ஆறு மாடு இறப்பில் சப்பைக்கட்டு : 'என்கொயரி' போட்டாரு கலெக்டரு!

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020
Share
Advertisement
ஆமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றிய காட்சி, 'டிவி' சேனலில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.வீட்டுக்கு வந்திருந்த மித்ரா, ''அக்கா, இன்னைக்கு நகர் வலம் வர மாட்டீங்க, போலிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள்.''அதற்கு சித்ரா, ''இங்கே மட்டும் என்ன வாழுதாம், ஜெ., பிறந்த நாளுக்கு தடபுடலா விருந்து வச்சாங்களாமே,'' என,
 ஆறு மாடு இறப்பில் சப்பைக்கட்டு : 'என்கொயரி'  போட்டாரு கலெக்டரு!

ஆமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றிய காட்சி, 'டிவி' சேனலில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.வீட்டுக்கு வந்திருந்த மித்ரா, ''அக்கா, இன்னைக்கு நகர் வலம் வர மாட்டீங்க, போலிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள்.

''அதற்கு சித்ரா, ''இங்கே மட்டும் என்ன வாழுதாம், ஜெ., பிறந்த நாளுக்கு தடபுடலா விருந்து வச்சாங்களாமே,'' என, கொக்கியை வீசினாள்.''தடபுடல்னு சொல்றதுக்கில்லை. வழக்கமான அன்னதானம் தான் கொடுத்தாங்க. வடவள்ளிக்காரங்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நலத்திட்ட உதவி வழங்குறதுக்கும் 'பிளான்' வச்சிருக்காங்களாம்.

வார்டுக்குள்ள எவ்வளவு வீடு இருக்குன்னு கணக்கெடுத்திருக்காங்க,''''72 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப் போறதா சொன்னாங்களே,''''ஆமா மித்து, 'ஸ்மார்ட் சிட்டி' குளங்களை அடுத்த மாசம் துவக்கி வைக்க முடிவு செஞ்சிருக்காங்க.

சி.எம்., வர வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. அந்த சமயத்துல, கல்யாண விழாவையும் நடத்தப் போறாங்களாம்,''''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன் ஆபீசர் மேல, மேலிடத்துக்கு ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' போகுதாமே,''''அதுவா, நானும் கேள்விப்பட்டேன். கட்டடம் கட்டுறதுக்கு, 'அப்ரூவல்' கொடுக்குற விஷயத்துல, டிபார்ட்மென்ட்டுல இருந்து, கோப்பு போயிடுதாம்.

ஆனா, கையெழுத்து போடாம, ரொம்பவே இழுத்தடிக்கிறாராம். கரன்சி கொடுக்காம பைல் நகராதாம்; ஏகப்பட்டது 'பெண்டிங்'ல கிடக்குதாம்.

''அந்த அதிகாரி, தனது மனைவிக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்குறதுக்காக, சுகாதாரப் பிரிவை சேர்ந்த ரெண்டு பேரை நியமிச்சிருக்காராம். 'நிர்வாக நலன்'னு சொல்லி, தகுதி, சீனியாரிட்டி இல்லாத, அந்த ரெண்டு பேருக்கும், 'பசை'யான பதவியை கொடுத்திருக்காராம்,''

''பதவிக்கு வந்த புதுசுல, கார்ப்பரேஷன் அதிகாரி செயல்பாடு சூப்பரா இருந்துச்சுன்னு சொன்னாங்களே,''''மித்து, அவரு இந்த ஊருக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கிறாரு. ஆனா, மத்த விஷயங்கள்ல ஏடாகூடமா இருக்காரு,''''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''ஜல்லிக்கட்டு நடத்துனாங்களே; அதைப்பத்தி ஏதும் சொல்லலையே,'' என, கேடடாள்.

''இந்த வருஷம் பொதுமக்கள் கூட்டம் கம்மியா இருந்துச்சுப்பா. காளைகள் ரொம்பவே ஆக்ரோஷமா களமிறங்குச்சு; ஒருத்தர் இறந்துட்டாரு; ஏழு பேர் ஆஸ்பத்திரியில இருக்காங்க. இன்னும் நிறைய பேரு முதலுதவி சிகிச்சை எடுத்துட்டு கெளம்பிட்டாங்க,''''இதுல, சோகமான விஷயம் என்னான்னா, இறந்த வாலிபர், புதுக்கோட்டையில மாடுபிடி வீரரா இருந்திருக்காரு. கோயமுத்துார் பக்கம் போனா, ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்குவான் சொல்லி, அனுப்பி வச்சிருக்காங்க.

சூலுார் பக்கத்துல ஒரு கம்பெனியில வேலை பார்த்திருக்கிறாரு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கேள்விப்பட்டு, அன்னைக்கு காலைலதான் பெயரை பதிவு செஞ்சு, களத்துல இறங்கியிருக்காரு. துரதிர்ஷடவசமா, மாடு குத்தி இறந்துட்டாரு,''''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''தில்லாலங்கடி வேலை செஞ்சு, பயனாளிகள் லிஸ்ட்டுல பெயரை சேர்க்குறாங்களாமே,'' என்று கேட்டாள்.

''ஸ்கூட்டர் பயனாளிகள் பட்டியல் தயார் செய்றதை சொல்றியா? வேலைக்கு போற லேடீஸ்ல, 45 வயசுக்கு உட்பட்டவங்க, ஸ்கூட்டர் வாங்குறதுக்கு, அரசு மானியம் கொடுக்குது. கமிஷன் வாங்கிட்டு, வேலைக்கு போகாத லேடீஸ்களையும் 'லிஸ்ட்'டுல சேர்க்குறாங்களாம்.

ஆபீசர்களின் சொந்த பந்தங்கள், எதிர் வீட்டுக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரங்களையும் பயனாளிகளா சேர்க்குறதா குற்றச்சாட்டு கெளம்பியிருக்கு,''''ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறதா சொன்னாங்களே,''''அது, கறவை மாடு இறந்த விவகாரம். பழங்குடியின மக்களை பொருளாதார ரீதியா மேம்படுத்துறதுக்கு, ஒவ்வொரு வருஷமும் மாடு வாங்கிக் கொடுப்பாங்க.

அதுல, ஆறு மாடு இறந்திருச்சு; விசாரிச்ச அதிகாரிங்க, அதிக உணவு கொடுத்ததால இறந்து போயிருக்கு; பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ் பணம் கெடைக்கும்னு, சப்பைக்கட்டு கட்டியிருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி, மறுபடியும் ரெண்டு மாடு இறந்ததுனால, ஆர்.டி.ஓ., 'என்கொயரி'க்கு உத்தரவு போட்டிருக்காரு, கலெக்டரு,'' என்றாள்.''அரசு நிர்வாகத்துல அரசியல் தலையீடு ரொம்பவே அதிகமாயிடுச்சாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

'ஆமா மித்து, உண்மைதான்! எம்.எல்.ஏ., - எம்.பி., மட்டுமின்றி, கட்சிக்காரங்க தலையீடும் இருக்காம். ஆவின் நிர்வாகத்துல பால் விற்பனையை அதிகரிக்க புது முயற்சியை கையாள்றாங்க. ஆனா, ஊழியர்கள் வேலைக்கு லேட்டா வந்தா கூட, கேள்வி கேக்க முடியறதில்லையாம்; அந்தளவுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்குறாங்களாம். ஏண்டா, இந்த ஊருக்குவந்தோம்னு, சில ஆபீசர்ஸ் நெனைக்கிறாங்களாம்.

விருப்ப இட மாறுதல் கேட்டு, சில ஆபீசர்ஸ் முட்டிக்கிட்டு இருக்காங்களாம்,''''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். கார்ப்பரேஷன்ல கரப்ஷன் அதிகமாகிடுச்சு. ஆளுங்கட்சிக்காரங்களை சமாளிக்க வேண்டியிருக்கு. உள்ளாட்சி தேர்தல் நடத்துற சமயத்துல, அதிகாரிகளை வேறிடத்துக்கு மாத்தணும்னு பிரச்னை வரும். அதனால, 'துணை'யான ஒரு அதிகாரி, இப்பவே 'டிரான்ஸ்பர்' கேக்குறாராம்,''

''மித்து, நம்மூரு வ.உ.சி., பூங்காவை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல மேம்படுத்தப் போறதா சொன்னாங்க, என்னாச்சு,'' என, கிளறினாள் சித்ரா.''அதுவா, கார்ப்பரேஷன் கஜானாவுல போதுமான நிதியில்லை. தொழில் அமைப்புகள் உதவியாடு, சமுதாய பொறுப்பு நிதியில், பூங்காவை மேம்படுத்தப் போறதா சொல்றாங்க; கணக்கு மட்டும் காட்டாம, செஞ்சா நல்லாயிருக்கும்,'' என்ற மித்ரா, ''அரசு போக்குவரத்து கழகத்துல ஸ்டூடன்ட்ஸ்க்கு சலுகை விலை பாஸ் கொடுக்குறாங்க. இதை கொடுக்கறதுக்கு, 'அங்க போங்க; இங்க போங்க'ன்னு அலைக்கழிக்கிறாங்க.

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, உக்கடம் பஸ் ஸ்டாண்டுல, ஒரு மாணவி, பாஸ் கேட்டிருக்காங்க. காந்திபுரத்துக்கு போகச் சொல்லியிருக்காங்க. அங்க போனா, ஒங்களுக்கு உக்கடத்துல தான் கொடுப்பாங்க; அங்க போங்கன்னு திருப்பி அனுப்பியிருக்காங்க. ஒரு வழியா போராடி, பஸ் பாஸ் வாங்கியிருக்கு, அந்த மாணவி. இப்படித்தான், அரசாங்கம் கொடுக்குற சலுகை, உரியவங்களுக்கு உரிய நேரத்துல போயி சேர்றதில்லைன்னு சொல்றாங்க,'' என்றாள்.

வீட்டுக்கு வந்திருந்த நாளிதழ்களை புரட்டிய சித்ரா, ''செய்முறை தேர்வு நடக்குற பள்ளிகளுக்கு ஆய்வுக்கு போற, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு வழக்கமா நினைவு பரிசு கொடுப்பாங்களாம்.

அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு போறவங்க, பரிசு கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு, 'மெனு லிஸ்ட்' கொடுக்குறாங்களாம். தொலைதுாரத்துல இருக்குற ஸ்கூல்களுக்கு போறவங்க, வண்டிக்கு 'புல் டேங்க்' பெட்ரோல் நிரப்பிக் கொடுங்கன்னு சொல்றாங்களாம். எஜூகேசன் டிபார்ட்மென்ட்டுல பேசிக்கிட்டாங்க,'' என்றாள்.

'டிவி'யில் டிரம்ப் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, டிரம்ப் பாராட்டியிருக்கிறாரே,'' என கேட்க, ''நம்மூரு வீரர்களின் திறமை, வெளிநாட்டுக்காரங்களுக்கு தெரியுது. ஆனா, நம்மூர்க்காரங்க விளையாட்டு வீரர்களை ரொம்பவே உதாசீனப்படுத்துறாங்க,'' என்றாள் சித்ரா.

''என்னாச்சுக்கா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்,''''மித்து, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துறதுக்காக, ஒவ்வொரு வருஷமும், 'முதல்வர் கோப்பை' போட்டி நடத்துவாங்க. முதல் மூன்று இடம் வர்றவங்களுக்கு, உடனே ரொக்கப்பரிசு கொடுப்பாங்க. இந்த தடவை, வங்கி கணக்கு எண், மொபைல் எண் வாங்கிட்டு, அனுப்பி வச்சிட்டாங்க.

போட்டி நடந்து, ரெண்டு வாரத்துக்கு மேலாச்சு; இதுவரைக்கும் பரிசு தொகை போயி சேரலையாம்,''''அதே மாதிரி, மாவட்ட போட்டியில நல்லா விளையாடுற வீரர்களை மாநில போட்டிக்கு தேர்வு செய்யணும். சில விளையாட்டுகள்ல சரியான அணியை தேர்வு செய்யலைன்னு, பயிற்சியாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க,''''அது சரி, கூட்டுறவு சொசைட்டி கட்டுப்பாட்டுல இருக்குற ரேஷன் கடைகள்ல பொங்கல் பொருட்கள் கொடுத்ததில், ஏகப்பட்ட கோல்மால் நடந்துச்சாமே,'' என, பழசை கிளறினாள் மித்ரா.

''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். ஏகப்பட்ட கடைகளுக்கு ஏலக்காய் சப்ளை செய்யவே இல்லையாம். இதுமாதிரி, பொங்கல் பொருள் 'பர்ச்சேஸ்' செஞ்சது; சப்ளை செஞ்சதுல ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்குன்னு பேசிக்கிறாங்க. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தணும்னு கடை ஊழியர்கள் சொல்றாங்க,'' என்றபடி சமைலறைக்குள் நுழைந்த சித்ரா, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள்.

அதை உறிஞ்சிய மித்ரா, ''அக்கா, சிந்தாமணி கட்டுப்பாட்டுல, ராமநாதபுரம் ஏரியாவுல இருக்குற ரேஷன் கடையில இருந்து, மாசம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கணும்னு, ஆளுங்கட்சிக்காரங்க, ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்குறாங்களாம். கொடுக்க முடியாதுன்னு சொன்னதும், ஆளுங்கட்சி தரப்புல நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

''எம்.எல்.ஏ., ஒருத்தரு, ஊழியர்களை ஆபீசுக்கு கூப்பிட்டு, 'ஒங்க கடையில ஏகப்பட்ட முறைகேடு நடக்குது; ஒங்களை வேற கடைக்கு 'டிரான்ஸ்பர்' பணணப் போறோம்'னு மிரட்டியிருக்காரு. அதனால, ரேஷன் கடை ஊழியர்கள் மிரண்டு போயிருக்காங்களாம்,'' என்றபடி, மார்க்கெட்டுக்கு புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X