புதுடில்லி : டில்லி வன்முறைக்கு பா.ஜ.,வின் சதி என குற்றம்சாட்டிய காங்., தலைவர் சோனியாவின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.,, இது போன்ற கீழ்தரமான அரசியலை நிறுத்துங்கள் என பதிலடி கொடுத்துள்ளது.

டில்லியில் சிஏஏ.,வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெடித்த முன்முறையில் 21 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோனியா, டில்லி வன்முறைக்கு பா.ஜ., சதியே காரணம். இதற்கு மத்திய அரசும், உள்துறை அமைச்சருமே பொறுப்பு. இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றார்.

சோனியாவின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரகாஷ் ஜவடேக்கர், காங்., தலைவர் சோனியாவின் கருத்து துரதிஷ்டவசமானது. கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அமைதியை காக்க வேண்டும். அதற்கு பதிலாக அரசை குற்றம்சாட்டுவது கீழ்தரமான அரசியல். வன்முறையை அரசியலாக்குவது தவறு. அமித்ஷா எங்கே என அவர்கள் கேட்கிறார்கள். இந்த வன்முறை தொடர்பாக நேற்று அனைத்து கட்சிகளை அழைத்து அமித்ஷா பேசி உள்ளார். அதில் காங்., தலைவரும் கலந்து கொண்டுள்ளார். போலீசுக்கு வழிகாட்டுதல் வழங்கி உள்ளார் அமித்ஷா. காங்.,ன் இத்தகைய அவதூறு கருத்து போலீசாரின் மனஉறுதியை பாதிக்கும் என்றார்.
சோனியாவின் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், தேசிய விவகாரங்களில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள். நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் காங்., அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கீழ்தரமான அரசியலை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி நிதி
இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன்லால் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE