சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'டவுட்' தனபாலு

நடிகர் பார்த்திபன்: 'குடியுரிமைச் சட்டத் திருத்தச் சட்டம் இயற்றிய பின், போராடுவதில் எந்த பயனும் இல்லை' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை, போராட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. சட்டத்தை மாற்ற வேண்டுமானால், போராட்டம் நடத்தி தான் ஆக வேண்டும். அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டத்தை பார்க்கிறேன். சினிமாவில் சாதித்த பின், நானும் அரசியலுக்கு வருவேன்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில், ஊடகங்களில் பார்வை விழ வேண்டும் என விரும்புவோர், பரபரப்பாக பேசப்பட வேண்டும் என ஆசைப்படுவோர், நடிகர் ரஜினியை எதிர்த்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோல, 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து கிடைக்காத புகழை, ரஜினியை எதிர்த்து பேசி பெற விரும்புகிறீர்களோ என்ற, 'டவுட்' இப்போது எனக்கு ஏற்படுகிறது!

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி
தொடர்ந்து கேட்டு வருகிறோம். எங்களின் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளிலும், மூத்த உறுப்பினர்கள் உள்ளனர். இவ்விஷயத்தில், அ.தி.மு.க., தலைமை நல்ல முடிவை அறிவிக்கும் என்று நம்புகிறேன். தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா, எம்.பி., 'சீட்' தர வேண்டும் என்று, கூட்டணி அமைக்கும் போதே பேசி உள்ளோம்.
'டவுட்' தனபாலு: அ.தி.மு.க.,வுடன் நீங்கள் கூட்டணி அமைத்த போது, அந்தக் கட்சிக்கு அவ்வளவு பலமில்லை. அதன் பின், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதால், கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதனால், பேசியபடி, ராஜ்யசபா சீட் தருவார்களோ, மாட்டார்களோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சில் அதிகம் தென்படுகிறது. முதல்வர் இ.பி.எஸ்., சொன்னபடி, கட்சியின் மூத்த தலைவர்கள் தான், இது குறித்து முடிவெடுப்பரோ?

பா.ஜ., தேசியச் செயலர் ராஜா: திரவுபதி படம் பற்றி வந்த புகார்கள், எழுப்பப்பட்ட கருத்துகள் எதுவுமே அடிப்படையில்லாதவை என்பது, இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு பெண் குழந்தையும் திரவுபதியாக வாழ வேண்டும். சில பேருக்கு, திரவுபதி என்ற பெயரை கேட்டாலே பயம் வரலாம்.
'டவுட்' தனபாலு: மத்தியில், பா.ஜ., ஆட்சி தொடர்ந்து, இரண்டாவது முறை அமைந்த பிறகு, தமிழகத்தில், பா.ஜ., சொல்படி நடக்கிற, இ.பி.எஸ்., ஆட்சி உள்ள நிலையில், எச்.ராஜாவின் செல்வாக்கு, அபரிமிதமாக உயர்ந்துள்ளது என்பதில், 'டவுட்'டே இல்லை. வெளியாக உள்ள சினிமா படங்களை கூட, அவரை அழைத்து, பார்க்க வைத்து கவுரவிக்கின்றனரே!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: முஸ்லிம் சகோதரர்களே, இது உங்களுடைய பூமி. இங்கிருந்து உங்களை விரட்டி விடுவர் என, சில கட்சிகள் கூறுவதை நம்பாதீர்கள்; அத்தகைய எண்ணத்தை விட்டு விடுங்கள்; இந்தியர்களாக தேசப் பக்தியுடன் இருங்கள்; இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருங்கள்; உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.
'டவுட்' தனபாலு: இது என்ன புது விவகாரமாக இருக்கிறது... முஸ்லிம்களில் ஒரு சாரார் அல்லது கட்சி சார்புள்ள ஒரு பிரிவினர் தான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள், அவர்களில் நடுநிலையாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அதில், யாருக்கும் எந்த, 'டவுட்'டும் இல்லை. அதனால், ஒட்டுமொத்தமாக அறிவுரை வழங்க வேண்டாமே!

தமிழக அமைச்சர் ஜெயகுமார்: சர்க்காரியா கமிஷனால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட கட்சி; விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கட்சி எது என்றால், அனைவருக்கும் அது, தி.மு.க., என, நன்கு தெரியும். முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள, தேர்தல் வியூகம் வகுப்பு நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன், அந்த கட்சி கூட்டு சேர்ந்துள்ளது. நாங்கள், ஏ.கே., 47 துப்பாக்கி. எந்த சதியையும் துாள் துாளாக்குவோம்.
'டவுட்' தனபாலு: ஏற்கனவே, தி.மு.க.,வை பார்த்து அலறும் உங்கள் கட்சி, இப்போது, அந்த கட்சியுடன், பிரஷாந்த் கிஷோர் சேர்ந்த பிறகு, ரொம்பவும் தான் பீதி அடைந்துள்ளதோ என்ற, 'டவுட்'டை உங்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது. நீங்கள், ஏ.கே., 47 துப்பாக்கியாக இருந்தாலும், பாய்கின்ற ரவைகள், பக்குவமாக இருக்க வேண்டுமே!

பத்திரிகை செய்தி: ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, இம்மாதம் நடக்க உள்ள தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தயவு இருந்தால் மட்டுமே, மூன்று எம்.பி.,க்களை, தி.மு.க., போட்டியின்றி பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆனால், தங்களின் ஆதரவு, தி.மு.க.,விற்கு தேவைப்படுவதால், ஒரு, எம்.பி., பதவியை கேட்டுப் பெற வேண்டும் என்ற குரல், காங்கிரசில் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
'டவுட்' தனபாலு: 100 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருந்த, தி.மு.க.,வில், அடுத்தடுத்து, இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் இறந்ததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியோ, காங்.,கும், 'கெத்து' காண்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், 'கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமானால், வெளியேறலாம்' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், சில நாட்களுக்கு முன் தடித்து பேசியது போல, இனிமேல் பேச மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-மார்-202006:15:57 IST Report Abuse
D.Ambujavalli இருவரின் இறப்பால் காங்கிரஸ் பூனைக்கு ஒரு காலம் வந்துவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X