நெஞ்சை நிமிர்த்துங்கள் சகோதரர்களே!(உரத்த சிந்தனை)| Dinamalar

நெஞ்சை நிமிர்த்துங்கள் சகோதரர்களே!(உரத்த சிந்தனை)

Added : பிப் 29, 2020 | கருத்துகள் (10) | |
பிற மாநிலங்களில் எப்படியோ, நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக்களுடன் மாப்பிள்ளை, மச்சான் உறவு முறை கொண்டவர்கள், நம் முஸ்லிம்கள். பெரிய நகரங்கள் துவங்கி, சிறிய குக்கிராமங்கள் வரை, சொந்த பந்தங்களாக இரு மதத்தினரும் இணக்கமாக வாழ்கிறோம்.ஹிந்து பண்டிகைகளின் போது, பக்கத்திலிருக்கும், முஸ்லிம் நண்பர் வீட்டிற்கு, பலகாரங்களை அனுப்பி வைப்பதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்
நெஞ்சை நிமிர்த்துங்கள் சகோதரர்களே!(உரத்த சிந்தனை)

பிற மாநிலங்களில் எப்படியோ, நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக்களுடன் மாப்பிள்ளை, மச்சான் உறவு முறை கொண்டவர்கள், நம் முஸ்லிம்கள். பெரிய நகரங்கள் துவங்கி, சிறிய குக்கிராமங்கள் வரை, சொந்த பந்தங்களாக இரு மதத்தினரும் இணக்கமாக வாழ்கிறோம்.ஹிந்து பண்டிகைகளின் போது, பக்கத்திலிருக்கும், முஸ்லிம் நண்பர் வீட்டிற்கு, பலகாரங்களை அனுப்பி வைப்பதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது, அங்கிருந்து, ஹிந்து மச்சான்மார்கள் வீடுகளுக்கு, பிரியாணி, தக்கடி, நெய்ச்சோறு, மட்டன், சிக்கன் குழம்பு கொடுத்தனுப்புவது, இப்போதும் வாடிக்கை.
பாச பந்தம்
முஸ்லிம்களின் வயல்களையும், தோட்டங்களையும், தன் சொந்த நிலம் போல பாவித்து, பக்குவமாக அறுவடை செய்து, நெல்லை வீட்டில் இறக்கி வைப்பது, ஹிந்து தோழன் தான். அதுபோல, நல்ல நாள், பண்டிகை, விசேஷ தினங்களில், அசைவம் சமைக்க, முஸ்லிம்கள் நடத்தும் கடைக்குச் சென்று, இறைச்சி வாங்கி வருவது அல்லது சாப்பிடுவது, காலம் காலமாக நம் ஊர்களில் காணும் காட்சி.ஹிந்து கோவில் விழாக்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பண்டிகைகளுக்கு ஹிந்துக்களும் உதவிகள் பல செய்து, மத நல்லிணகத்தை பேணி வருவது, பல நுாற்றாண்டுகளாக தொடரும் பாச பந்தம்.நாமெல்லாம் சிறுவர், சிறுமியராக இருந்த போது, பக்கத்து வீட்டு இஸ்லாமிய சிறுமியுடனும், அவளின் அக்கா, தம்பிகளுடனும், ஓடியாடி விளையாடியுள்ளோம். 'காக்கா, அத்தா, உம்மா, வாப்பா' போன்ற இஸ்லாமிய உறவு முறைகள் தான், உடன் விளையாடிய நமக்கும்!இப்படித் தான், எத்தனையோ நுாற்றாண்டுகளாக இருந்தோம்; இருக்கிறோம். அதில், சமீப காலமாக பிரிவினையை ஏற்படுத்த முயன்ற சில அரசியல் கட்சிகள், தீவிர மத கொள்கையாளர்கள், பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு, நம் இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும், கொஞ்சம் இரையாகி விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.பழைய பாசமும், பந்தமும், ஒற்றுமையும், இணக்கமும், சமீப காலமாக மறைந்து விட்டது போன்ற உணர்வு லேசாக ஏற்படுகிறது. 'எங்களை இந்தியாவிலிருந்து விரட்ட, மோடி அரசு முயற்சிக்கிறது; அதனால் தான், குடியுரிமைத் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இன்னமும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை கொண்டு வர உள்ளது.'அவை வந்தால், முஸ்லிம்களான நாங்கள், இந்தியாவிலிருந்து விரட்டப்படுவோம்; பாகிஸ்தானுக்கு செல்லும்படி பணிக்கப்படுவோம். இதை அனுமதிக்க மாட்டோம்; உயிருள்ள வரை, எதிர்த்து போராடுவோம்' எனக் கூறி, முஸ்லிம்களில் ஒரு சாரார் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கருத்தில் உண்மையில்லை.இதை, மத்தியில் ஆளும் அரசு, தமிழக அரசு, முஸ்லிம் நடுநிலையாளர்கள், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், உறுதிபட கூறுகின்றனர்.
இதையே, பார்லிமென்டிலும், மத்திய அரசு கூறியுள்ளது. பார்லிமென்டில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தையும், கல்லில் எழுதப்பட்டது போன்றவை.எனினும், சில எதிர்க்கட்சித் தலைவர்களும், சில முஸ்லிம் கட்சித் தலைவர்களும், நம் முஸ்லிம் சகோதரர்களின் மனதில், திரும்பத் திரும்ப தவறான விஷயத்தை கூறி, அவர்களை மூளைச்சலவை செய்து விட்டனர். அதனால், அமைதிப் பூங்காவான தமிழகத்திலும், ஒரு மாதமாக குழப்பம்.
ஹிந்துக்களின் தொப்புள் கொடி சொந்தங்களான முஸ்லிம்களை, 'பாகிஸ்தானுக்கு போ' என, எந்த அரசியல் கட்சியாவது கூற முடியுமா; அவ்வாறு கூறுவதைத் தான், எங்களைப் போன்ற ஹிந்து சகோதரர்கள் பார்த்துக் கொண்டிருப்பரா; அவ்வாறு நடப்பதை, உண்மையான இந்தியர் அனுமதிப்பரா என்பதை, முஸ்லிம் சகோதரர்கள் யோசிக்க மறந்து விட்டனர்.எதிர்க்கட்சிகள் விரித்த மாய வலையில் வீழ்ந்த, முஸ்லிம்களில் ஒரு சிலரை, 'நீங்கள் நினைப்பது தவறு; எந்த காலத்திலும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்த மாட்டோம்' என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் பல முறை கூறியும், அதில் நம்பிக்கையில்லாமல், ஒரு சாரார் தொடர்ந்து போராடுகின்றனர்.
சந்தேகம்
உங்களை இந்த நாட்டிலிருந்து விரட்ட, எந்த சக்தியாலும் முடியாது என்பதை, என் முஸ்லிம் சொந்தங்கள் முதலில் புரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் தானே! அதில் உங்களுக்கு எப்படி சந்தேகம் வந்தது?அதற்கும் சில காரணங்களும் இருக்கலாம். சமீப காலமாக, உங்களில் ஒரு சாரார், வன்முறையை துாண்டுவதே குறிக்கோளாக கொண்டுள்ளனர்; அமைதியின்மையை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்றனர். தேசப் பக்தியை மறந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்; நம் புண்ணியப் பூமியில் குண்டுகள் வெடிக்க ஆதரவு அளித்தனர்.
அதனால், முஸ்லிம்கள் மீது விழுந்த சந்தேகப் பார்வையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன, ஹிந்து மதவாதம் பேசும், ஹிந்துக்களுக்கு ஆதரவான, சில அரசியல் கட்சிகள். அது போலவே, முஸ்லிம்களை போராட துாண்டி, தங்களின் சொந்த அரசியல் அபிலாஷைகளை உயர்த்திக் கொள்ளும் சில முஸ்லிம் கட்சிகளும், அமைப்புகளும் விரித்த வலையில், வசமாக சிக்கிக் கொண்டனர், எம் இஸ்லாமிய சகோதரர்களில் சிலர்.அதனால் தான், இத்தனை ஆண்டுகளிலும் இல்லாத வகையில், இப்போது சந்தேகம் அதிகரித்து, அதன் விளைவாக, சமூகத்தில் அமைதியற்ற நிலைமை உள்ளது.
டில்லியில் ஆறு நாட்களுக்கு முன், மத கலவரம் நடந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் முஸ்லிம்களின் ஒரு சாராருக்கும், அதை ஆதரிக்கும் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் துவங்கிய மோதல், 30க்கும் மேற்பட்டோர் உயிரைக் குடித்துள்ளது.டில்லியில் கொடூரமான குற்றங்கள் நிகழ்ந்த போது, ஒரு பகுதியில், ஹிந்து வெறியர்களின் கொடூர தாக்குதலில் இருந்து, 40 முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தது ஹிந்துக்கள் தான்.
அது போல, சென்னை, வண்ணாரப்பேட்டையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் முஸ்லிம் பெண்கள், ஹிந்து கர்ப்பிணி ஒருவருக்கு, போராட்ட மேடையிலேயே வளைகாப்பு நடத்தி, தங்கள் பெருந்தன்மையை உலகுக்கு பறைசாற்றியுள்ளனர்.இது தான், தமிழகம்; இது தான், இந்தியா; இது தான், இங்கு இது வரை கட்டிக் காப்பாற்றி வரப்படும் மத நல்லிணக்கம், மனித நேயம்!அதை சீர்குலைக்க, இரு மதத்திலும் சிலர் கிளம்பியுள்ளனர். அவர்களை கண்டறிந்து, அவர்களின் துர்போதனைகளுக்கு செவி சாய்க்காமல், தப்பிக்க வேண்டியது தான், இப்போதைய முக்கியமான தேவை. இந்த வேண்டுகோள், ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானதே!அரசியல் லாபங்களுக்காகவே, நம் இருவரையும் மோத விட்டு, போராட்டங்கள் நடத்த வைத்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற, இரு தரப்பிலும், சிலர் சதி வேலைகளைச் செய்கின்றனர்.போராட்டங்கள் மூலம், புதுப்புது தலைவர்கள் உருவாகுகின்றனர்; அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம், காங்., வீழ்ந்தது; தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அக்கட்சித் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் ஆகினர். ஆனால், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவிகளின் குடும்பங்கள், நிர்கதியாகி விட்டன.அதுபோல, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், 1977ல், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தலைமை வகித்தவர் சீதாராம் யெச்சூரி; இப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர். ஆனால், அந்த போராட்டங்களால், நல்ல வாழ்கையை இழந்தவர்கள் பலர்.
இப்போதும், அந்த பல்கலையில் நடந்த போராட்டத்தால், அப்பாவி மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் தலைவர் ஐஷே கோஷ், உலகம் அறிந்த பெண் தலைவராக மாறி விட்டார். ஆனால், அடி வாங்கியது, அவரை தலைவராக நினைத்த மாணவர்கள் தான்.டில்லியில் இப்போது நடந்த வன்முறையில் இறங்கியதும், அதனால் பாதிக்கப்பட்டதும், இருதரப்பு அப்பாவி மக்கள் தான்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, போராடத் துாண்டியவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு வேளை உணவு கூட, அவர்கள் வழங்கவில்லை.
இது தான் யதார்த்தம்
எனவே, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். இரு பிரிவினரையும் மோத விட்டு, அரசியல் லாபம் காண நினைக்கும் கட்சிகள் எவை, அத்தகைய தலைவர்கள் யார் என, இரு பிரிவினருக்கும் நன்கு தெரியும். அவர்களை விட்டு, தனித்திருப்போம்.இந்த நேரத்தில், முக்கியமான ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ஹிந்துக்களை தங்கள் பக்கம் திரும்ப, தாங்கள் தான் ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்பது போல குழப்பம் ஏற்படுத்தும் கட்சிகள், அமைப்புகள், முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்களின் கொம்புகளை சீவி விடுகின்றன.
அதற்காக, தேச பக்தி, நாட்டின் நலன், பாதுகாப்பு போன்றவற்றை, அந்த சக்திகள் குறிப்பிடுகின்றன. சமீப காலமாக, முஸ்லிம்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் வழக்கமான, முஸ்லிம்களின் பச்சைக்கொடிக்குப் பதில், நம் தேசியக் கொடியை காண முடிகிறது. அது, தொடரட்டும்.அதே ரீதியில், ஹிந்து மத ஆர்வலர்களுக்கும், பிரிவினையை ஏற்படுத்த முயலும் முஸ்லிம் அமைப்பினருக்கும், முஸ்லிம்கள், தங்களின் இந்திய தேச பக்தியை வெளிக்காட்டுவதன் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்.'நாங்களும் இந்த தேசத்தின் பக்தர்கள் தான். இந்த நாடு தான் எங்களுக்கும் நாடு; எங்களை பிரிக்க முடியாது' என்பதை, உணர்த்தும் வகையில், முஸ்லிம்களின் செயல்பாடு அமைய வேண்டும்.நம் தமிழகத்தின் சூழ்நிலை, கேரளாவில் கிடையாது; கேரளாவில் நிலவும் சூழ்நிலை, உத்தர பிரதேசத்தில் கிடையாது. நாம் நம் பகுதியில் ஒற்றுமையாக இருப்போம்; சூழ்ச்சிகளை வேரறுப்போம்.குழப்பத்தை ஏற்படுத்தும், கலவரத்திற்கு துாபம் போடும், சமூக வலைதள, 'வீடியோ'க்கள், தகவல்களை புறக்கணிப்போம். எங்கோ, எந்த மாநிலத்திலோ நடக்கும் தேவையற்ற குற்றங்களுக்கும், பிரச்னைகளுக்கும், இங்குள்ள முஸ்லிம்கள் குரல் கொடுப்பதும், அஞ்சுவதும், பதில் தெரிவிப்பதும் தேவையற்றது.உங்களை, எந்த சட்டம் போட்டும், எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிக்க நினைக்கும் எந்த முயற்சியையும், உங்களின் ஹிந்து சகோதரர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; அனுமதிக்க மாட்டார்கள்.
இது என்ன இலங்கையா... இந்தியா!
வேற்றுமையில் ஒற்றுமை காணும், பாரம்பரிய புகழ் மிக்க, புண்ணியத் தேசம்.எனவே, நம்பிக்கையுடன் இணக்கமாக வாழுங்கள்; போராட்டங்களை கைவிடுங்கள். உங்களைப் போராடத் துாண்டிய கட்சிகள், கட்சித் தலைவர்களின் முகங்களில் கரியைப் பூசுங்கள்.அதே நேரத்தில், உங்களை சிறுபான்மையினர் எனக் கூறி, 'போராடாவிட்டால் உரிமைகளைப் பெற முடியாது' என, துாண்டி விடும் சக்திகளை இனம் கண்டு, அவர்கள் திரும்ப எழ முடியாத அளவுக்கு, பாடம் கற்பியுங்கள். 'அவர்களிடம், 'இது, எங்கள் நாடு. இங்கிருந்து எங்களை விரட்ட, யாராலும் முடியாது. இனிமேலும் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்ய வேண்டாம்' என, கூறுங்கள்.'இந்தியா நம் தாய் நாடு; இந்தியர் அனைவரும் நம் உடன் பிறந்தோர்' என்ற நினைவை, எப்போதும் அகற்ற வேண்டாம்
தவிர்ப்போம்
குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, குடிமக்கள் பதிவேடு, இந்த உலகில், பெரும்பாலான நாடுகளில் உள்ளன. வளர்ந்து வரும் நம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது. பார்லிமென்டில் சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத்தப் பிறகு, அந்தச் சட்டத்தை வாபஸ் பெற, எந்த மத்திய அரசும் முன்வராது.இதை உணர்ந்து, 'நானும் இந்த நாட்டின் குடிமகன் தான்' என, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள். உங்களில் உள்ள சில, பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகளை, சட்டத்தின் முன் நிறுத்துங்கள். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என, எல்லாரும் இணைந்தது தான் இந்தியா!
ஒருவர் இல்லாமல், மற்றொருவர் இல்லை. நாம் ஒற்றுமையாக வாழ்ந்து, நம் நாட்டை முன்னேற்றுவோம்; வீண் போராட்டங்களை தவிர்ப்போம்!
தொடர்புக்கு:

snalluraan@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X