புதுடில்லி: 'ஆம் ஆத்மியிலிருந்து, பா.ஜ.,வுக்குச் சென்ற கபில் மிஸ்ரா, வெறுப்பை துாண்டும் வகையிலான பேசியதால் தான், டில்லியில் வன்முறை ஏற்பட்டுள்ளது' என பா.ஜ.,வின் கவுதம் காம்பீர் குற்றம் சாட்டினார்.
டில்லியில் சிஏஏ.,க்கு எதிரான போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. 150 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றும் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கபில் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் கிழக்கு டில்லி லோக்சபா உறுப்பினரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கவுதம் காம்பீர் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து, பா.ஜ.,வுக்குச் சென்ற கபில் மிஸ்ரா, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, டில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தினார். இவர், 'டிரம்ப், இந்தியாவில் இருக்கும் வரை தான், அமைதியாக இருப்போம். அவர், அமெரிக்காவுக்கு கிளம்பிய பின், போலீசார் பேச்சை கேட்க மாட்டோம்' என, பேசியுள்ளார்.
இதுபோன்ற வெறுப்பை துாண்டும் வகையிலான பேச்சுக்களால் தான், டில்லியில் வன்முறை ஏற்பட்டுள்ளது. ஷாகின் பாக்கில், அமைதியாகத் தான் போராட்டம் நடந்தது. ஆனால், டிரம்ப், டில்லிக்கு வந்தபின், போராட்டங்களில் வன்முறை வெடித்தது; இது சரியான செயல் அல்ல. போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் கற்களை வீசி தாக்குவதை ஏற்க முடியாது.
போலீசாருக்கு முன், துப்பாக்கியுடன் சுற்றித் திரிபவர்களை என்னவென்று சொல்வது... ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என, எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி; வன்முறையை துாண்டுவோர் மீது, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE