மாய உலகிலிருந்து வெளியே வாங்க!
'இந்த சிறுமிக்கு தன் பெயரைத் தவிர, வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. இவள், தன் பெற்றோரை சேரும் வரை, 'ஷேர்' செய்யுங்கள்... சென்னை சோழிங்க நல்லுாரில் நடந்த விபத்தில் பலியானவரிடம், அவரது ஓட்டுனர் உரிமம் தவிர வேறு ஏதும் இல்லை.
'உடனடியாக ஷேர் செய்யவும்' இப்படி, தினமும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் ஏராளமான செய்திகள் உலா வருகின்றன.அந்த செய்திகளை படிப்போருக்கு, உள்ளம் உருகும்; 'ஐயோ பாவம், அந்தக் குழந்தைக்கு என்ன ஆனதோ...' என, நெஞ்சம் பதைபதைக்கும். உண்மையில் அந்த செய்தி, பல ஆண்டுகளுக்கு முன் பகிரப்பட்டதாக இருக்கும். அப்போது சிறுமியாக இருந்தவளுக்கு, இப்போது கல்யாணம் கூட நடந்திருக்கலாம்.
ஆனாலும், அந்த செய்தி, சுற்றில் வந்து கொண்டே இருக்கும்; பகிரப்படும் அல்லது 'பார்வர்டு' செய்யப்படும் செய்திகளுக்கு அழிவே கிடையாது.ஒன்பது தலை நாகம் என்பது, மாயாஜால சினிமாவில் மட்டுமே பார்க்க கூடியதே தவிர, உண்மையில் கிடையாது. சர்க்கரை நோயை ஒரு வாரத்தில் விரட்ட முயற்சி செய்து, வாழ்நாளை ஒரு வாரத்தில் முடித்து விடக் கூடாது.ஏனென்றால், ஒருவருக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய மருந்து, இன்னொருவருக்கு ஒத்துக் கொள்ளாது. அதனால், சமூக வலைதள மருத்துவர்கள் உதவி, நமக்கு வேண்டாம். 'நள்ளிரவில் தோன்றிய பேய்... இதை ஷேர் செய்தால் உடனே நல்லது நடக்கும்' என்று, ஏதாவது ஒரு கடவுளின் படத்தை போட்டு, செய்தி அனுப்புகின்றனர்.
அதைப் பார்த்தால், அந்த கடவுள் நிச்சயம் கவலைப்படுவார். 'இப்படி என்னை அவமானப்படுத்துகின்றனரே...' என்று!ஏதாவது ஒரு பரிதாபமான குழந்தையின் படத்தைப் போட்டு, 'இந்தக் குழந்தைக்கு ஆப்பரேஷன், இத்தனை லட்சம் தேவைப்படுகிறது. இந்த செய்தியை பகிர்ந்தால், பகிர்வு ஒன்றுக்கு, 1 ரூபாய் கிடைக்கும். 'எனவே, பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள்' என்பது போன்ற, 'பார்வர்டு' செய்தியை பார்த்தால், கண்களை மூடிக் கொண்டு, கடந்து போய் விடுங்கள்.ஏனென்றால், இந்த மாதிரி செய்தியை பரப்புவதால், அந்த மொபைல் போன் சேவை வழங்கும் கம்பெனிக்கு வேண்டுமானால், லாபம் கிடைக்குமே தவிர, வேறு யாருக்கும் பயன் இருக்காது.
உள்ளங்கைகளுக்குள் உலகம் சுருங்கிய பின், சமூக வலைதளங்களில் உலாவும் செய்திகளால், இளகிய மனங்கள் தான், துயரத்தில் சிக்கிக் கொள்கின்றன. கொடூரமான கொலை காட்சிகள், தற்கொலை காட்சிகள், அருவருப்பான நிகழ்வுகள், ஆபாசங்கள் என, பல குப்பை, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
துவக்கத்தில், சமூக வலைதளங்களில் வந்த செய்திகள் மீது சிறிது நம்பகத்தன்மைக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போது, ௧ சதவீதம் கூட உண்மை தன்மைக்கு வாய்ப்பு இருப்பதில்லை. உண்மை செருப்பை அணிந்து கொண்டிருக்கும் போது, வதந்தி, உலகைச் சுற்றி வந்து விடுகிறது.வீதியில் கிடக்கும் ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டையை, தபால் தலை ஒட்டாமல் கூட, தபால் பெட்டியில் போட்டால், உரியவருக்கு போய் சேர்ந்து விடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், சமூக வலைதளங்கள் தாங்கி வரும் பதைப்பு செய்திகள், நகைப்பையும், வேதனையையும் கொடுக்கின்றன.கட்டற்ற சுதந்திரம், கடைசியில் துன்பம் விளைவிப்பதாகவே இருக்கும். பேசி தொடர்பு கொள்ள மட்டுமே இருந்த மொபைல் போனில், பல வசதிகள் வர ஆரம்பித்ததில் இருந்தே, பிரச்னையும் வளர ஆரம்பித்து விட்டது.மொபைல் போன்களில், சமூக வலைதளங்களை எளிதில் காணும் வாய்ப்பு வந்த பின், மொபைல் போனே கதி என, பலர் கிடக்கின்றனர்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மட்டுமின்றி, உலகம் முழுக்க, இது தான் நிலைமை.உலக நாடுகளிலேயே, மிகவும் மலிவான கட்டணத்துக்கு இணைய சேவைகள் வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், சமூக வலைதளங்களை பார்க்க வகை செய்யும், 'ஸ்மார்ட்' போன்களை பயன்படுத்தும் உலக மக்கள் தொகையில், இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.
அதனால் தான், தினமும் புதுப்புது ஸ்மார்ட் போன் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன.சராசரி மனிதர்கள், ஒரு செய்தியை தெரிந்து கொள்வதற்கு முன், நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம்.நாம் தெரிந்த தகவலை அல்லது செய்தியை, அது நல்லதோ, கெட்டதோ, உடனடியாக பிறருக்கு பகிர்ந்து, அவர்களும் அதைப் படிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் மறுபுறம். இவை தான், தற்போதைய சமூக சீர்குலைவுக்கு, முக்கிய காரணங்களாக உள்ளன.'சமூக வலைதள வசதி இருப்பதால் தான், சமூகத்தில் நடக்கும் அத்தனையையும், வெளிச்சம் போட்டு காட்ட முடிகிறது; ஜல்லிக்கட்டு போராட்டம், சமூக வலைதளம் மூலமே சாத்தியமானது'
என, பல காரணங்களை, இவற்றை ஆதரிப்போர் அடுக்கக் கூடும். ஆனால் ஒன்றை, இவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.மொபைல் போனும், பேஸ்புக் சமூக வலைதளமும் இல்லாத காலத்தில் தான், நம் முன்னோர், சுதந்திர போராட்டத்தை வென்றெடுத்துள்ளனர்.தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்த காந்தியடிகள், ஆங்கிலேயருக்கு எதிராக, சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்த போது, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' கிடையாது.
எனினும், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என்பன போன்ற போராட்டங்களை, இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து, அவரால் நடத்த முடிந்தது.சமூக வலைதளங்கள் இல்லாமலேயே, அவரின் சிந்தனை, எழுத்து, பேச்சு எல்லாரையும் சேர்ந்தது.
செய்திகளுக்கும், வார்த்தைகளுக்கும் உண்மை இருக்குமாயின், அது எத்தனை தடைகளையும் தாண்டி வந்து சேர்ந்து விடும் என்பது, அறிவியல் உலகில் மறுக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.ஒரு பழமொழி உண்டு. 'உன் பெயர் எழுதப்பட்ட அரிசி, உனக்கு வந்தே தீரும்' என்பதே அது. உணவிற்கு மட்டுமல்ல, செய்திகளுக்கும் அது பொருந்தும்.ஒரு செய்தி பற்றி முழுமையாக தெரியாமல், தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்கோ அல்லது நட்பு வட்டத்தின் பெரும்பான்மை உணர்வுக்கோ தலையசைக்காமல், அலசி பார்த்து தெளிய வேண்டும். அரசின் புதிய திட்டங்கள் குறித்த விஷயங்கள் என்னவென்றே தெரியாமல், அதைப் பற்றி அறியாமல், அதை தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஊதி பெரிதாக்க துடிக்கும் விஷமிகளுக்கு துணை போகாதீர்கள்.
பிரிந்து நிற்கும் இரு தரப்புக்கும், பொதுவாய் நின்று யோசித்து, செய்தியை படியுங்கள்; பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், நமக்கு கிடைக்க வேண்டிய அரிசி, கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்பது போல, நமக்கு கிடைக்க வேண்டிய செய்திகளும் கிடைத்தே தீரும்.வானில் வலம் வரும் விண்வெளி கூடங்களை உண்டாக்கி வைத்திருக்கும் இந்த நாள்களில், 'சமூக வலைதளங்களை உபயோகிக்கவே வேண்டாம்' என சொல்லுவது, அறியாமை ஆகி விடும்.
ஆனால், அதை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுஅவசியம். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கொஞ்சமேனும் சிரத்தை எடுப்போமெனில், மனித குலத்திற்கே மகத்தான உதவியாக அது அமையும்.அத்தியாவசியம் இல்லாத ஆணிகளாய் இருக்கும், வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறுங்கள். நம்பத் தகுந்த செய்திகளை மட்டுமே வெளியிடும் செய்தித் தாள்களை படியுங்கள்.பேஸ்புக்கில் ஆயிரக் கணக்கில் நண்பர்கள் இருப்பது பெருமையல்ல. அது, உங்கள் நேரத்தை தின்னும் மாயப்பிசாசு. 'வதந்தியாகத் தான் இருக்க, அநேக வாய்ப்பு உள்ளது' என, உங்கள் உள்ளுணர்வு எச்சரிக்கும் விஷயங்களை, பிறருக்கு பகிராதீர்கள்.ஒரு விஷயத்தை பற்றி எழுதும் முன் அல்லது ஒரு படத்தை பகிரும் முன், பல தடவை யோசியுங்கள். ஏனெனில், ஒரு தடவை நீங்கள் அதை பதிவிட்டு விட்டால், நீங்களே நினைத்தாலும், அதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொது சொத்தாகி விடும்.ஒரு செய்தியை போட்டு விட்டு, அதற்கு வரும், 'லைக்'குகளை எண்ணிக் கொண்டிருப்பது, இலவு காத்த கிளிபோல தான். அந்த லைக்குகளை வைத்து, உங்களால் ஒரு சிட்டிகை உப்பைக் கூட வாங்க முடியாது. உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து, நீங்கள் இணையத்தில் இருக்கும் நேரமெல்லாம், யாரோ சிலரின் சம்பாத்தியத்துக்கு உதவி
கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.செய்திகளுக்கான தேவையை, முடிந்தவரை அச்சு ஊடகங்களில் காணுங்கள்.
அது, உங்கள் கண்களுக்கும் நல்லது.
குவிந்து கொண்டிருக்கும் செய்திகளின் நெருக்கடியிலிருந்தும், வதந்திகளின் வேதனைகளிலிருந்தும் மெல்ல விடுபட, ஒரு சில கட்டுப்பாடுகளை நீங்களே முயற்சித்து பாருங்கள்.சமீபத்தில், ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அதில் பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர், ஒரு நாளில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே, சமூக வலைதளத்தை பயன்படுத்துவதாகவும், அதனால் தான் அவரால் எழுதுவதற்கு, நிறைய நேரம் ஒதுக்க முடிகிறது என்றும் சொன்னார்.அது போல நாமும், சமூக வலைதளங்களை பார்ப்பதை கட்டுக்குள் கொண்டு வருவோம். வாரம் ஒரு நாள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், மொபைல் போன், சமூக வலைதளம் இல்லாமல், குடும்பத்தோடு இணைந்திருக்க முயற்சிப்போம்.மேலும், நம்மை சுற்றி இருப்பவர்களிடம் பேசிப் பழக, நேரத்தை ஒதுக்குங்கள்.
நம்மை சுற்றியுள்ள உலகில், ரசிக்க எராளமான விஷயங்கள் உள்ளன. அன்பைக் காட்டவும், நமக்கு அன்பை தரவும், உண்மையான உறவுகள் நிறைய இருக்கின்றன.
மேலும், உண்மையிலேயே உதவி செய்ய நினைத்தால், நீங்கள் உதவி செய்ய இங்கே ஏராளமாக இருக்கின்றன. மாய உலகத்தில் இருந்து உண்மையான உலகத்திற்கு வாருங்கள்.ஆக, முக்கியமான கட்டுரையாக உங்களுக்கு இது தோன்றுமானால், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில், 'ஷேர்' செய்யாமல், நீங்கள் புரிந்து கொண்டதை, பிறருக்கு, விரல் வழி சொல்லாமல், குரல் வழி சொல்லுங்கள்!தொடர்புக்கு: -அழகர்சமூக ஆர்வலர் இ -- மெயில்: kumar.selva28769@gmail.com