இந்த செய்தியை கேட்க
சென்னை: தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவி வேட்பாளர்களாக, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா, எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல், வரும், ௨௬ம் தேதி நடக்கிறது. சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலம் அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், தலா மூன்று பேரை தேர்ந்தெடுக்க முடியும்.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

அவரது அறிக்கையில், 'ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்கான, தி.மு.க., வேட்பாளர்களாக, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவர்' என, கூறப்பட்டுள்ளது. திருச்சி சிவாவுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் என்பதால், நான்காவது முறையாக, ராஜ்யசபா எம்.பி.,யாகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் செல்வராஜ், 1996 - 2001, தி.மு.க., ஆட்சியில் கதர்துறை அமைச்சராக இருந்தார். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த இவர், முதல் முறையாக, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். கொங்கு மண்டலத்தில், அருந்ததியர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளதால், அந்த சமுதாய ஓட்டுக்களை வளைக்கும் வகையில், அந்தியூர் செல்வராஜை, தி.மு.க., வேட்பாளராக அறிவித்துள்ளது.
தி.மு.க., சட்ட ஆலோசகர், என்.ஆர்.இளங்கோ,முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர். மூத்த வழக்கறிஞரான இவர், கட்சி சார்பில் தொடரப்படும் வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நடத்துவார் என்பதால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்., ஏமாற்றம்:
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். தி.மு.க., சார்பில் நிறுத்தப்படும் மூன்றாவது வேட்பாளரை, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், எட்டு பேரும் ஆதரித்தால் தான், வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனாலும், அக்கட்சிக்கு வாய்ப்பு அளிக்காததால், காங்கிரசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE