சென்னை : 'கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கரு முட்டை, சிறுநீரகத்தை விற்கும் அவலம் தொடர்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார சீரழிவு, அ.தி.மு.க., அரசின் டாஸ்மாக் வியாபாரம் போன்றவற்றால், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், விசைத்தறி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. விசைத்தறியை நம்பியிருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால், ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கரு முட்டையை விற்பனை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும், இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்; பெயரளவுக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோர், இந்த விவகாரத்தின் மீது, உண்மையான அக்கறை செலுத்துவாரா? இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயஸ்ரீக்கு வாழ்த்து
அவரது மற்றொரு டுவிட்டர் பதிவு:தமிழக சங்க இலக்கிய காட்சிகளை மையமாக வைத்து, மலையாளத்தில், எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நாவலை, கே.வி.ஜெயஸ்ரீ, தமிழில் மொழி பெயர்த்தார். 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற அந்த நுால், சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது. ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள். அவரது மொழி பெயர்ப்பு பணி தொடரட்டும்; தமிழ் படைப்புலகம் செழிக்கட்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE