பழையதை பத்திரப்படுத்தினால் பொக்கிஷமாகும்! நாணய சேகரிப்பு ஆர்வலர் கார்த்திக் அறிவுரை

Updated : மார் 03, 2020 | Added : மார் 03, 2020
Share
Advertisement

இந்திய ரூபாய் நாணயங்கள், நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவர்னர்களின் கையெழுத்து அடிப்படையில் சேகரித்து வருபவர் மணலி கார்த்திக், 34. அதிகம் புழக்கத்தில் இல்லாத நாணயங்களையும் பத்திரப்படுத்தி, ஆச்சரியப்படுத்துகிறார். தவிர, 64 நாடுகளின் ரூபாய் நோட்டுகள், 82 நாடுகளின் நாணயங்களை சேமித்து, பள்ளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்.
அவரிடம் பேசியதிலிருந்து...



latest tamil news





நீங்கள் என்ன படித்துள்ளீர்?



பி.டெக்., பயோ டெக்., பட்டப்படிப்பு படித்துள்ளேன். வீட்டருகே, இயற்கை வேளாண்மை அங்காடி நடத்தி வருகிறேன்.


நாணயம், சேகரிப்பில் ஆர்வம் எப்படி?



சிறுவயதில், ஒரு காசு மதிப்புள்ள ஓட்ட கால் அணாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அதில் உள்ள, வருடத்தை பார்த்து பத்திரப்படுத்த தோன்றியது. அன்று முதல், கையில் கிடைத்த காசுகளை சேமித்து, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, சேகரித்து வைத்து உள்ளேன். 1926ல் வெளியான அரையணா முதல், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும், என் சேகரிப்பில் உள்ளன. அதிகம் புழக்கத்தில் இல்லாத நாணயங்களும் உள்ளன.


புழக்கத்தில் இல்லாத நாணயமா?



ஆம். இந்திய அரசால் வெளியிடப்பட்ட, 50, 75, 100, 150, 350, 500, 1,000 ரூபாய் நாணயங்கள் உள்ளன. அதிக புழக்கத்தில் இல்லாத இந்த நாணயங்களை சேகரிக்க, படாதபாடு பட்டேன். ஒரு சிலரிடம் மட்டுமே இதுபோன்ற நாணயங்கள் உள்ளன.


latest tamil news




ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சம் பற்றி?



ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கையெழுத்துபடி சேகரித்து வருகிறேன். 10 ரூபாய் நோட்டில், 10 வெவ்வேறு கவர்னர் கையெழுத்திலான, ரூபாய் நோட்டுகள் உள்ளன. அதுபோலவே, அனைத்து ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டு பணமும் உங்கள் சேகரிப்பில் உள்ளதே?



நான், 2009 - 12 வரை ஆப்கானிஸ்தானிலும், 2016 - 18 வரை கத்தாரிலும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். அங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பர். அவர்களின் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பார்த்து, அவற்றை சேகரித்துள்ளேன்.

கம்போடியா, வடகொரியா, உக்ரைன், பிஜூ, பாகிஸ்தான், துனிசியா, துருக்கி, எகிப்து, கென்யா உள்ளிட்ட, 64 நாடுகளின் ரூபாய் நோட்டுகள், இந்தோனேஷியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட, 82 நாடுகளின் நாணயங்களும் உள்ளன.


latest tamil news




நாணயங்கள் சேகரிப்பில் உள்ள இடர்பாடு?



பலரிடம், நாணயம் கேட்டு, பல நாட்கள் தவம் இருந்துள்ளேன். சிலரிடம் கெஞ்சி, காலில் விழாத குறையாக, பல நோட்டுகளை வாங்கி இருக்கிறேன். வெளிநாட்டில் வேலை பார்த்த போது, என் நாணய சேகரிப்பை பார்த்து, சிலர் தானாக கொடுத்து உதவுவர்.


latest tamil news




பள்ளிகளில் கண்காட்சி வைப்பதன் நோக்கம்?



இந்த தலைமுறையினர், அடுத்த தலைமுறைக்கு, இன்றைய பொருட்கள், நாணயங்களை பத்திரப் படுத்தி, காட்சிப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, ரூபாய் மற்றும் நாணய சேகரிப்பு பழக்கத்தை, நான் காட்சிப்படுத்துவதன் நோக்கம். எதையும், பழையது என நினைத்து, அலட்சியப்படுத்தி விடக்கூடாது. அதை பத்திரப்படுத்தினால், வருங்கால சந்ததிக்கு, பொக்கிஷமாக அது இருக்கும்.

இவர் முயற்சியை பாராட்டவும், பள்ளிகளில் ரூபாய், நாணய சேகரிப்பை கண்காட்சியாக வைக்கவும், கார்த்திக்கை, 98844 11331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X