சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வியாபாரிகள் நினைத்தால் ஒழிக்க முடியும்!

Added : மார் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வியாபாரிகள் நினைத்தால் ஒழிக்க முடியும்!

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'டூவீலர்' வாகனங்களில் செல்வோரில் பலர், தங்கள் அணியும், 'ஹெல்மெட்' தரமானது தானா என, பார்த்து வாங்கி அணிவதில்லை. கடந்த ஆண்டுகளில் தரமற்ற, 'ஹெல்மெட்' அணிந்து, வாகனம் ஓட்டியோரில், நுாற்றுக்கு மேற்பட்டோர் விபத்துகளில் மரணம் அடைந்து உள்ளனர். இதை பார்த்த பிறகாவது, உயிர் காக்கும் கவசமான, 'ஹெல்மெட்' வாங்கும் போது, தரமானதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

இந்தியாவில், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, 'ஹெல்மெட்'கள் விற்கப்படுகின்றன. இவற்றின் எடை, 1.5 கிலோ; இவற்றை வாங்கும் போது, அது தரமானதா, ஐ.எஸ்.ஐ., அல்லது பி.ஐ.எஸ்., தரச் சான்று உள்ளதா என, பரிசோதித்து வாங்க வேண்டும். தலைக்கு பொருந்தக் கூடிய, 'டபுள் டி லாக்' ஹெல்மெட் அணிவது சிறந்தது.

'ஹெல்மெட்' அணிவது, வாகன ஓட்டிகளுக்கு, பாதுகாப்பானது என்பதை, பலர் இன்னமும் உணரவில்லை. 'ஹெல்மெட்' அணிவது, கட்டாய மயமாக்கப்பட்ட பின், இன்னமும் பலர் வேண்டா வெறுப்புடன் தான் அணிகின்றனர். தலைவிதி என்றும், தலைவலி என்றும் சபித்துக் கொண்டே அணியும் 'ஹெல்மெட்' எவ்வளவு உயர்வானது என்பதை, ஏதாவது விபத்தை பார்க்கும் போது தான் உணர்கிறோம்.

சாலை போக்குவரத்தில், வேகத்தை விட, நிதானம் முக்கியம் என்பதை, பலர் மறந்து விடுகின்றனர்.'சிக்னல்' மாறும் முன், சீறிப்பாயும் வாகனங்களை, சாலைகளில் சாதாரணமாக பார்க்க முடிகிறது; இதுவே, விபத்தாகவும் முடிகிறது!'ஹெல்மெட்' விற்பனையாளர்களும், இதை ஒரு வியாபாரமாக கருதாமல், மனித உயிரை பாதுகாக்கும் கருவியின் விற்பனையாக நினைக்க வேண்டும். தரமற்ற, 'ஹெல்மெட்' களை குறைந்த விலைக்கு விற்பதை விட, மனித நேயத்தோடு தரமானவற்றை அதிக விலைக்கு விற்றாலும் தவறில்லை.வணிகர்கள் நினைத்தால், தரமற்ற, 'ஹெல்மெட்'களை மார்க்கெட்டில் இருந்து கண்டிப்பாக ஒழித்து விட முடியும். எனவே, வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்!

இடஒதுக்கீட்டை பின்பற்றினால் நாடு என்னவாகும்!

வி.எம்.மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: 'ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை; ஊதியம் பெறுவதை, கல்வி, வேலைவாய்ப்பில் சேர்க்கக் கூடாது; கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி, இடஒதுக்கீட்டை கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசியல்வாதிகள் கேட்கின்றனர்.இதற்கு மேலே ஒரு படி சென்று, 'பதவி உயர்வுகளுக்கு கூட, இடஒதுக்கீடு அதுவும், ஜாதி வாரியாக வேண்டும்' என கேட்டு, ஒரு சில அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டங்கள், பிரசாரங்கள் நடத்துகின்றனர்.

பள்ளிகளில், வேலையில் சேரும்போது கூட, இடஒதுக்கீட்டை கேட்பது, நியாயம் தான். அதில்கூட, அதிக வருமானம் உள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு கேட்பது, எந்த விதத்தில் நியாயம்...வறுமை, ஜாதி வாரியாக பின்தங்கியோருக்கு, முதல் தலைமுறை உத்யோகத்துக்கு வரும் கிராமவாசிகளுக்கு, கூலித் தொழிலாளர் பிள்ளைகளுக்கு, இடஒதுக்கீடு கேட்பது, நியாயம்.அதுவும் சுதந்திரம் அடைந்து, 72 ஆண்டுகளுக்குப் பின், நம்மை நாமே ஆண்டு வரும், ஜனநாயக ஆட்சிக்கு, அவமானம் தான்; இருப்பினும், பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால், வேலையில் சேர்ந்த பின், பதவி உயர்வில், ஜாதி வாரி இடஒதுக்கீடு கேட்பது, படுஅநியாயம்.சமீப காலங்களில், நாட்டில், குறிப்பாக, தமிழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்னை அதிகமாக அரசியல்வாதிகளால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அதிகம் பேசி, அரசியல் ஆக்குகின்றனர். பதவி உயர்வு, தகுதி, திறமை, அனுபவத்தில் அடிப்படையில் வழங்கப்பட்டால் தான், அந்தப் பதவிகளுக்கு உண்டான நேர்மையான சேவையைச் செய்ய முடியும்.

அப்போது தான், நிர்வாகம் நல்ல முறையில் நடக்கும்; இதை, உச்ச நீதிமன்றமும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு எல்லாம், இடஒதுக்கீட்டை பின்பற்றினால், நம் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போய் விடும்!

இனி இழிசெயலில் யாரும் ஈடுபட வேண்டாம்!

ஏ.அஸ்வினி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், சி.ஏ.ஏ.,ஐ எதிர்த்து, தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் சில உதிரிக் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் நியாயமே இல்லை.

பிரதமர், உள்துறை அமைச்சர், இது பற்றி மிகத் தெளிவாகப் பேசியும், விவரித்தும் கூட, இந்தச் சட்டம் பற்றி தவறான கருத்துக்களை, மக்களிடையே சிலர் பரப்பி வருகின்றனர். நல்ல முறையில் ஆட்சி செய்யும், மத்திய அரசை பற்றி தவறான முறையில், பிரசாரம் செய்து வருகின்றனர்.காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, நாட்டிற்கு, எந்த நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மிகப் பெரிய அளவில் ஊழல் செய்து, தங்கள் வளத்தை பெருக்கி கொண்டனர்.

பத்து தலைமுறைக்குச் சொத்துக்கள் சேர்த்து, இன்று பொறுப்பில்லாமல், காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர். அன்றாட கூலி வேலை செய்வோர், வேலையற்றோரை, பகடைக்காய் ஆக்கி, தங்கள் போராட்டத்திற்கு ஆள் சேர்த்து கொள்கின்றனர். இலவசங்களுக்காக அவர்கள் பின் செல்லும் கூட்டம், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களை தங்கள் சொந்தக் காலில் நிற்க திட்டங்கள், வசதிகள் செய்து கொடுக்காமல், நாய்க்கு ரொட்டி துண்டு வீசுவது போல், கூலி கொடுத்து போராட்டங்கள் நடத்துவது, கிரிமினல் குற்றம் மற்றும் கொடுமையிலும் கொடுமை. இப்படிப்பட்ட போராட்டங்கள் வாயிலாக, தேச விரோதக் கருத்துக்களை பரப்பி, மக்களை எதிர் மறையாக திசை திருப்புகின்றனர்.

இதன் வாயிலாக நடக்கும் இடையூறுகளைக் கண்டு, நடுத்தர வர்க்க மக்கள் மனம் வெதும்ப தான் முடியும். சாதாரண மக்களுக்கு இடையூறு அளிக்கும், எந்தவித போராட்டத்திற்கும், காவல் துறை அனுமதி அளிக்கக் கூடாது. சுதந்திரம் என்ற பெயரில், மீறிச் செயல்படுவோருக்கு, கடும் தண்டனை அளித்தால் தான், தேச விரோதக் கட்சிகள் மற்றும் கும்பல்கள் அடங்கும். வரக்கூடிய எந்தத் தேர்தல்களிலும், இப்படிப் போராட்டம் நடத்தும் கட்சிகளை மக்கள் அடியோடு புறக்கணிக்க வேண்டும். மக்களுக்கு தவறான வழிகாட்டும் அரசியல்வாதிகள், இனி, இந்த இழிசெயலில் ஈடுபடவே கூடாது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
02-மார்-202007:33:50 IST Report Abuse
venkat Iyer இட ஒதுக்கீடு பற்றி திரு மகிழ்நன் எழுதியதில் எனக்கு மாற்று கருத்து இருக்கின்றது. கிராமங்களில் விவசாயத்தை நம்பி பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழும் உயர் சாதியை சார்ந்தவர்களுக்கு இப்போதுதான் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளனர். என்னால் கிராமத்தில் இருந்து இருபது ஏக்கர் விவசாயம் பன்னிரண்டாவது படித்த காலத்திலேயே சிறப்பாக நிர்வாகம் செய்து நல்ல உற்பத்தி செய்த எனக்கு விவசாயம் படிக்க ஆர்வம் அடைந்த எனக்கு நுழைவு தேர்வு எழுதிய என்னால் அதனை படிக்க இடம் கிடைக்க வில்லை. எனது கிராமத்து பள்ளியில் இரண்டாவது ரேங் மொத்த மதிப்பெண்ணில் எடுத்தேன். எனது கிராம சூழ்நிலையில் உச்சபட்ச மதிப்பெண் கஷ்டப்பட்டு இதுதான் என்னால் செய்ய முடிந்தது.ஆனால் என்னைவிட எனது குக்கிராமத்தில் எனது நடுத்தர வசதியை கொண்ட இட ஒதுக்கீட்டில் பொறியியல் பயின்று நான்கு ஆண்டுகளில் முடிக்க வேண்டியதை ஆறு ஆண்டுகளில் முடித்து இட ஒதுக்கீட்டில் பொதுப்பணி துறையில் வேலையும் பெற்றுள்ளார்.இதில் எனது அப்பாவும் அவரது அப்பாவும் கல்லூரியில் படிக்கவும் இல்லை.அரசு பணியிலும் இல்லை.இரண்டு குடும்பமும் விவசாய குடும்பம்தான்.என்னுடைய கேள்வி என்னவென்றால் படிக்க இட ஒதுக்கீடு கொடுப்பது ஏற்புடையது.மேலும் கல்வி செலவுக்கு பணம் கொடுப்பது ஏற்புடையது. இவ்வளவு செய்தும் அறிவை நன்கு வளர்ந்து கொள்வது இட ஒதுக்கீட்டில் பயிலும் அவர்களது கடமையல்லவா?. குடும்ப சூழ்நிலை பாதிக்கும் என்ற நிலையில் அரசு விடுதியில் இருந்தும் இவர்கள் படிக்கின்றனர்.அப்படி இருந்த போதும் வேலையிலும் இவர்கள் இட ஒதுக்கீடு கேட்பது எந்த விதத்தில் நியாயம் .அரசு பணியில் சேர்ந்ததும்,அந்த பணியை சிறப்பாக செய்கின்றார்களா என்பதை அரசு பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.அவர்களுக்கு பணித்திறனை வளர்க்க அரசு கண்டிப்புடன் செயல்பட்டால் தான் பிரயோஜனம் இல்லாத இட ஒதுக்கீட்டில் வந்த பணியாளர்களை அப்புறப்படுத்த முடியும்.அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X