மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, சாலை போக்குவரத்திற்கு மாற்றான மெகா திட்டம் தேவை. சாலைகள் நடுவே பாலங்கள் அமைத்து, அதில் மெட்ரோ ரயில் இயக்கும் 'கொச்சி மாடல்' திட்டத்தை மதுரையில் செயல்படுத்தலாம்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகர், அரசியல் தலைநகர், கலாசார தலைநகர், துாங்கா நகர் என்றெல்லாம் பெருமை பேசும் மதுரையில் அகலமான சாலைகள் இல்லை; அகலமான மேம்பாலங்கள் இல்லை.2011 மக்கள் தொகை கணக்குப்படி மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 14.71 லட்சம். மாவட்டத்தின் மக்கள் தொகை 25 லட்சம். தற்போது மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டிவிட்டது. தினமும் 3 லட்சம் பேர் மதுரைக்கு வந்து செல்கின்றனர்.நாளுக்கு நாள் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நகருக்குள் வந்து வெளியேறும் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகம். அதற்கு தகுந்தபடி சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இதற்காக இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவதும், நகருக்குள் புதிய சாலைகள் உருவாக்குவதும் இயலாத காரியம்.எனவே வளரும் வாகன போக்குவரத்தை எதிர்கொள்ள மாற்று ஏற்பாட்டை தேடா விட்டால், 2030 ல் மதுரையில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 6 கி.மீ., முதல் 8 கி.மீ., வரையே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.சென்னையில் மின்சார ரயில், மாடி ரயில், மெட்ரோ ரயில் என்று போக்குவரத்து வசதி மேம்பட்டு விட்டது. கோயம்புத்துாரிலும் மெட்ரோ ரயில் துவங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மதுரையில் மோனோ ரயில் திட்டம் துவங்கும் என்று அறிவித்தார். பிறகு அந்த திட்டம் கை விடப்பட்டது.
கொச்சியை பாருங்கள்
மதுரை குறுகலான நகரம்; மெட்ரோ ரயிலுக்கான இட வசதிகள் இல்லை என்ற கருத்து எழும். அப்படி நினைப்பவர்கள் கேரளாவின் இரண்டாவது தலைநகர் எனப்படும் கொச்சிக்கு சென்று பார்க்க வேண்டும். நெரிசல் மிக்க, அகலமில்லாத சாலைகளை கொண்டது தான் கொச்சி. என்றாலும் பெரிய அளவில் நிலத்தை கையகப்படுத்தாமல், கட்டடங்களை இடிக்காமல், சாலையின் நடுவே பாலங்கள் அமைத்து அதில் மெட்ரோ ரயிலை ஓடவிட்டுள்ளனர். எங்கும் தரைக்கடியிலும், தரையிலும் ரயில் செல்ல வில்லை. புறநகரான ஆலுவா என்ற இடத்தில் இருந்து, 25 கி.மீ., துாரத்தை நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கடந்து, தைக்குடம் என்ற மற்றொரு புறநகர் பகுதியில் முடிகிறது மெட்ரோ பாதை. இடையே 25 ஸ்டேஷன்கள். மூன்று பெட்டிகளுடன் 975 பேர் பயணிக்க வசதியாக மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் வலம் வருகிறது மெட்ரோ ரயில்.நான்காண்டுகளில் பணியை முடித்து, இரண்டாண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுகிறது கொச்சி மெட்ரோ. இரண்டு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், படகு போக்குவரத்து ஜெட்டி வழியாக செல்லும் மெட்ரோ ரயில் விரைவில் விரிவாக்கப்பட்டு, விமான நிலையத்தையும் இணைக்க உள்ளது.தினமும் சராசரியாக 65 ஆயிரம் பேர் மெட்ரோவை பயன்படுத்துவதால், ஆட்டோக்கள், டவுன் பஸ்கள், டூவீலர்களால் சாலைகளில் நெரிசல் இல்லை. எரிபொருள் நுகர்வு குறைந்து விட்டது. வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாக குறைந்து விட்டது.
மதுரையில் எப்படி
இதே பாணியில் மதுரையிலும் மெட்ரோ அமைக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து காலத்தின் கட்டாயம். திருமங்கலம் டூ ஒத்தகடைக்கு எய்ம்ஸ், விமான நிலையம், உயர்நீதி மன்றம் வழியாக ஒரு பாதை; திருப்புவனத்தில் இருந்து முற்றிலும் மதுரை நகர் வழியாக நாகமலை புதுக்கோட்டைக்கு ஒரு பாதை என்று பல வழிகளை பரிசீலிக்கலாம். முயன்றால் முடியாதது இல்லை. ஆனால் அதற்கு மதுரையின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும்; திட்டமிட வேண்டும்.சிறிய பாலங்கள், இணைப்பு சாலைகள் அமைப்பதால் மதுரை வளர்ந்து விடாது. நகர் விரிவாக்கம் அடையும் போது, தொலைநோக்கில் அதற்கேற்ற மாற்று போக்குவரத்து திட்டங்களை அரசு ஆலோசிக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் மதுரை என்றும் பெரிய கிராமமாகவே' இருக்கும்.
