வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இன்றும் இந்த வன்முறை தொடர்ந்ததால், பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து, இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மீடியா நிருபர்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டில்லியின் ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் போராட்டம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, வன்முறை அரங்கேறின. வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனத்தையும், போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறை சம்பவங்களில் டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் லால் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 50 போலீசார் உட்பட 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
தடை உத்தரவு

விஜய்பார்க், யமுனா நகர், மவுஜ்பூர், கரவால் நகர், கோகுல்புரி, கர்தம்புரி, பஜனபுரா பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் சில பகுதிகளில் வன்முறை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு கல்வீச்சு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராடுபவர்கள்,ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து வடகிழக்கு டில்லி பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். காரவல் நகர் நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட வன்முறையில் மீடியா நிருபர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆலோசனை

இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இதில், டில்லி துணை நிலை ஆளுநர், முதல்வர் கெஜ்ரிவால், போலீஸ் உயரதிகாரிகள், அனைத்து கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் கெஜ்ரிவால் கூறுகையில், இந்த கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
வேண்டுகோள்
இதனிடையே உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், டில்லியில் போதுமான அளவு பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர். இதனால், ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை. அமைதி குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த குழுவானது, அரசியல்கட்சிகள், போலீசார் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்தன.
போலீசார் குழப்பம்
கூட்டம் துவங்குவதற்கு முன்னர் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், அனைவரும் வன்முறையை கைவிட வேண்டும். போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் இல்லை. இதனால், அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவமனைகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.