சென்னை :நில பட்டா உள்ளிட்ட, வருவாய் துறை ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சரி பார்ப்பதற்கான, இ - சேவை இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தமிழகத்தில், நிலங்களின் பட்டா பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. கணினி வாயிலாக வழங்கப்படும் புதிய ஆவணங்கள், உடனுக்குடன் வருவாய் துறையின், இ - சேவைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள், தங்கள் நிலங்களுக்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, இந்த இணையதளத் தில் சரி பார்த்துக் கொள்ளலாம். இணை தளத்தில் இருந்தே, ஆவணங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை என்பதால், இந்த வசதி பொதுமக்களுக்கு பேருதவியாக உள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக, இந்த இணையதளம் அடிக்கடி முடங்கி விடுகிறது. சில தினங்களாக மொத்தமாக முடங்கியுள்ளது. இணையதளத்தின் முதல் பக்கத்தில், 'இந்த தளம் தற்போது, உங்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்...' என்ற, குறிப்பு மட்டுமே உள்ளது.இதனால், பகல் நேரத்தில் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர்.பொதுமக்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இணையதளத்தின் திறனை மேம்படுத்த, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை.