தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் பெரும் வளர்ச்சி திட்டங்களால், தமிழகம், புதிய தொழில் யுகத்தை நோக்கிச் செல்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சூழலுக்கு உகந்த தொழில் வளர்ச்சி என்ற பயணத்தில், தடம் பதிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'தமிழகத்தை உலக தொழில் உற்பத்தி மையமாக மாற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறேன்' என்றார்.
மேலும், 'இந்த லட்சியத்தை நிறைவேற்றும் முனைப்பில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை, வளர்ச்சியின் முன்மாதிரியாக தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது' என்றும் சூளுரைத்தார்...

அவரது உறுதியை பின்பற்றி, ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் முதல்வர் இ.பி.எஸ்., தொழில்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
வணிகத்தை எளிதாக்க சட்டம்
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அரசின் அனைத்து துறைகளின் அனுமதியையும், குறித்த காலத்திற்குள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக வணிகத்தை எளிதாக்கும் சட்டம், 2018ல் அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு, 11 அரசு துறைகளின் வழியாக தேவையான அனுமதி வழங்கவும், அனுமதியை புதுப்பிக்கவும், தொழில் தொடர்பான மற்ற சேவைகளுக்கும், இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் குறைகளை களைய, 'தொழில் நண்பன்' என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கும், 'சிப்காட்' நிறுவனம், மூன்று ஆண்டுகளில், 330 தொழில் நிறுவனங்களுக்கு, 1,347 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது.
இந்த நடவடிக்கையால், 6,871 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 47 ஆயிரம் பேருக்கு, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர் மாநாடு
கடந்த, 2019ல் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வழியாக, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 3 லட்சத்து, 501 கோடி ரூபாய் அளவில், தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 59 திட்டங்களுக்கான தொழில் உற்பத்தியும் துவங்கப் பட்டுள்ளது.இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் செய்து, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தார்.
இந்த பயணங்களின் வழியாக, 8,835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களால், 35 ஆயிரத்து, 520க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், ஐந்து நிறுவனங்கள் பணிகளை துவங்கி விட்டன. மின்சார வாகன கொள்கை, தகவல் தொழில்நுட்ப கொள்கை, விமானம் மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை என, தொழில்துறையை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி, வெற்றி கண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனமான, பி.ஒய்.டி., நிறுவனம் மற்றும், 'விங்டெக்' என்ற மொபைல்போன் உற்பத்தி நிறுவனம், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்யவுள்ளன.
பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்ட, நோக்கியா நிறுவனத்தை, 'சால்காம்ப்' என்ற நிறுவனம் வாங்கி, மீண்டும் உற்பத்தியை துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின், 3 சதவீத வட்டி மானியத்துடன், 2,297 தொழில்களுக்கு, 1,158 கோடி ரூபாயை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடனாக வழங்கி உள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் நிதி வழங்கும் வகையில், 3 சதவீதமாக இருந்த வட்டி மானியத்தை, முதல்வர் இ.பி.எஸ்., 6 சதவீதமாக உயர்த்தியுள்ளார். அதனால், வெளிச்சந்தை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை விட குறைந்த வட்டியில், சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெற்று பயன் அடைந்துள்ளன.
தடம் பதிக்கும் வாய்ப்புகள்
படித்த இளைஞர்களும், முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவெடுப்பதை குறிக்கோளாக கொண்ட, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் செயல்படுத்தி வருகிறது.அனைத்து மாவட்டங்களும் பயன் அடையும் வகையில் உள்ள, நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான்.
சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - கோவை - கொச்சி ஆகிய தொழில் பெருந்தடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பாதுகாப்பு தொழில் பெருந்தட திட்டமும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும். முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான இந்த ஆட்சியில், அரசு மேற்கொண்ட பல வகையான நடவடிக்கைகளும், முயற்சிகளும், தமிழகத்தை சூழலுக்கு உகந்த தொழில் வளர்ச்சி என்ற பயணத்தை நோக்கி, தடம் பதிக்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
- நமது நிருபர் -