சென்னை:நில விற்பனையில், பத்திரங்களை பதிவு செய்யும் முன், மனை உட்பிரிவு செய்வதை கட்டாயமாக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தானியங்கி முறை
வீட்டுமனை விற்பனையில் மோசடியை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்ற திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது, சொத்து முழுமையாக கைமாறும் பத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்குவோர், பத்திரப்பதிவுக்கு பின் உட்பிரிவு செய்ய, நில அளவையாளரை அணுக முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, வருவாய் துறை பிறப்பித்து உள்ள அரசாணை:பத்திரப்பதிவுக்கு முன், மனையை உட்பிரிவு செய்யும், நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
இதன்படி, உரிமையாளர்கள், தங்கள் நிலத்தை விற்கும் முன், தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து, விற்பனை செய்ய உள்ள நிலத்தின் ஒரு பகுதிக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும்.அதன் அடிப்படையில், தாலுகா அலுவலக நில அளவையாளர்கள், உரிய விசாரணை நடத்தி, உட்பிரிவுக்கான ஆவணங்களை தயார் செய்வர். பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதுகுறித்த தகவல், நில உரிமையாளருக்கும், சம்பந்தப்பட்ட பகுதி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். அதன்பின், விற்பனையை பதிவு செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளலாம்.
ஒப்புதல்
இதற்காக, நில அளவை துறை வகுத்து உள்ள நடைமுறைகளுக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், சூலகிரி; பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார், ஆலத்துார் தாலுகாக்களிலும், இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.1,000 கட்டணம் வசூல்
*விற்பனைக்கு முன் உட்பிரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ள, ஊரக பகுதிகளில், 2 ஏக்கர் வரை, நகர்ப்புற பகுதிகளில், 2,400 சதுர அடி வரை, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
*ஒரு விண்ணப்பத்தை பைசல் செய்ய, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அவசர முறையில், 10 நாட்களில் விண்ணப்பத்தை பைசல் செய்ய, ஊரக பகுதிகளில், 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.