இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: உலகின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் பல நகரங்களில் காற்றின் தரம், மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்து வருகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை எனப் பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

30ல் 21 நகரங்கள்
இந்நிலையில், 'ஐ.கியூ., ஏர் - ஏர் விசுவல்' என்ற நிறுவனம் உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில், உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த இந்தியா, இரு படிகள் முன்னேறி, ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது. மேலும், உலக அளவில், மிகவும் காற்று மாசடைந்துள்ள, 30 நகரங்களில், 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, புதுடில்லியின் காஜியாபாத் உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்து வரும் நகரமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்று மாசு, முன்பை விட, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் அதிகரிக்கும்
உலகச் சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 'காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு, 70 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழக்கின்றனர். காற்று மாசால், பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல், புற்றுநோய் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கும். காற்று மாசைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், உயிர் இழப்புகள் அதிகரிக்கும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள, சராசரி காற்று மாசுபாட்டு அளவைக் காட்டிலும் கடந்த ஆண்டு, புதுடில்லியில் உள்ள குருகிராமில், 13 மடங்கு காற்று மாசடைந்தது. அப்போது இந்திய சுகாதாரத் துறை, பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. அங்குள்ள, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். இந்த ஆண்டு அந்நகரில் காற்றுன் தரம் சற்று உயர்ந்திருப்பதாக, 'ஐ.கியூ., ஏர் - ஏர் விசுவல்' என்ற நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE