மும்பை:நாட்டில் உள்ள, 10 வங்கிகளை இணைத்து, நான்கு மிகப் பெரிய வங்கிகளாக மாற்றுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி, ஏப்., 1க்குள் இந்தப் பணிகள் முடிவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.
வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், 10 வங்கிகளை இணைத்து, நான்கு மிகப் பெரிய வங்கிகளாக மாற்றப்படும் என, கடந்தாண்டு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படுகின்றன.
பல்வேறு சிக்கல்
சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும்; அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படும். இதைத் தவிர, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படுகின்றன.வரும், ஏப்., 1க்குள் இந்த இணைப்பு பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இந்த வங்கிகள் இணைப்புக்கு, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், 'வங்கி இணைப்பு திட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இந்த நிலையில், பல்வேறு நடைமுறை சிக்கல்களால், திட்டமிட்டபடி இந்த இணைப்பு பணிகளை, ஏப்., 1க்குள் முடிக்க முடியாது என, இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, வங்கி துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:வங்கிகள் இணைப்பு என்பது மிகப் பெரிய சிக்கலான நடவடிக்கையாகும். வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இதை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு, பல நடைமுறை ஒப்புதல்கள் பெற வேண்டும். ஆனால், இந்த ஒப்புதல்கள் பெறுவதில் காமதாமதம் ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் சுலபமானதல்ல. பங்குகளை எந்த அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். முதலீட்டாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும்.
எதிர்பார்ப்பு
அதைத் தவிர, அரசு துறைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இந்தப் பணிகள் முடிக்க, குறைந்த பட்சம் மேலும், 45 நாட்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இணைக்கப்படும் வங்கிகளின், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி எதிர்பார்ப்புகள், மூலதன தேவைகள், வாராக் கடன்களின் அளவு, இணைப்பால் செலவினங்கள் குறைவது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிப்பதற்கும் கால அவகாசம் தேவை. இதைத் தவிர, வங்கிகள் இணைப்பு தொடர்பான முழுமையான அறிக்கை, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பின், தொழில்நுட்ப ரீதியில் வங்கி நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதற்கு முன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், 10 மாதங்களாகியும் இணைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.அதனால், திட்டமிட்டபடி, ஏப்., 1க்குள் இந்த, 10 வங்கிகள் இணைப்பு பணி முடிவடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணவீக்கம் குறையுமா?
ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை வரைமுறை குறித்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான, சி.ரங்கராஜன் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நாட்டின் பணவீக்கம் இலக்கு குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்படு கின்றன. புதிய நிதிக் கொள்கை வரைமுறையில், நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2 சதவீதம் வரை வேறுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி பார்க்கையில், இந்த இலக்கானது ஒரு நிலையானதல்ல; மாறுதலுக்கு உட்பட்டது. மேலும், பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி மட்டுமே தன் கொள்கையால் கட்டுப்படுத்த முடியாது. மக்களின் தேவைக்கு ஏற்ப பொருட்கள் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE