வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதித்து, 50 வயது மதிக்கத்தக்க நபர், அமெரிக்காவில் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 537 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,888 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 79,822 ஆகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஒருவர் பலி
கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், வைரஸ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாக டிரம்ப் கூறினார். இருப்பினும், அவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அமெரிக்காவிலும் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE