நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு, கொரட்டூர் ஏரியை, ஆக்கிரமிப்பாளர்கள் கூறு போட்டு விற்று வருகின்றனர்.
அம்பத்துார் மண்டலத்தில், கொரட்டூர் ஏரி உள்ளது; 590 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரி, அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.ஆனால், அம்பத்துார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளால், ஏரி தொடர்ந்து பாழாகி வருகிறது. இதனால், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், சுகாதார சீர்கேடில் இருந்து, ஏரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏரிக்குள் கழிவுநீர் விடுவதை தடுக்க, பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனாலும், ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமூக ஆர்வலர்களின் புகாரையடுத்து, 2018ம் ஆண்டு இறுதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினரின் அலட்சியத்தால், கடந்தாண்டு முதல், மீண்டும் ஏரிக்குள் புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகின்றன.
தற்போது, தனலட்சுமி நகர், தச்சன் நகர் என, நகர்கள் உருவாகி, அவற்றில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான குடியிருப்போர் நலச்சங்கமும் உருவாகி உள்ளது. வீடுகளுக்கு, மின் வாரிய அதிகாரிகள், எளிதாக, மின் இணைப்புகளை வழங்கி இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.அதனால், ஏரியின் மற்ற பகுதியிலும், புதிய வீட்டு மனைகளை உருவாக்கி, 600 சதுர அடி, 6 முதல், 8 லட்சம் ரூபாய் வரை, கூறு போட்டு விற்கின்றனர்.
மேலும், மனை வாங்க வருவோரின் போக்குவரத்து வசதிக்காக, ஏரிக்குள் கட்டட இடிபாடு கழிவுகளை கொட்டி, சாலை அமைக்கும் பணியும், ஜரூராக நடந்து வருகிறது.தற்போது, 55 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டி, ஏரிக்கான சிறு கரையை, தற்காலிகமாக அமைத்துள்ளனர். அதன் மூலம், 'நாங்கள் ஏரியை ஆக்கிரமிக்கவில்லை' என்கின்றனர்.
அரசு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குள், இன்னும் பல வீடுகள் உருவாகி விடும் என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஆக்கிரமிப்புகள் குறித்து, சென்னை கலெக்டர், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் செய்து உள்ளோம். அவர்கள், இது குறித்து, நேரில் ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அவற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். அவற்றுக்கு, மின் இணைப்பு வழங்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மின் வாரியத்தினர், தாராளமாக மின் கம்பங்களை நட்டு, இணைப்புகள் வழங்கி உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள், அம்பத்துார்.
காற்றில் பறக்கும் விதி
நீர்நிலைகளுக்கு அருகே, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர், பொதுப்பணி, வருவாய், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், கொரட்டூரில் மட்டும், அந்த விதி காற்றில் பறக்கிறது.இங்கு, ஏரிக்கு அருகே பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டும், எந்த துறையிடமும் அனுமதி பெறவில்லை என, தெரியவந்துள்ளது. இது குறித்தும், துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
- நமது நிருபர் -