மலையாள மண்ணில் தமிழ் மணக்க வேண்டும்: மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ விருப்பம்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்காக,2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.வாழ்த்து சொல்லி, அவரிடம் பேசியதிலிருந்து...கே.வி.ஜெயஸ்ரீயின் இளமையும், எழுத்தும் பற்றியும் சொல்லுங்கள்?கேரள மாநிலம், பாலக்காடை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் - மாதவி தம்பதி, திருமணம் முடிந்ததும்,
 மலையாள மண்ணில் தமிழ் மணக்க வேண்டும்:  மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ விருப்பம்

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்காக,2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.வாழ்த்து சொல்லி, அவரிடம் பேசியதிலிருந்து...


கே.வி.ஜெயஸ்ரீயின் இளமையும், எழுத்தும் பற்றியும் சொல்லுங்கள்?


கேரள மாநிலம், பாலக்காடை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் - மாதவி தம்பதி, திருமணம் முடிந்ததும், திருவண்ணாமலையில் குடியேறி, வணிகம் செய்கின்றனர். சுஜாதா, ஜெயஸ்ரீ, ஷைலஜா என்ற மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.ஷைலஜா ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போது, வாசுதேவன் மரணிக்கிறார். மாதவியின் உடன்பிறப்பு பாதுகாவலராகிறார். குழந்தை வளர்ப்பையும், குடும்ப பொறுப்பையும் ஏற்கும் மாதவி, தன் வேதனை, துயரம், ஆற்றாமை என, அத்தனை உணர்வுகளுக்கும் ஆறுதலாக, மலையாளபுத்தகங்களை வாசிக்கதுவங்குகிறார்.தன் மூத்த மகள், தமிழ் படிக்கத் துவங்கும் போதே, தானும் தமிழ் கற்கிறார். நான்கைந்து ஆண்டுகளுக்குள், தமிழின் மிகப் பெரிய எழுத்தாளர்களின், மிகப்பெரிய புத்தகங்களையும், எளிதாக அவரால் வாசிக்க முடிகிறது.பள்ளிக் குழந்தைகளான ஜெயஸ்ரீ, ஷைலஜாவிற்கு, அம்மா படித்த புத்தகங்களின் மீது, ஆர்வம் துளிர்க்கிறது. தங்களின், 7, 8 வயதில், அவர்களுக்கு வாசிப்பு அறிமுகமாகிறது. பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் இனிக்கிறது. அப்போது கூட, இருவருக்கும் மலையாளம், பேச்சு மொழியாக மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்க, அந்த குழந்தைகளின் வழியாக, மலையாள எழுத்துக்களை கற்கின்றனர். இலக்கியம் படித்த அவர்கள், இலக்கியத்தை மொழி பெயர்க்க துவங்குகின்றனர்.

இப்போது, ஜெயஸ்ரீக்கு, 52 வயது. திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள, கொளக்குடி அரசுப் பள்ளியில், முதுகலை தமிழ் ஆசிரியர். அவர் மொழிபெயர்த்த, 'நிலம் பார்த்து மலர்ந்த நாள்' கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி இருக்கிறது. இது தான், என் சுய வரலாறு.


இதுவரை, நீங்கள் மொழிபெயர்த்துள்ள நுால்கள்?


மலையாளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரான, பால் சக்காரியா எழுதிய, இதுதான் என் பெயர், இரண்டாம் குடியேற்றம்; அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும், யேசு கதைகள், சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளேன். சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதிய, பிரியாணி எனும் சிறுகதை, ஒற்றைக் கதவு எனும் கதை, கவிதையும் நீதியும் எனும் சுகதகுமாரியுடனான நேர்காணல், சியாமளா சசிகுமார் எழுதிய நிசப்தம், ஏ.அய்யப்பன் எழுதிய, வார்த்தைகள் கிடைக்காத தீவில் எனும் கவிதை தொகுப்புகளையும் மொழி பெயர்த்துள்ளேன். ஷவ்கத் எழுதிய, ஹிமாலயம் எனும் பயணக் கட்டுரையுடன், தற்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மனோஜ் குரூர் எழுதிய, நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் நாவல் என, 12 நுால்களை மொழிபெயர்த்துள்ளேன்.


உங்களின் முதல் மொழிபெயர்ப்பு பற்றி?

கல்லுாரியில், இலக்கியம் படித்த போது, பலரும் இலக்கியம் படைத்தனர். நான், மலையாள இலக்கியத்தை மொழிபெயர்த்தேன். அது, மிகவும் கவனிக்கப்பட்டது. பின், என் தங்கை ஷைலஜா, மலையாள மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியிடுவதற்காக, சில நவீன சிறுகதைகளை மொழிபெயர்த்து தரச் சொன்னாள். நான், அப்போது, என் கணவரின் வணிகம் மற்றும் மகளின் படிப்புக்காக, கேரளாவின் அடிமாலியில் இருந்தேன். சாரா ஜோசப்பின், காலடிச் சுவடுகள், சி.வி.ஸ்ரீராமனின் பொந்தன்மாடன், பால் சக்காரியாவின், ஒரு நாளுக்கான வேலை என்ற மூன்று கதைகளை, மொழிபெயர்த்து அனுப்பினேன். அப்போதே, பெண்களின் மனவுலகு சார்ந்த எழுத்தாள ரான பால் சக்காரியாவின், 12 கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கத் துவங்கினேன். 'இரண்டாம் குடியேற்றம்' கதையைப் படித்து, சுந்தர ராமசாமி பாராட்டினார். தொடர்ந்து ஒருநாள், எழுத்தாளர் பிரபஞ்சனை, ஷைலஜா வீட்டில் சந்திக்க நேர்ந்தது. ஒரு நீண்ட உரையாடலுக்குப் பின், ஒரு நீள நோட்டை என் கையில் கொடுத்து, 'அடுத்த சந்திப்பில், இந்த நோட்டை நிரப்பிக் கொடுங்கள்' என்றார். ஆறு மாதங்களில் அதை நிரப்பினேன். அதை வாங்கிச் சென்ற, 15ம் நாளில், 'இதுதான் என் பெயர்- பால் சக்கா ரியா. தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ' என அச்சிடப் பட்டிருந்த அட்டைப் படத்தோடு, கவிதா பதிப்பக வெளியீடாக, ஒரு நுாலைக் கொடுத்தார். அவரே, முன்னுரையும் எழுதியிருந்தார். அவ்வளவு பெரிய எழுத்தாளரான பிரபஞ்சன், அந்த நுால் உருவாக்கத்தை, ஒரு தந்தையைப் போல உச்சி முகர்ந்தார்.அவர் சந்திக்கும் ஒவ்வொரு கணத்திலும், 'என்ன எழுதுறீங்க? என்ன படிக்கிறீங்க?' என்று ஊக்கப்படுத்துவார். இப்போது, அவர் இல்லாதது பெரும் குறை.


விருது பெற்ற நுாலைப் பற்றி சொல்லுங்கள்?

கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த மனோஜ் குரூர், மலையாள இலக்கியம் படித்த கல்லுாரி பேராசிரியர், சிறந்த இலக்கிய ஆய்வாளர்.அவர் எழுதிய, 'நிலம் பூத்து மலர்ந்ந நாள்' என்ற நாவல், சங்க காலத்தைச் சேர்ந்தது. அதில், நம் சங்க இலக்கியங்களில் வரும், பாணர், கூத்தர், விறலியர் என்போரும், குறுநில மன்னனும் தான் கதைமாந்தர்களாக இருப்பர். அதை மொழிபெயர்க்கும்படி சொன்னவர், எழுத்தாளர் ஜெயமோகன். மொழி பெயர்த்ததும், தமிழ் அறிஞர்களாலும், வாசகர்களாலும் கொண்டாடப்பட்டது. சிங்கப் பூர் அரசு, நுாலகங்களில் வாங்கி வைத்துள்ளது.


ஒரு மலையாள எழுத்தாளருக்கு, சங்க இலக்கியம் எப்படி பரிட்சயமானது?

கேரளா, ஆதி சேர நாடு தானே. அங்கு, பண்டைய இலக்கியமாக, சங்க இலக்கியத்தை, மலையாள எழுத்தில் படிக்கின்றனர். 'மாமழை போற்றுதும்' என்பதை, அப்படியே மலையாள எழுத்தில் தான் படிப்பர். அவர், சங்க இலக்கியங்களை, மலையாளத்தில் படித்து ஆய்வு செய்தவர்.மலையாள - தமிழ் இலக்கியச் சூழல் எப்படி உள்ளது?மலையாளத்தில், எழுத்தாளர்களை வாசகர்கள் கொண்டாடுகின்றனர். அதனால், எழுத்தாளர்களும், பொறுப்புணர்ந்து எழுதுகின்றனர். அங்கு, உடனே, 10 ஆயிரம் புத்தகங்கள் விற்று விடுகின்றன. இங்கு, 1,000 புத்தகங்கள் விற்பதே பெரும்பாடாக உள்ளது.


தமிழ் - மலையாள மொழிபெயர்ப்பு எப்படி உள்ளது?

நிறைய மலையாள இலக்கி யங்கள், தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், சாகித்ய அகாடமி விருது பெற்ற, 1,000 நுால்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி கூட, மலையாள வாசகர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள், மலையாளத்தில் அவ்வளவாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தான் எதார்த்தம்.நீங்கள் மொழிபெயர்க்கலாமே?நான், தமிழகத்தில் வாழ்பவள். தமிழகத்துக்குத் தேவையான மலையாள இலக்கியங்களை மொழிபெயர்ப்பது என் கடமை.அதேபோல, அந்த மண்ணுக்குத் தேவையான தமிழ் இலக்கியங்களை, அவர்கள் மொழிபெயர்ப்பது தான் நியாயம். விரைவில், மலையாள மண்ணில், தமிழ் மணக்க வேண்டும். நம் சகோதர உறவு மேம்பட வேண்டும்.


விருதுக்காக நீங்கள் பெற்ற சிறந்த பாராட்டு?

ஏராளமான பாராட்டுகளை பெற்றுவிட்டேன். அவர்களின் அன்பில் திளைக்கிறேன். அதே நேரம், என்னை வாசிப்புக்குள் இழுத்த, என் அம்மா, நுாலை படித்துவிட்டு சொன்ன, 'நல்லா இருக்கு மகளே' என்ற கருத்தும், விருதுக்கு பின் சொன்ன, 'சந்தோஷம்' என்ற, ஒற்றை வார்த்தையும், எனக்கான பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X