பொது செய்தி

தமிழ்நாடு

ரோந்து கப்பல், 'வரத்' நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Added : பிப் 28, 2020
Share
Advertisement
 ரோந்து கப்பல், 'வரத்' நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சென்னை,: இந்திய கடலோர காவல் படையின் ரோந்து பணிக்காக, 'வரத்' என்ற, ஆழ்கடல் ரோந்து கப்பலை, மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா, நாட்டிற்கு நேற்று அர்ப்பணித்தார்.

இந்திய கடலோர காவல் படைக்கு, ஏழு அதி நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்க, எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன், 2015ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதன்படி, 'விக்ரம், வீரா, விஜயா, வராஹா' என, நான்கு ரோந்து கப்பல்கள், கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், 'வரத்' என்ற, ஐந்தாவது ஆழ்கடல்ரோந்து கப்பலை, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில், நேற்று நடந்தது. மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:கடல்சார் பாதுகாப்பு பணியில், இந்திய கடலோர காவல்படை, சிறப்பாக பணியாற்றி வருகிறது. கடல் எல்லையை பாதுகாப்பது நம் கடமை. ஆண்டு தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கப்பல்கள், இந்திய கடல் எல்லை வழியாக பயணிக்கின்றன. நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில், கடலோர காவல் படையின் கப்பல்களை நிறுத்துவதற்கான வசதிகள் உட்பட, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி., - எஸ்.பரமேஷ் உட்பட, பலர் பங்கேற்றனர்.'வரத்' சிறப்புகள் என்ன?'வரத்' ரோந்து கப்பல், 2100 டன் எடை, ௧௫ மீட்டர் அகலம், 98 மீட்டர் நீளம் உடையது. 'ஆசிர்வாதம் வழங்குதல்' என பொருள்படும் வகையில், 'வரத்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. முழுமையாக இந்திய தொழில்நுட்பங்கள் அடிப்படையில், இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள், சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன.

குறைந்த மாசை வெளியிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கப்பல் உருவாக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக, 26 நாட்டிகல் மைல் வேகத்திலும், தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., வரையிலும், இக்கப்பலால் பயணிக்க முடியும். இடைவிடாமல், 20 நாட்கள் வரை, தொடர் ரோந்து மற்றும் மீட்பு பணியில் ஈடுபட முடியும். இரட்டை இன்ஜின் பொருத்திய ஹெலிகாப்டர்கள், இந்தக் கப்பலில் இறங்க முடியும்.
இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தை தலைமையிடமாக கொண்டு, இந்த கப்பல் சேவையாற்ற உள்ளது. கேப்டன் பின்டு பாக் தலைமையில், 11 கடலோர காவல் படை அதிகாரிகளின் மேற்பார்வையில், 91 கடலோர காவல் படை வீரர்கள், இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.தடை செய்யப்பட்ட போதை மருந்து கடத்தல், பயங்கரவாதிகள் ஊடுருவல், ஒன்றோடு ஒன்று மோதிய கப்பல்கள், தரை தட்டிய கப்பல்களை மீட்கும் வகையில், பல நவீன வசதிகள், இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X