சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 22, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: ஈழத்தில், 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணையை, இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என, ஐ.நா., மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த விசாரணையில் இருந்தே விலகிக் கொள்வதென, இலங்கை முடிவு செய்துள்ளது. இதனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பது, கேள்விக்குறி ஆகியுள்ளது.

'டவுட்' தனபாலு: இது போன்ற அறிக்கையை, நீங்களும் தான், எத்தனையோ முறை வெளியிட்டுள்ளீர்கள். அப்போது கிடைத்த பலன் தான், இப்போதும் கிடைக்கும் என்பது ஏன் உங்களைப் போன்ற கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் போகிறது? பிற நாட்டு விவகாரத்தில் இவ்வளவு அக்கறை எடுக்கும் நீங்கள், எத்தனை இலங்கை தமிழர்களுக்கு வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன்' உள்ளிட்ட அனைத்தையும், முழுமையாக தடை செய்தால் மட்டுமே, டெல்டா பகுதியை, வேளாண் பாதுகாப்பு மண்டலம் என அறிவிப்பது, செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாக போய் விடும்.

'டவுட்' தனபாலு: இப்படி வெற்றுக் கோஷம் போடுபவர்கள் தான், நம் மாநிலத்தில் அதிகரித்து வருகின்றனர். இதற்கு காரணம், கண்ணில் தெரியும் விவகாரங்களுக்கும், தெரியாத விவகாரங்களுக்கும், நம் தலைவர்கள், ரெடிமேடாக அறிக்கை அளிப்பது தானோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. பத்திரிகைகளும், 'டிவி'களும் இதுபோன்ற அறிக்கைகளுக்கு மதிப்பளிக்கா விட்டால், தலைவர்களும் நிறுத்திக் கொள்வரோ என்ற,'டவுட்' ஏற்படுகிறது.

த.மா.கா., தலைவர் வாசன்:கடந்த வாரம், இந்தியா வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, நாடு திரும்பிய ஓரிரு நாட்களில், இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது மிகுந்த வேதனை அளிக்கிறது. மத்திய அரசு, இனியும் பொறுமை காக்காமல், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடராமல் இருக்க, உடனே, இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: இந்த விவகாரம் குறித்து நடுநிலையாளர்கள், 'கடலில் அலை இருக்கும் வரை இந்தப் பிரச்னை தீராது' என்கின்றனர். அதனால், வேறு, 'சப்ஜெக்ட்' இல்லாததால், இலங்கை மீனவர் பிரச்னையை நீங்கள் கையில் எடுத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்: இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட, நாம் சில செய்திருக்கிறோம். ஆனால், இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரீட்சை வெகு அருகில் உள்ளது. ஓய்வு மட்டுமின்றி, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை. அடுத்து வரும் நாட்கள் எல்லாம், செயல் மட்டுமே. 2021ல் மக்கள் பணிகளை துவங்குவோம்.

'டவுட்' தனபாலு: கட்சி துவக்கி, இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், எதுவுமே நீங்கள் செய்யவில்லை என, தமிழக மக்களும், சக எதிர்க்கட்சிகளும் கூறி வரும் நிலையில், 'பாராட்டும்படி சில செய்துள்ளோம்' என்கிறீர்களே. அது, வெறும் பேச்சு தான் என்பது, 'டவுட்' இல்லாமல், தமிழக மக்களுக்கு புரிகிறது. வரும் நாட்களிலும், அதுபோன்றே உங்களின் செயல்பாடு இருக்கும் என்பதிலும், அவர்களுக்கு, 'டவுட்' இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு, 'கிரிமிலேயர்' எனப்படும், வசதியானவர் என்ற பிரிவு, எந்த அளவுக்கு தடையாக உள்ளது என்பதை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டுக்கு கிரிமிலேயர் தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை நீக்க, மத்திய அரசு முன் வர வேண்டும்.
'டவுட்' தனபாலு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குப் பின், நாட்டில் எழுந்துள்ள குழப்பங்கள், பிரச்னைகள் இன்னும் குறையாத நிலையில், உங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என எப்படி நம்புகிறீர்களோ தெரியவில்லை. பொந்துக்குள் இருக்கும் பாம்பு போன்ற கிரிமிலேயர் விவகாரத்தில் மத்திய அரசு இப்போதைக்கு தலையிடாது என்பது, 'டவுட்' இல்லாமல் அனைவருக்கும் தெரிந்தது. உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்பது தான் என் டவுட்!

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., மற்றும் பன்னீர்செல்வம்: சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக, பாதக செயல்களை, மனசாட்சியின்றி துணிந்து செய்யும், சில எதிர்க்கட்சிகளும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை, முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில், நாளுக்கு நாள், அ.தி.மு.க., அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதை பொறுக்க முடியாமல், பொய் பிரசாரங்களை துாண்டிவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க., முயற்சிப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

'டவுட்' தனபாலு: சட்டசபையிலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை, காரசாரமாக, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் காய்ச்சு எடுத்த நிலையில், இப்போது அதுபோன்றே அறிக்கையும் வெளியிட்டுள்ளீர்கள். இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடத்தை, முஸ்லிம்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடிவு செய்து விட்டீர்களோ என்பதில், யாருக்கும் இனி, 'டவுட்' வராது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X