அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அறிவித்த ராமநாதபுரம் நகராட்சி விரிவாக்கம் எப்போது

Added : பிப் 29, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அம்மா பூங்கா வளாகத்தில் 2017 ல் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி ராமநாதபுரம் நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

ஆனால் ஊராட்சி இணைப்பு இன்று வரை சாத்தியமாகாததால் ராமநாதபுரம் வளர்ச்சியடையாத நகராட்சியாகவே உள்ளது.ராமநாதபுரம் வரலாற்று ரீதியாக பல பெருமைகளை பெற்றது. மாவட்டத்தின் தலைநகர் என்பதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட எந்த பகுதிக்கு சென்றாலும் ராமநாதபுரத்திற்கு வராமல் செல்ல முடியாது. ஊராட்சியாக இருந்த ராமநாதபுரம் மூன்றாம் நிலை நகராட்சியாக 1959ல் தரம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டிலேயே இரண்டாம் நிலை நகராட்சியானது. பின் 1984ல் 4 கோடிக்கு மேல் 6 கோடிக்கு மிகாமல் ஆண்டு வருமானம் வந்ததால் முதல் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

2017ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ராமநாதபுரம் நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளான பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன் வயல், சூரன் கோட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.ஆனால் இவை இணைக்கப்படாமல் ராமநாதபுரம் நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக மாறாமல் நேரடியாக சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகர் பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

நகர் பகுதி தற்போது வாகன நெரிசலால் விழி பிதுங்குகிறது.ராமநாதபுரத்திற்கு மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தது போல் இந்த ஊராட்சிகள் இணைப்பையும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி அமையும் இடமான பட்டணம்காத்தான் ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை.நகராட்சி பகுதியை தவிர மற்ற பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப் படவில்லை, சூரங்கோட்டை, சக்கரக்கோட்டை, அச்சுந்தன் வயல் ஊராட்சிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படவில்லை, தெருவிளக்குகளும் எரிவதில்லை, ரோடுகள் மோசமாக உள்ளது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைத்தால் தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்புகிறார்கள். 2017ல் முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளின் இணைப்பை இந்த முறையாவது நிறைவேற்றுவாரா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X