சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்களுக்கு நன்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது!

Added : பிப் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

மக்களுக்கு நன்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது!

கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு, அதுபோன்ற 'மெகா' ஊழல் குற்றச்சாட்டுகள் எதையும், காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகளால், மத்திய, பா.ஜ., அரசு மீது, சுமத்த முடியவில்லை.கொஞ்ச காலம், 'ரபேல்' போர் விமான ஊழல் எனக் கூச்சலிட்டனர், எதிர்க் கட்சியினர். ஆனால், உச்ச நீதிமன்றம், 'ஊழல் எதுவும் இல்லை' எனக் கூறி, தீர்ப்பளித்து விட்டது.தங்கள் அரசியல் பிழைப்பையும், இருப்பையும் தக்க வைப்பது எப்படி என்பதை, எதிர்க்கட்சிகள் யோசிக்க துவங்கியது. இத்தருணத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு, 370ஐ ரத்து செய்ததை வைத்து, பாகிஸ்தானுக்கு தீனி போடும் வகையில், தங்கள் எதிர்ப்பை, எதிர்க்கட்சிகள் காட்டின.தற்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, 'மைனாரிட்டியின் காவலர்கள்' என்ற போர்வையில், படிக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் வீதிக்கு அழைத்து, எதிர்க்கட்சிகள், 'களேபரம்' செய்கின்றன.நாட்டின், பாதுகாப்பு உள்ளடங்கிய இச்சட்டம் குறித்த உண்மைகள், எதிர்க்கட்சிகளுக்கு புரியாதா?'பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள, இச்சட்டம் குறித்த தெளிவு, பெரும்பான்மை மக்களுக்கு ஏற்பட்டு விடுமே; தங்கள் அரசியல் இருப்பும், பிழைப்பும் பங்கமாகி விடுமே' என்ற அச்சத்தால் தான், தவறான நோக்கம் கற்பித்து, பீதியை கிளப்புகின்றன, எதிர்க்கட்சிகள்.நாட்டின் பாதுகாப்பு நலனை விட, தங்களின் அரசியல் பிழைப்பு பெரியதாகி விட்டது. துாங்குபவரை எழுப்பலாம்; ஆனால், துாங்குவது போல் நடிப்பவரை எழுப்ப இயலாது; இது தான், இன்று எதிர்க்கட்சிகளின் ஆபத்தான நிலை.இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டால், நாட்டுக்கு நல்லது!

பஞ்சமி நிலவிவகாரம் மீண்டும்விஸ்வரூபமாகிறது!
ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் என சவால் விட்டிருந்தார், ஸ்டாலின். இப்போது, 'அந்த நிலமே, தங்களுடையது அல்ல; அந்த நிலத்தில், 'முரசொலி' அலுவலகம் வாடகைக்கு தான் இயங்குகிறது' என, ஸ்டாலினுக்கு பதிலாக, அவரது கட்சியைச் சார்ந்த, டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.இத்தருணத்தில், 'முதலாளித்துவம் பற்றி ஸ்டாலின் பேசலாமா' என்ற தலைப்பில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில், 'சென்னை அடுத்த, மண்ணிவாக்கத்தில் இருக்கும், 300 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 4.6 கோடி ரூபாய். 'ராயல்' பர்னிச்சர் என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய். 'கொரமண்டல்' சிமென்ட் கம்பெனியில் இருக்கும், 11 சதவீத பங்குகளின் மதிப்பு, 50 கோடி ரூபாய்.'சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும், 'ரெயின்போ' இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு, 48 கோடி ரூபாய். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும், ஸ்டாலின் மகன் உதயநிதியின், 'ஸ்னோ பவுசிங்' சென்டரின் சொத்து மதிப்பு, 2 கோடி ரூபாய். இப்படி, ஸ்டாலினும், அவர் குடும்பத்தினரும், பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக திகழ்கின்றனர்.'ஆறு கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்திருக்கும், சென்னை, கோடம்பாக்கத்தில் இயங்கும், 'முரசொலி' அலுவலகத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய். 'முரசொலி' நாளிதழ் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்குகிறது என, கூறினால் யார் நம்புவர்' என்று, சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.இதை மேற்கொள் காட்டி, பா.ம.க., தலைவர், ஜி.கே.எஸ்.மணியும் குற்றம் சாட்டியுள்ளார். அதில், 'முரசொலி' தொடர்பாக, வெளியில் ஒரு நிலைப்பாட்டையும், உள்ளுக்குள் ஒரு நிலைப்பாட்டையும், தி.மு.க., கடைபிடித்து வருவது, மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்' என அவர் கூறியுள்ளார்.உண்மையிலேயே, முரசொலி அலுவலகம் சொந்தக் கட்டடமா, அல்லது வாடகைக் கட்டடமா என்பதை, இங்கே விளக்க விரும்புகிறேன்.'அஞ்சுகம்' பதிப்பகத்திற்கு, 'முரசொலி' நாளிதழ் சொந்தமாம்; யார் அந்த அஞ்சுகம். கருணாநிதியின் தாயாரும், ஸ்டாலின் பாட்டியும், உதயநிதியின் கொள்ளுப் பாட்டி தான், அவர்!

சென்னை - தி.மலைக்குதினசரி ரயில்இயக்க வேண்டும்!
எஸ்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்திற்கு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இது தவிர, அருணாசலேஸ்வரர் கோவில், ரமணர், விசிறி சாமியார், சேஷாத்ரி ஆசிரமங்கள், செஞ்சி கோட்டை, சாத்தனுார் அணை போன்ற இடங்களுக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக உள்ளது.பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை எழும்பூர் - திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் கிடையாது.காட்பாடியில் இருந்து விழுப்புரம், புதுச்சேரிக்கு, குறைந்த அளவில், பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில், தாம்பரம் பிளாட்பாரத்தில் காலை, ௯:௦௦ மணி முதல், மாலை ௬:௦௦ வரை நிறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் ரயிலை இயக்கினால், பயணியருக்கு வசதியாக இருக்கும்; இதை ரயில்வே துறை நிறைவேற்ற வேண்டும்.திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே, செஞ்சி, கீழ்பென்னாத்துார் வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கும் பணி, 10 ஆண்டுகளில், ௨௦ சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இந்த அகலப் பாதை ரயில் திட்டத்துக்கு, கூடுதல் நிதி ஒதுக்கி, விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும்.சென்னை கடற்கரை - வேலுார் இடையே இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து, பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலுார், ஆரணி ரோடு, போளூர் வழியாக, திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் இயக்கலாம்.சென்னை - திருவண்ணாமலை இடையே தினசரி ரயில் இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உண்மை நோக்கம் இது தான்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஞ்சாயத்து உறுப்பினர்கள் முதல், லோக்சபா எம்.பி.,க்கள் வரை, அவைகளில் குற்றப் பின்னணி கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உள்ளது.குற்றப் பின்னணி கொண்டோர், பஞ்சாயத்துக்களிலோ, நகரசபைகளிலோ, சட்டசபைகளிலோ அல்லது பார்லி.,யிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது என்பது தான்,நீதிமன்றத்தின் உண்மையான நோக்கம்.கிரிமினல் குற்றமோ, சிவில் வழக்கோ, அது எத்தகைய வழக்காக இருந்தாலும், வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்போர், அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை, எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது.குற்றம் சாட்டப்பட்டிருப்போர், 'நிரபராதி'என, தீர்ப்பளிக்கப்பட்டால், அதன்பின் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடலாம்.'குற்றவாளி' என, நிரூபிக்கப்பட்டு, ஒரு நாள் சிறை தண்டனை விதிக்கப் பட்டாலும் சரி, ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் சரி, அன்னார், அதன் பின், எந்த தேர்தலிலும் போட்டியிடவே கூடாது.இப்படி ஒரு தீர்ப்பை அளித்திருக்குமானால், அரசியலில் குற்றவாளிகள் நுழையவோ, மக்கள் பிரதிநிதிகளாக போட்டியிடவோ, வெற்றி பெற்று அமைச்சர் பதவியில் அமர்ந்து கோலோச்சுவதோ,முற்றிலுமாக தடுக்கப்பட்டு இருக்கும்.தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து, நன்னடத்தை என்ற அடிப்படையில், தண்டனை காலத்தை குறைக்கும், ஒரு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இத்தருணத்தில், ஊழல் செய்து தண்டனை அனுபவித்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான, சசிகலா, நன்னடத்தை விதியின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற யூகம் உலா வந்து கொண்டிருக்கிறது.ஊழல் குற்றவாளிகளுக்கு, நன்னடத்தை விதி பொருந்தாது. அதனால், சசிகலா தண்டனை காலம் முடியும் முன்னரே, விடுதலையாவார் என்ற பேச்சுக்கே இடமில்லை. சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை கட்டாவிட்டால், மேலும் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனைஅனுபவிக்க நேரிடும்.இப்படி, இருவேறு கருத்துக்கள்வலம் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், சசிகலாவின் அபிமானிகளில் ஒருவரான, அ.ம.மு.க., செய்தி தொடர்பாளர் வெற்றிவேல், 'சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று நீதி மன்றம், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை' என, பேட்டியில் திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார்.இது குறித்து, ஒரு வழக்கு தொடரப்பட்டு, அது சில ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்பு உண்டு!

வேளாண் மண்டலத்தில்கடலுாரை சேர்க்காததுவருத்தமளிக்கிறது!

வி.எம்.மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கரூர் ஆகிய காவிரி, 'டெல்டா' மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்து இருக்கிறார்; மிக்க மகிழ்ச்சி!காவிரி பாயும், 'டெல்டா' மாவட்டங்களில், கடலுாரும் சேர்த்து தான் சொல்லப்படுகிறது. ஆனால், அதை, விவசாய மண்டலத்தில், ஏனோ சேர்க்கவில்லை. கடலுாரை தாண்டியவுடன், விவசாய உற்பத்தி பெரிதும் நடைபெற்று வரும் பகுதிகள் என்றே கூறலாம்.கொள்ளிடம் ஆறும், சிதம்பரத்தை ஒட்டி இருப்பதால், கடலுார், சிதம்பரம் வட்டாரங்களில், விவசாயம் செழித்து வளர்கிறது. அப்படி இருந்தும், வேளாண் மண்டலமாக்க, தமிழக அரசு ஏன் அறிவிப்பு வெளியிடவில்லை?மாறாக, கடலுாரை ஒட்டியுள்ள சிதம்பரம் செல்லும் பாதையின் ஓரங்களில், 1970ல், 'சிப்காட்' துவங்கி, 30க்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகள் துவக்கி, அப்பகுதிகளை ரசாயன பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்; காற்றும் மாசு பட்டு இருக்கிறது.நிலத்தடி நீர் கெட்டு, பல விதமான உடல் உபாதைகளும், குறிப்பாக, சுவாசப் பிரச்னையால், 25 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.இந்த லட்சணத்தில், 'அமெரிக்க ஹாஸ்திரியா நிறுவனத்துடன், 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பெட்ரோலிய சுத்தகரிப்பு ஆலை, கடலுாரில் நிறுவப்பட உள்ளது' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசி முடித்துள்ளார். ஏற்கனவே, ரசாயன பாதிப்பு, காற்று மாசு, நிலத்தடிநீர் பாழ்பட்டது; கடல் மீன்கள் இறந்து, கடல் வளம் குறைந்துள்ளது.சுவாசப் பிரச்னைகள், இப்படி வரிசையாக வந்த விளைவுகளுடன், தொழிலாளர் பிரச்னையும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகளை, ஏற்கனவே மூடி விட்டனர். இப்போது, ஒரு புதிய பூதத்தை, முதல்வர் கிளப்பியுள்ளார். இதற்கு, எந்தளவு எதிர்ப்பு வருமோ என, தெரியாது.விவசாய நிலத்தை பாழடித்து, ரசாயன தொழிலையும் துவக்கி, வேளாண் மண்டலத்தில், கடலுாரை சேர்க்காமல் கை விட்டு விட்டனர். கடலுார் மாவட்ட மக்களின் சுகாதாரமான வாழ்வாதாரத்தையும் பாழடித்துள்ளனர்.வேளாண் மண்டலத்தில், கடலுாரையும் சேர்ப்பது தான், மாவட்ட மக்களின் கோரிக்கை!

எதிர்க்கட்சியினர்போராட்டத்தைஉடனே கை விடணும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தற்போது,கையெழுத்து இயக்கம் என்ற மிகப் பெரிய, 'காமெடி'யை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார்; அப்பாவிகளை மிரட்டி கையெழுத்து வாங்குகின்றனர்.குடியுரிமைத் திருத்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன், சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்துவது, அவரை அவமதிப்பதற்கு சமம். நிச்சயமாக ஜனாதிபதி இதை ஏற்கப்போவதில்லை.இது தெரிந்தும், எதிர்க்கட்சி தலைவர், தன் அதிகாரத்தை காட்டுவதற்காக, விவரம் தெரியாத அப்பாவிகளை களம் இறக்கி, 'காமெடி' செய்து கொண்டு இருக்கிறார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. தவறான கருத்துக்களை பரப்பி, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.அரசியல் நோக்கத்துடன், மத்திய அரசுக்கு எதிராக, அப்பாவி சிறுபான்மையினரையும், கல்லுாரி மாணவர்களையும் துாண்டி, குளிர் காய்ந்துள்ளனர், எதிர்க்கட்சியினர்.இத்துடன், பள்ளிக்குழந்தைகளையும், மத உணர்வுகளை துாண்டும் வகையில், போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சமீபத்தில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், ஒரு கிறிஸ்துவ பள்ளியின் ஆசிரியைகளும், சீருடை அணிந்த மாணவியரும் அரசியல் கட்சிகள் நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார் பேருந்து நிலையம் அருகில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள், 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளையெல்லாம் உடன் நிறுத்தி வைத்திருந்தனர். இதெல்லாமே அரசியல்வாதிகளின் துாண்டுதலால், அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் தான்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் எதிர்க்கட்சியினருக்கு, தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை.இதனால், கல்லுாரி மாணவர்கள், சிறுபான்மையின மக்கள், பள்ளி மாணவர்கள் என, அனைத்து தரப்பினரையும் வீதிக்கு வரவழைத்து போராட்டம் நடத்துகின்றனர்.சிறார்கள் மனதில் பிரிவினை எனும் விஷ விதையை துாவி, சமூக ஒற்றுமையை குலைக்கும் முயற்சியை, எதிர்க்கட்சியினர் உடனடியாக கை விட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-பிப்-202012:21:52 IST Report Abuse
தமிழ்வேள் ///திருவண்ணாமலைக்கு ரயில் இயக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து முட்டுக்கட்டை போடுவது தமிழக அரசு என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? கிரிவல நாட்களில் சென்னை திருவண்ணாமலை பஸ் கட்டணம் ஒரு சீட்டுக்கு முந்நூறு ரூபாய் என்று கொள்ளையடிப்பது தடைபடும் என்று மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது ..சென்னை வேலூர் தடத்தில் யூனிட் ரயில்கள் இயக்கவிடாமலே தடுப்பது சோளிங்கரிலுள்ள ஒரு பஸ் முதலாளி [ மும்பை புனே தடத்தில் இயங்கும் யூனிட் ரயில்கள் மும்பைக்கு பணி நிமித்தம் வருபவர்களுக்கு வரப்பிரசாதம் அதேபோல வேலூர் தடத்தில் இயக்க விடாமல் தடுப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நெரிசல் இந்த திருப்பணியை செய்யும் அந்த காங்கிரஸ் காரருக்கு ஒத்து ஊதுவது தமிழக அரசு ..சென்னை வேலூர் யுனிட் ரயில்கள் இயக்கப்பட்டால் பேருந்து வசூல் குறையும் என்று ஒரு பயம் .....]
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-பிப்-202008:57:33 IST Report Abuse
தமிழ்வேள் திருவண்ணாமலைக்கு ரயில் இயக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து முட்டுக்கட்டை போடுவது தமிழக அரசு என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? கிரிவல நாட்களில் சென்னை திருவண்ணாமலை பஸ் கட்டணம் ஒரு சீட்டுக்கு முந்நூறு ரூபாய் என்று கொள்ளையடிப்பது தடைபடும் என்று மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது ..சென்னை வேலூர் தடத்தில் யூனிட் ரயில்கள் இயக்கவிடாமலே தடுப்பது சோளிங்கரிலுள்ள ஒரு பஸ் முதலாளி [ மும்பை புனே தடத்தில் இயங்கும் யூனிட் ரயில்கள் மும்பைக்கு பணி நிமித்தம் வருபவர்களுக்கு வரப்பிரசாதம் அதேபோல வேலூர் தடத்தில் இயக்க விடாமல் தடுப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நெரிசல் இந்த திருப்பணியை செய்யும் அந்த காங்கிரஸ் காரருக்கு ஒத்து ஊதுவது தமிழக அரசு ..சென்னை வேலூர் யுனிட் ரயில்கள் இயக்கப்பட்டால் பேருந்து வசூல் குறையும் என்று ஒரு பயம் .....]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X