மாநில அரசு திட்ட ஒப்புதல் அனுப்ப வேண்டும்
என்.ஜெகதீசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர்: மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 50 சதவீதம் நிதி பங்களிப்பு தர தயார் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்து மாநில அரசு திட்ட ஒப்புதல் வழங்கி, ஐம்பது சதவீத நிதி பங்களிப்பு அளிப்பதாக தெரிவித்தால் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என லோக்சபாவில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் 2வது கட்ட மெட்ரோ பணிகள் முடிந்துள்ளன. கோவையில் மெட்ரோ ரயில் சேவையை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் புராதன சிறப்பு மிக்க வளர்ந்து வரும் மதுரைக்கு இத்திட்டம் அறிவிப்பதில் தாமதம் நிலவுகிறது. இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சங்கம் பல முறை வலியுறுத்தியுள்ளது.
முதல்வரிடம் வலியுறுத்தப்படும்
ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்: எய்ம்ஸ் மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனைகள், பறக்கும் பாலங்கள் என மதுரையில் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் மதுரை நகரில் போக்குவரத்தை எளிமையாக்க மெட்ரோ ரயில் சேவை அவசியம். நகரங்களின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு தமிழக அரசு சென்னை, கோவையில் மெட்ரோ ரயில் சேவையை நிறைவேற்றி வருகிறது. அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தொடர்ந்து வலியுறுத்துவோம். எய்ம்ஸ் மருத்துவ மனையை கொண்டு வந்தது போல, இத்திட்டத்தையும் கொண்டு வர முழு முயற்சி மேற்கொள்வோம்.
நத்தம் டூ திருமங்கலம்
இ.ராமகிருஷ்ணன், பொறியாளர்: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் அவசியம். ஆனால், இங்குள்ள பழமையான கோயில்கள், கட்டடங்கள் பாதிக்காத வகையில் வழித்தடம் அமைக்க வேண்டும். அந்த வகையில் நத்தம் - ஆனையூர் - கூடல்நகர் வழி திருமங்கலம் வரை அமைத்தால் நகருக்கு வரும் வாகனங்கள் குறையும். மாட்டுத்தாவணி - சர்வேயர் காலனி - ஊமச்சிகுளம் வழி கூடல்நகர் வழித்தடத்தில் இணைக்கலாம். இப்பகுதிகளில் ரோடு அகலமாக இருப்பதால் மெட்ரோ அமைப்பதில் சிக்கல் இருக்காது.
முதலீடுகள் அதிகரிக்கும்
ஏ.செந்தில்ராஜா, டெக்ஸ்டைல்ஸ் மிஷினரி உற்பத்தியாளர்: சீனா ஷாங்காய், துபாய் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை தான் நம்பியுள்ளனர். ஷாங்காயில் சாலை வழியாக வாகனங்களில் ஒரிடத்திற்கு செல்ல 2 மணி நேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலில் பத்து நிமிடங்களில் சென்று விடலாம். இதனால் கல்வி, பணிக்காக செல்வோர் மெட்ரோ ரயில்களை நம்பியுள்ளனர். தற்போது மதுரையை சுற்றி ரிங் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றை இணைக்கும் வகையில் முக்கிய இடங்கள் வழியாக வேளாண்மை கல்லுாரி, மாட்டுத்தாவணி, தல்லாகுளம், கோரிப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருமங்கலம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கலாம். இதிலிருந்து விமான நிலையத்திற்கு தனி பாதை அமைக்கலாம். மெட்ரோ ரயில் சேவை வரும் போது பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் மதுரையில் குவியும். பொருளாதார ரீதியாக மதுரை முன்னேற்றமடையும்.
மதுரை விரிவடைந்து விட்டது
டாக்டர். சதீஷ், தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரை கிளை: மதுரையின் பரப்பளவு 50 கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடைந்து விட்டது. நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 75 சதவீதம் மக்கள் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். வாகன பெருக்கத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், சுற்றுச்சூழல் மேம்பாடு அடையவும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் இன்றியமையாதது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அனைத்து கட்சியிடமும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) வலியுறுத்தியது. மெட்ரோ ரயில் திட்டம் வருவதால் நகரில் நெரிசல் குறையும். குறுகிய நேரத்தில் பயண இலக்கை எட்ட முடியும்.
- நமது நிருபர் குழு-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE