புதுடில்லி:டில்லியில் கலவரத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி யவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க, டில்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டில்லியில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் சிலர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், டில்லியின் வட கிழக்கு பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீ வைப்பு
இந்த மோதல், பெரும் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும், கடுமையாக தாக்கிக் கொண்டனர். தீ வைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து என, கலவரக்காரர்கள் கோர தாண்டவமாடினர். இதில், நேற்று வரை, 42 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்பி வருகிறது.
வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள், அத்தியாவசிய பொருட்களைவாங்குவதற்காக வீடுகளை விட்டு வெளியில் வந்து, கடைகளில் குவிந்தனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப் பட்டன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார், துணை ராணுவப் படையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். 'வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில், போலீசார் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியை, பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் பொருட்களை மதிப்பிடும் பணியை, டில்லி மாநில அரசு அதிகாரிகள் நேற்று துவக்கினர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.
சேதம்
சமீபத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் கலவரம் நடந்தபோது, ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அதற்கான இழப்பீடு தொகையை, வன்முறையில் ஈடுபட்டோரிடம் இருந்து வசூலிக்க, அந்த மாநில போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு ஒத்துழைக்காத வர்களிடமிருந்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதே நடைமுறையை, டில்லி போலீசாரும் செயல்படுத்த திட்டமிட்டுஉள்ளனர். கடைகள் திறக்கப்பட்டாலும், மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடுவதற்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கிய, பா.ஜ., - எம்.பி.,பர்வேஸ் வர்மா, கலவரத்தால் பாதித்தோருக்கு உதவும் வகையில், தன் ஒரு மாத சம்பளத்தை, நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி பிரமுகர்தலைமறைவு
* டில்லி கலவரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டவரும், ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப் பட்டவருமான, கவுன்சிலர் தாஹிர் ஹுசேன் மீது, போலீசார், கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் தலைமறைவாகி விட்டார்.
* குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம், டில்லி கன்னாட் பிளேசில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., பிரமுகரும், சர்ச்சையில் சிக்கியவருமான கபில் மிஸ்ரா பங்கேற்றார் ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே, 'நாட்டுக்கு துரோகம் செய்தவர்களை சுட வேண்டும்' என, கோஷம் எழுப்பிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் .
* வட கிழக்கு டில்லி பகுதியில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, வரும், 7ம் தேதி வரை பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
* 'கலவரம் தொடர்பாக, டில்லி போலீசார், ஒரு தரப்பாக விசாரணை நடத்துகின்றனர். சமூக ஆர்வலர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்ய, வக்கீல் குழு ஒன்றை, உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE