புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்தில் பலவகையான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப், பயணத்தின் முடிவாக டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்தில் பங்கேற்றார். இந்த விருந்தில் டிரம்புடன், மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுக்காக அமெரிக்க சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய மெனுவின்படி, சால்மன் மீன் டிக்கா, ஆலு டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான சூப்களுடன் விருந்து தொடங்கியது.

ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தால் ரைசினாவும் டிரம்பிற்கு பரிமாறப்பட்டது. டிரம்ப் இறைச்சி பிரியர் என்பதால் மட்டன் பிரியாணி, மட்டன் ரான் டிஷ், டம் குச்சி மாதார் (பட்டாணியால் சமைத்த ஒரு காளான் டிஷ்) மற்றும் புதினா ரைட்டாவும் மெனுவில் இடம்பெற்றன. இனிப்புகளைப் பொறுத்தவரை, வெணிலா ஐஸ்கிரீமுடன் ஹேசல்நட்-ஆப்பிளையும், ரப்தியுடன் கூடிய மல்புவாவையும் உண்டு மகிழ்ந்தனர். மட்டன் ரான் முதல் காளான் கறி வரை குங்குமப்பூ கிரேவியில் தயாரிக்கப்பட்டதாகும்.
அனைத்து உணவு வகைகளும் பயிற்சி பெற்ற 32 சமையல்காரர்களால் ராஷ்டிரபதி பவனின் பிரதான சமையலறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விருந்துக்காக மெனு தயாரிக்க 2 மணிநேரம் ஆனதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE