வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனுமதி கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, 2019 அக்., 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும்; அதே மாதம், 27ம் தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணியளவில் நடந்த பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , மாநில அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூடுதல் இடங்கள்
இந்த விழாவில் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: ராமநாதபுரம் புண்ணிய பூமி. ராசியான மாவட்டம். ராமநாதபுரத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆர்., யே சேரும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். சமய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்திற்கு ஏற்கனவே அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மருத்துவ கல்லூரி துவங்கப்படுகிறது.11 மருத்துவ கல்லூரிகளில் முதல் அடிக்கல் நாட்டப்படும் இடம் ராமநாதபுரம். இந்தியாவிலேயே புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழகம். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதால் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளோம். புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர்கள் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அரண்
புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதை பெரும் மகிழ்ச்சியாகவும் வெற்றியாகவும் கருதுகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் 1350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நிதியுதியுடன் ரூ.1,637 கோடி செலவில் நகர்ப்புற சுகாதார திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறுபான்மையினரை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு தொடர்ந்து திகழும். மக்களிடையே யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் முறியடிக்கப்படும். தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE