆய்வு செய்ததில் இதில் Deepfake எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதாவது இம்முறையில் ஒருவர் பேசிய வீடியோவை, நமது மொழியில் மாற்றிக் கொள்ளலாம். பேசுபவரின் வாய் அசைவுக்கு ஏற்றவாறு வார்த்தைகளையும், மொழியையும் மாற்ற முடியும்.

மனோஜ் திவாரி, கெஜ்ரிவாலை விமர்சித்தும், பா.ஜ.,விற்கு ஓட்டளிக்கும்படியும் கேட்டு ஆங்கிலத்தில் பேசி உள்ளார். இந்த வீடியோ deepfake முறையில் இந்தி மற்றும் அரியானா மொழிகளில் மாற்றப்பட்டுள்ளது. மனோஜ் திவாரியின் வாய் அசைவிற்கு ஏற்றாற் போல் மற்றொருவரின் குரலில், வேறு மொழியில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. இரு மொழிகளில் மனோஜ் திவாரி பேசிய வீடியோ சுமார் 5800 வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. டில்லியில் சுமார் ஒன்றரை கோடி பேர் இந்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.

சண்டிகரை சேர்ந்த Ideaz Factory என்ற நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோவை மொழி மாற்றம் செய்து கொடுத்துள்ளது. இதற்காக தாங்கள் பணம் கொடுக்கவோ, ஒப்பந்தம் ஏதும் போடவோ இல்லை என டில்லி பா.ஜ., மீடியா அணி தெரிவித்துள்ளது. இது யாரையும் பாதிக்காத வகையில், நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பா.ஜ., கூறுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்பட்டு, அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், சிலரின் வீடியோ மாற்றப்பட்டு, சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் சேர்க்கப்பட்டு, பரப்பப்படவும் வாய்ப்பு உள்ளதாக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE