சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஜெ.,யும், மோடியும் வெற்றி குணம் படைத்தோர்!

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜெ.,யும், மோடியும் வெற்றி குணம் படைத்தோர்!

மு.பெரியண்ணன், கவுண்டிச்சிபாளையம், ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முந்தைய ஜெயலலிதா ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். 'எஸ்மா, டெஸ்மா' என்ற கடுமையான சட்டங்களை பிறப்பித்து, போராட்டத்தை கட்டுப்படுத்தினார், ஜெயலலிதா.

அரசு ஊழியர்களானாலும் சரி, ஆசிரியர்களாலும் சரி, போராட்டம் நடத்தினால், 'சாட்டையைச் சுழற்றுவேன்' என, துணிந்து நின்றார். அதன் பின், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தை கை விட்டனர். எதையும் துணிவுடன் கையாள்வது, ஜெயலலிதாவின் பிறவிக் குணம்.
தமிழகத்தில், பட்டி தொட்டி எங்கும், அ.தி.மு.க., வேரூன்றி, ஆலமரம் போல், உயர்ந்து நிற்க, ஜெயலலிதா தான் காரணம். மக்கள் மனதில், நீங்கா இடம் பெற்றதற்கு முக்கிய காரணம், 'மக்களுக்காக நான், மக்களால் நான்' என, முழங்கினார், ஜெயலலிதா.

அவரது சக்தியாக இருந்தது, காவல் துறையின் பக்க பலம். அரசுக்கு எதிராக, யார் கூச்சல் போட்டாலும், அவர்கள் சிறைப்பறவையாகி விடுவர். பொதுமக்கள் திட்டத்திற்கு எதிராக நடத்தும், எந்த போராட்டத்தையும் அனுமதிக்காதது,அவரது கொள்கையாகவே இருந்தது.

ஜெ.,யின், சட்டசபை செயல்பாடுமிகவும் திறமையானது. எதிர்க் கட்சியினர் அடக்கி வாசிக்கும் அளவு கட்டுக்கோப்பாகவும், கட்டுப்பாடுடனும் சட்டசபையை நடத்தி, அவரது ஆளுமைத் திறமையை வளர்த்துக் கொண்டார். இதனால் தான், அவரை, எதிர்க்கட்சியினரே, 'இரும்புப் பெண்மணி' என, புகழ்ந்துரைத்தனர்.

ஜெ.,வை போல, பிரதமர் மோடியும், எதிலும் பின் வாங்க மாட்டார். கடுமையான வழிகளை கையாண்டு, பிரச்னைகளைத் தகர்த்தெறியும் வல்லமையும்அவரிடம் உள்ளது.மோடியின் திறமைக்கு சான்றாக, பீஹார் மாநில முன்னாள் முதல்வர், லாலுவை மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையிலடைத்தார். காங்கிரசில், பல ஆண்டுகள் மத்திய நிதியமைச்சராக இருந்து, பல ஊழல் வழக்குகளில் சிக்கிய, ப.சிதம்ரத்தை டில்லி, திஹார் சிறையில், 106 நாட்கள் அடைத்து, நல்ல புத்தியை புகட்டினார்.

மோடியின் திறமையைப் பாராட்டி, பன்னாட்டுத் தலைவர்களும் அரசியல் ஞானியாகவே புகழ்கின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெ.,யும், பிரதமர் மோடியும், எந்தக் காரியத்திலும் வெற்றி என்பதே, இலக்காக கொண்டோர், என்பதில், ஐயமில்லை!

வடமாநிலத்தவரிடம்அடகு வைத்துவிட்டனரே!

ஆ.பட்டிலிங்கம்,பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'டிஜிட்டல் தி.மு..க., உருவாவதில் தவறு இல்லை' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்; அது, முற்றிலும் தவறு.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறப்பிற்கு பின், தி.மு.க., வில், அடுத்த முதல்வர் என்ற தகுதியுடன், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக, நெடுஞ்செழியன் தான் முறைப்படி வர
வேண்டும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை மாறியதால், கட்சி அதிகாரம்,
கருணாநிதி வசம் ஆனது.

அண்ணாதுரை இருக்கும் வரை, தி.மு.க., விற்கு தலைவர் கிடையாது. எப்போதும், அதன் தலைவர், ஈ.வெ.ரா., எனக் கூறி, பொதுச்செயலர் பதவி தான், தி.மு.க.,வில் சர்வ வல்லமை பெற்ற பதவி என, அறிவித்தார், அண்ணாதுரை.ஆனால், கருணாநிதி வசம் கட்சியும், ஆட்சியும் வந்தவுடன், தலைவர் பதவியை உருவாக்கி, இவரே, அதன் தலைவர் ஆனார்.
கடந்த, 1967ல், எந்த காங்கிரசை தமிழகத்தில் வேரோடு வீழ்த்தினரோ, அதே காங்கிரசுடன், மத்தியில் கூட்டணி அமைத்து, அமைச்சரவையிலும் இடம் பெற்று, வளம் கொழிக்கும் இலாகாவையும் வற்புறுத்தி பெற்றுக் கொண்டார், கருணாநிதி.
நான்கு முறை முதல்வராக இருந்தவர், கருணாநிதி. மத்தியில், காங்., ஆட்சி நடந்தாலும், பிரதமரையும், ஜனாதிபதியையும் நிர்ணயம் செய்வது, தி.மு.க., என, போர் பரணி பாடியவர்கள்.
இதை விட, தேர்தல் பிரசாரம் செய்ய, கருணாநிதியின் குடும்ப சேனல்கள் ஏராளம். இந்த வசதி ஆளும், அ.தி.மு.க.,வுக்கே கிடையாது
.
கருணாநிதி இறப்பிற்கு பின், ஸ்டாலினை எடுத்துக் கொள்வோம்...உதயநிதி போல், திடீரென அரசியலுக்கு வரவில்லை. எம்.எல்.ஏ.,வாக, மேயராக, துணை முதல்வராக இருந்து, பல பணிகளை பொறுப்பாக பெற்றவர்,அடிக்கடி, 'நான் கருணாநிதி மகன்' எனக் கூறி கொள்வார். இத்துணை சிறப்புகளை பெற்ற, தி.மு.க., இன்று, ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநிலத்தைச் சேர்ந்த, பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்துள்ளது. இதன் வாயிலாக, கருணாநிதியை போல், செயல்படக்கூடிய தலைவர்கள் யாரும், தி.மு.க.,வில் இல்லை என, தெரிகிறது.

'வெள்ளைக்காரன் மட்டும் அல்ல; வடநாட்டானும் அன்னியனே. ஹிந்தி, நமக்கு புரியாது. வடநாட்டாரும் அன்னியனே. அன்னியர் என்பதற்கு, உணவு, உடை, மொழி ஆகியவற்றில் வேறுபாடு காணப்படுவது தான்' என, 'முரசொலி' நாளிதழில், 1958 ஏப்., 8ல் வெளியானது.
அப்பேற்பட்ட கொள்கையுடைய, தி.மு.க., இன்று, வடமாநிலத்தவரிடம், கட்சியை அடகுவைத்து விட்டதே!

கட்சி என்ற மீசைமுளைக்கட்டும்...பிறகு பார்க்கலாம்!

முனைவர் மீனாட்சி பட்டபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியும், கருணாநிதி மகன்களில் ஒருவர். இவரது இளைய சகோதரர், தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின்.

ஊழலுக்கு, அகராதி படைத்த கருணாநிதியை மிஞ்சும் வண்ணம், மதுரை மாவட்டம், திருமங்கலம் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்து, 'திருமங்கலம் பார்முலா' என்ற ஊழல் இலக்கணத்தை கண்டுபிடித்தவர், அழகிரி. கருணாநிதியால், கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் தான், இவர்.இத்தருணத்தில், 'தமிழகத்துக்கு மாற்றம் தேவை; சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது; நான், முதல்வரானால், ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவேன்' என, நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அதுமட்டுமின்றி, '2021ல் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், விரைவில் கட்சி துவக்கப் போகிறேன்' என, அறிவித்துள்ளார்.இத்தனை ஆண்டுகள் காத்திருந்த அழகிரி, ரஜினியின் அரசியல் வரவால், 'குஷி'யாக இருக்கிறார். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற மாதிரி, இப்போது, ரஜினி அறிவித்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, அழகிரி நினைப்பது, ஒன்றும் அதிசயமில்லை. ரஜினியை சந்தித்து, இதற்காக வாழ்த்து கூறியும், வந்துள்ளார், அழகிரி.

முதலில், 'மாற்றம் தருகிறேன்' எனக் கூறும் ரஜினி, ஏமாற்றம் தராமல் கட்சி துவக்கி, கொள்கைகள் என்னவென்று சொல்லட்டும். தமிழருவி மணியனும், 'துக்ளக்' குருமூர்த்தியும், ரஜினி என்ற அத்தையை, சித்தப்பாவாக மாற்ற முயற்சிக்கின்றனர். முதலில், கட்சி என்ற மீசை முளைக்கட்டும்... பிறகு பார்க்கலாம்!

நீதித் துறையைமட்டும் நம்பிகாத்திருக்கும் மக்கள்!

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கிராமப்புற ஏழை மாணவர்கள் இரவு, பகலென கண் விழித்து படித்து, பட்டம் பெற்றனர். இத்தோடு நிற்காமல், அரசு பணியில் சேரலாம் என்ற கனவுடன் இருந்தனர்.

ஆனால், கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்களின் எண்ணம் அனைத்தும், கானல் நீராகி விட்டது.அரசு வேலைவாய்ப்பை பெற, பணம் மட்டும் போதுமானது என்ற நிலை உருவாகி விட்டது. இரவு, பகலாக கண் விழித்து படிக்க வேண்டியதில்லை. பணத்தை கையில் வைத்து, பல்கலையில் யாரை பிடித்தால், பட்டம் பெறலாம். வேலைவாய்ப்புக்குரிய தகுதித் தேர்வில் வெற்றி பெற, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணைத்தில் யாரை பிடிக்க வேண்டுமென்ற வழியை கண்டுபிடித்தால் போதும்; அரசு பணி நிச்சயம் என்றாகி விடும்.பணம் பாதாளம் வரை பாயும் என்பது, டி.என்.பி.எஸ்.சி.. தேர்வாணையம் வாயிலாக, நிரூபணம் ஆகியுள்ளது.ஒரு காலத்தில், அரசியலில் நேர்மையானோர் தான், பதவியை பிடிக்க முடியுமென்ற நிலைஇருந்தது.ஆனால், இன்று அரசியலில் நேர்மை செத்து போய் விட்டது. பணம் மட்டுமிருந்தால் போதும்; கொலைகாரன், கொள்ளைக்காரன், திருடன், காமூகன் எவனாக இருந்தாலும், அரசியலில் பெரிய பதவியை பிடிக்க முடியும்.இவ்வளவு காலமும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் என்பதை, நினைத்தால் வேதனையாக உள்ளது.பணம் கொடுத்து வேலை பெறும் நிலை மாற வேண்டும். இதற்கு, ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அரசு அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது, கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, அவர்கள் ஊழல் வாயிலாக, சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை நீதித்துறையல் மட்டுமே செய்ய முடியும். ஊழல்வாதிகள் மீது, நீதி அரசர்கள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இனியாவது, கிராமப்புற ஏழை மாணவர்களும், அரசுப் பணியில் சேருவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் நீதித்துறையை மட்டுமே நம்பியுள்ளனர்!

விஜயதாரணிகேட்டாரே'செம' கேள்வி!

எஸ்.ஹரிகரன், பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என,தி.மு.க., - அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. 'குற்றவாளிகள் நிரபராதிகள்' என, தி.க., போன்ற கட்சிகள்வாதாடுக்கின்றன.ஆனால், ராஜிவ் கொலை நிகழ்ந்த இடத்தில், அவரைச் சுற்றி, பலியான பெண்கள், போலீஸ்காரர்களின் குடும்பங்களை பற்றி, காங்கிரஸ் உட்பட, எந்த கட்சிகளும் கவலைப்படவில்லை. அந்தச் சம்பவம் நடந்த, 1991 முதல், மத்தியிலும், மாநிலத்திலும், பல்வேறு ஆட்சிகள், மாறி மாறி நடந்து வருகின்றன.மறைந்த முன்னாள் பிரதமர்கள், வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், நரசிம்மராவ், தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெ., யாருக்குமே, இது பற்றி சிந்திக்க நேரம் இல்லை, போலும்.காங்கிரஸ், எம்.எல்.ஏ., விஜயதாரணி மட்டும் தான், இந்த விஷயத்தை, சட்டசபையில் கோடிட்டு பேசியுள்ளார்.'ராஜிவ் கொல்லப்பட்ட இடத்தில், மகிளா காங்கிரசார் சிலர் உயிரிழந்துள்ளனர்; சிலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பணியில் இருந்த, 15 போலீசார் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.பலியானவர்களின் குடும்பங்களுக்கு, இன்று வரை, எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தமிழக அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும்' என, அவர் கோரியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், சோதனைச்சாவடியில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான, சப் இன்ஸ்பெக்டர்வில்சன் குடும்பத்துக்கு,தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிதி, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என, அளித்துள்ளது.அதே போன்று, 'ராஜிவ் கொல்லப்பட்ட சம்பவத்தில், உடன் பலியானோர் குடும்பத்திற்கு உதவாதது ஏன்' என, விஜயதாரணி வினாவியுள்ளார்.ராஜிவ் உடன், பலியானோர் விஷயத்தில், இன்று வரை, காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மவுனமாகவே இருந்து வருகிறார். தி.மு.க., தயவில் உள்ள, காங்கிரஸ், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும், ஏன்,மவுனமாக இருக்கவேண்டும்.ராஜிவ் உடன் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, நிதி உதவி செய்து, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, சமூக பொறுப்பை வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!


----

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
02-மார்-202008:29:38 IST Report Abuse
karutthu திருமதி விஜயதரணி .....உங்கள் காங்கிரஸ் கட்சி நிதியிலிருந்து உதவி செய்திருக்கலாமே நீங்கள் அப்போதைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து அரசு உதவிகளை கேட்டிருக்கலாமே நீங்களும் உங்க கட்சியினரும் இவளவு நாள் என்ன செய்தீர்கள் .உங்கள் தலைவி சோனியா காந்தியிடம் இது பற்றி எப்போவாவது பேசினீர்களா ? அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு பணம் ,பென்ஷன் வேலை எல்லாம் கிடைத்திருக்கும் .ஆனால் உங்கள் கட்சி தொண்டர்கள் பொது மக்கள் இவர்களுக்கு கிடைத்திருக்காது .கோடி கோடியாக உள்ள உங்கள் கட்சி நிதியிலிருந்து சில லக்ஷங்களை பாதிக்கப்பட்டவருக்கு இப்போவாவது கொடுத்தால் வரும் சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சிக்கு வோட்டு போட்டு உங்களுக்கு அதிக எம் எள் எ க்கள் கிடைக்கும் .செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
01-மார்-202018:33:52 IST Report Abuse
karutthu ப.சிதம்ரத்தை டில்லி, திஹார் சிறையில், 106 நாட்கள் அடைத்து, நல்ல புத்தியை புகட்டினார். பிரதமர் .......... இவளவு தானா ? இனி சிதம்பரம் உள்ளே போவாரா அல்லது மாட்டாரா ???
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
01-மார்-202008:10:37 IST Report Abuse
venkat Iyer திரு.ஹரிஹரன் அவர்களே,மாபெரும் காங்கிரஸ் கட்சிக்கு பாதுகாப்பிற்காக காவலர்கள் சென்று குண்டு வெடிப்பில் செத்து மடிந்தார்கள்.அரசு தரப்பில் சட்டப்படி வாரிசுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பணியின்போது இறந்தால் அதற்கு கருணை தொகை இரண்டு லட்சம் மற்றும் பென்ஷன் போன்றவை ஊழியர்களின் ஊதிய சட்ட ஆணைப்படி அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் அரசு நிகச்சியில் கலந்து கொள்ளவில்லை.தேசிய காங்கிரஸ் கட்சி பிராசாரக்கூட்டத்தில் பலியானார்கள்.தேசிய காங்கிரஸ் கட்சியில் இருபதாயிரம் கோடிக்கு மேல் நாடு முழுவதும் சொத்துக்கள் உள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் கருணைப் பணம் கொடுக்க வசதி இல்லாமல் இல்லை.தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி நினைத்தால் அவர்களுக்கு கருணை தொகை கொடுக்க முடியும்.நீங்கள் காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களை நினைத்து பேச முற்படும்போது முதலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்று கேட்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X